ஸ்டேஷனில் குற்றங்கள் குறைய ஆடு பலி; சுவற்றில் தெளிக்கப்பட்ட ரத்தம் - சர்ச்சையில்...
`ஆண் குழந்தை ரூ.7-8 லட்சம்.. பெண் குழந்தை ரூ.3-4 லட்சம்'- டெல்லியை அதிரவைத்த குழந்தை கடத்தல் கும்பல்
டெல்லியில் மத்திய பகுதியில் உள்ள பாஹர்கஞ்ச் பகுதியில் அடிக்கடி ஒரு பெண் வேறு வேறு குழந்தைகளுடன் நடமாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அத்தகவலின் அடிப்படையில் அது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். பல நாட்களாக நடத்திய விசாரணையில் அப்பெண் பெயர் ஜோதி என்றும், அவர் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யக்கூடியவர் என்றும் தெரிய வந்தது. உடனே அப்பெண்ணை பிடிக்க போலீஸார் திட்டமிட்டு போலீஸ்காரர் ஒருவரை வாடிக்கையாளராக அப்பெண்ணிடம் அனுப்பினர். போலீஸ்காரர் அப்பெண்ணிடம் பேசி குழந்தையை விலைக்கு வாங்க ஒப்புக்கொண்டார். இதற்காக ரூ.20 ஆயிரம் முன்பணமும் கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு எஞ்சிய பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை டெலிவரி செய்ய வந்த ஜோதியை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஜோதியிடம் விசாரித்த போது ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் ஒரு வயது நிறைவடையாத குழந்தைகளை விலைக்கு வாங்கி வந்து மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானாவை சேர்ந்த குழந்தை இல்லா தம்பதிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

ஜோதியிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி அவரது கூட்டாளிகள் ஷாலு, லலித், பிரதிபா, விபின் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பிரதான வேலை குழந்தைகளை விலைக்கு வாங்குவது, விற்பனைக்கு விலை பேசுவது போன்றவையாகும். பிரதிபாவும், விபினும் குழந்தையை விலைக்கு வாங்க இருந்த நபர் ஒருவரை சந்தித்து பேச சென்றிருந்த நேரம் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தி விற்பனை செய்யப்பட்ட 5 குழந்தைகளை போலீஸார் மீட்டனர். விசாரணையில் ஆண் குழந்தை என்றால் ரூ.7 முதல் 8 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். அதுவே பெண் குழந்தை என்றால் ரூ.3 முதல் 4 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால் ஏழை பெற்றோரிடம் பெண் குழந்தைகளை ஒரு லட்சத்திற்கும், ஆண் குழந்தைகளை ரூ.2 லட்சத்திற்கும் வாங்கியுள்ளனர்.
உடந்தையாக செயல்பட்ட பெண் டாக்டர்
இவர்களின் மோசடிக்கு மேற்கு டெல்லியில் உள்ள ஹீரா மருத்துவமனை முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளது. குழந்தைகளை ஏழைகளிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்து அதனை மறுவிற்பனை செய்யும் வரை இந்த மருத்துவமனையில்தான் வைத்து பராமரித்துள்ளனர். அதோடு அந்த மருத்துவமனையின் டாக்டர் விவேகி குழந்தைகளை விற்பனை செய்ய தேவையான போலி ஆவணங்களை தயாரிப்பது, பிறப்பு சான்றிதழ் போன்றவற்றிற்கு உதவி செய்துள்ளார்.
அதாவது அந்த குழந்தை தங்களது மருத்துவமனையில் பிறந்ததாக காட்டி இருக்கிறார். இது குறித்து போலீஸ் அதிகாரி ரோஹித் சிங் கூறுகையில்,''ஹீரா மருத்துவமனையில் தான் குழந்தை விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. டாக்டர் விவேகி இதில் குழந்தையை வாங்குபவர் மற்றும் கடத்தல்காரர்களிடையே இடைத்தரகராக இருந்து செயல்பட்டுள்ளார்'' என்றார். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், குஜராத்தின் சபர்கந்தா பகுதியைச் சேர்ந்த சபபாய் கமரை (எ) காலியாவை போலீஸார் கைது செய்தனர்.
ராஜஸ்தானின் பாலி மற்றும் குஜராத்தின் சபர்கந்தா ஆகிய பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள தம்பதியிடமிருந்து பச்சிளம் குழந்தைகளை 'விலைக்கு வாங்கி', டெல்லியில் உள்ள டாக்டர் விவேகியின் மருத்துவமனை வழியாகக் குழந்தையில்லாத தம்பதியினருக்கு விற்பனை செய்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் பெற்றோரைத் தொடர்புகொண்டு, அவர்கள் குழந்தைகளைத் தாங்களாகவே விருப்பத்துடன் விற்றார்களா, கட்டாயத்தின் பேரில் விற்றார்களா அல்லது குழந்தைகள் கடத்தப்பட்டார்களா என்பதை அறிய போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.
கடத்தல்காரர்களிடம் அக்குடும்பங்கள் தாங்களாகவே முன்வந்து குழந்தைகளை விற்றிருந்தால், அவர்களும் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படுவார்கள் என்று துணை ஆணையர் சிங் தெரிவித்துள்ளார். இக்கும்பல் ஒரு தம்பதியிடம் இரட்டையர்கள் என்று கூறி வெவ்வேறு பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளை ரூ.9 லட்சத்திற்கு விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.





















