செய்திகள் :

`இறந்த பிறகும் கூட... பிணைக் கைதிகள் மீது கொடூர `பாலியல் வன்முறை' - இஸ்ரேலிய அறிக்கையில் அதிர்ச்சி

post image

இஸ்ரேல் மீது ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலின்போதும், அதன் பிறகு பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீதும் திட்டமிட்ட, பரவலான பாலியல் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டதாக ஒரு சுதந்திர இஸ்ரேலிய விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

சுமார் 300 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை, வெறும் தாக்குதல் என்பதையும் தாண்டி, மனிதகுலத்திற்கே எதிரான ஒரு உளவியல் போரின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்கிறது அந்த ஆணையம். பாலியல் வன்கொடுமை, பாலியல் சித்திரவதை மற்றும் பொதுவெளியில் அவமானப்படுத்துதல் போன்றவை, பாதிக்கப்பட்ட தனிநபர்களை மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் ஒட்டுமொத்தமாகச் சிதைக்கும் நோக்கில், வலியை உச்சகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

தாக்குதலில் தப்பியவர்கள், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் விடுவிக்கப்பட்ட முன்னாள் பிணைக்கைதிகள் என 430-க்கும் மேற்பட்டோரின் வாக்குமூலங்கள், தாக்குதல் நடந்த இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், ஏன், தாக்குதல் நடத்தியவர்களே படம்பிடித்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அந்தத் தாக்குதலின்போது நடந்த பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே இது மிகவும் விரிவானது எனக் கருதப்படுகிறது.

உயிருடன் இருந்தபோதும், இறந்த பிறகும் தொடர்ந்த வக்கிரம்!

பெண்கள் உயிருடன் இருந்தபோதும், கொல்லப்பட்ட பிறகும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சாட்சிகள் விவரித்துள்ளனர். பாலியல் வன்கொடுமையின்போதோ அல்லது அதற்குப் பின்னரோ பல பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஒருவித வெற்றிச் சின்னம் போல காட்சிப்படுத்தப்பட்டதாகவும் பல சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகை குற்றங்களை, குடும்ப அமைப்புகளையே சிதைத்து, நீண்ட கால உளவியல் பேரழிவை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட `பாலியல் வன்முறை' (kinocidal sexual violence) என புலனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தாக்குதலாளர்களைக் கட்டாயத் திருமணம் செய்துகொள்ளும்படி பெண் கைதிகள் மிரட்டப்பட்ட சம்பவங்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களை பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்திய கொடூரங்கள் எனப் பல குற்றச்சாட்டுகள் அதில் அடுக்கப்பட்டுள்ளன.

பாலியல் வன்முறை
பாலியல் வன்முறை

"அலறல் சத்தம் கேட்கும்... பிறகு நிசப்தம்!"

நோவா இசை விழாவில் உயிர் தப்பிய ராஸ் கோஹன், தன் கண்முன்னே நடந்த கொடூரம் குறித்து பேசியதாக அறிக்கையில், "தீவிரவாதிகள் ஒரு பெண்ணை வாகனத்திலிருந்து இழுத்து... வலுக்கட்டாயமாக அவளது ஆடைகளைக் களைந்து வன்கொடுமை செய்தனர்... பின்னர் அவளைப் பலமுறை கத்தியால் குத்திக் கொன்றனர்... அவள் இறந்த பிறகும் அவளது உடலைத் தொடர்ந்து வன்கொடுமை செய்தனர்" என்று கூறியுள்ளார்.

மற்றொரு சாட்சியான டேரின் கோமரோவ், தனக்கு அருகிலேயே நடந்த தாக்குதல்களின் ஓலங்களைக் கேட்டதை நினைவு கூர்ந்தார். "அந்த அலறல் சத்தங்களை கேட்போம். அது நமக்கு மிக அருகிலேயே நடக்கிறது. அந்த அலறல்களைக் கேட்கிறீர்கள். பிறகு... நிசப்தம் மட்டுமே மிஞ்சுகிறது" என்றார் அவர்.

பெரும்பாலான பாலியல் வன்கொடுமைகள், காசா எல்லையருகே 370-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நோவா இசை விழாவிலும், இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதிகளிலும்தான் நடந்துள்ளன. ஆனால், இந்த வன்முறை அத்துடன் நிற்கவில்லை. காசாவிற்குள் கடத்திச் செல்லப்பட்டு, சுரங்கங்களிலும், ரகசிய வீடுகளிலும் மாதக்கணக்கில் சிறைவைக்கப்பட்டிருந்தபோதும் பாலியல் வன்முறை தொடர்ந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

விடுவிக்கப்பட்ட 17 வயது முன்னாள் பிணைக்கைதியான அகம் கோல்ட்ஸ்டைன், "உங்கள் உடலின் மீதும், அதை எப்படிப் பராமரிப்பது என்பதன் மீதும் உங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாதபோது, சின்ன சின்ன விஷயங்கள்தான் உங்களை உடைத்துவிடும்" என்று சிறைவாசத்தின் உளவியல் பாதிப்பைப் பற்றி விவரித்தார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

நோவா விழாவிலும், கிப்புட்ஸிம் பகுதிகளிலும், ராணுவத் தளங்களிலும் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டதாகவோ அல்லது கேட்டதாகவோ பல சாட்சிகள் கூறியுள்ளனர். பகுதி ஆடையுடனோ அல்லது பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையிலோ கண்டெடுக்கப்பட்ட உடல்கள் பற்றியும் பல வாக்குமூலங்கள் குறிப்பிடுகின்றன. உயிர் தப்பிய ஆண் ஒருவர், தன்னைத் தாக்கியவர்கள் ஒரு "செக்ஸ் பொம்மை" போல நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விசாரணையில் ஆவணப்படுத்தப்பட்ட செயல்கள் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைச் செயல்களாக அமைகின்றன என்று ஆணையம் முடிவு கூறியுள்ளது. "பாலியல் வன்முறை என்பது விதிவிலக்கான கொடூரத்துடன் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட உத்தி என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது" என்கிறார் ஆணையத்தின் நிறுவனர் டாக்டர். கோச்சவ் எல்கயாம்-லெவி. "இரண்டு ஆண்டுகளாக, நாங்கள் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களைக் கேட்டோம், ஆதாரங்களை மிகக் கவனமாக ஆய்வு செய்தோம், மேலும் புரிந்துகொள்ளவே முடியாத பல கொடூரமான விஷயங்களை எதிர்கொண்டோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் விசாரணை அமைப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு ஹமாஸ் தரப்பு இன்னும் பதில் ஏதும் அலிக்கவில்லை.

விஜயபாஸ்கர் கோட்டையில் வேலுமணியின் `ஆள்' - எடப்பாடியால் என்ட்ரி ஆகும் வி.பழனிவேல் பின்னணி என்ன?

அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சிப் பூசலால் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பல அஸ்திரங்களை கையில் எடுத்துள்ளார்.அந்த அடிப்படையில் புதுக்கோட்டை அ.தி.மு.க-வில் ‘பவர்ஃபுல்’ புள்ளியாக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு ச... மேலும் பார்க்க

21 வயது உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது; சந்தேகமிருந்தால் ஆதாரை செக் செய்யுங்க - TASMAC உத்தரவு

21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."தமிழ்நாடு மதுபான சில்ல... மேலும் பார்க்க

தருமபுரி: ஆட்சி மாற்றத்தால் நிகழ்ந்த மாற்றம்! - நகருக்குள் பேருந்துகள் வந்து செல்ல உத்தரவு!

"இனி சேலத்திலிருந்து தருமபுரிக்கு வரும் பேருந்துகள் இரவில் தருமபுரி நகருக்குள் வந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும்" என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரிநக... மேலும் பார்க்க

புதுச்சேரி: 5-வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் ரங்கசாமி! - Album

முதலமைச்சர் ரங்கசாமி பதவியேற்பு விழாமுதலமைச்சர் ரங்கசாமிஅமைச்சர் நமச்சிவாயம்அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்மேடையில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்அரசு உயரதிகாரிகள்முதலமைச்சர் ரங்கசாமிகவர்னர் கைலாஷ்நாதன் ... மேலும் பார்க்க