செய்திகள் :

`இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு தங்கம் முக்கிய காரணமா?’ - விளக்கும் பொருளாதார நிபுணர் நாகப்பன்

post image

இந்த ஆண்டில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது வரலாறு காணாத அளவிற்கு ஒரு அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட 90 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது.

ஏன் இந்த வீழ்ச்சி... இது நல்லதா, கெட்டதா என்பதை விளக்குகிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.

``இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம் டாலருக்கு ரூ.90 அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது. அப்போது பொருளாதார வளர்ச்சிக்கும், இந்திய ரூபாயின் மதிப்பிற்கு சம்பந்தம் இல்லையா? இது சாத்தியமா?"

``இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50, ரூ.70 என்று இருந்தபோதிலும் சரி... இப்போது ரூ.90 என வர்த்தகமாகி வரும் நிலையிலும் சரி... இந்திய பொருளாதாரம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

உதாரணத்திற்கு, இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50 ஆக மாறிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபரிமித வளர்ச்சி அடைந்துவிடுமா? அப்படியெல்லாம் 'ஆகாது'.

நாகப்பன்

இந்த நிலை ஏற்பட்டால், ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிடுவார்கள். இது பொருளாதாரத்திற்கு பெரிய அடியாக வந்து விழுந்துவிடும்.

இதனால், இந்தியா பொருளாதாரத்திற்கும், இந்திய ரூபாயின் மதிப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதெல்லாம் இல்லை. ஆனால், இந்திய பொருளாதாரம் வளரும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு குறையாது என்று கூற முடியாது.

இப்போது நாம் பார்க்க வேண்டியது இந்தியாவின் இந்தப் பொருளாதார வளர்ச்சி போதுமானதா... அடுத்து என்ன செய்யலாம் என்பதை தான்."

``ஏன் இந்த இந்திய ரூபாய் வீழ்ச்சி? பிற ஆசிய நாடுகளின் நாணயங்களின் மதிப்பு சரியவில்லையே?"

``அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள வரிகள் தான் இந்திய ரூபாயின் தற்போதைய வீழ்ச்சிக்கு காரணம். இந்த வரியினால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது.

இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றுகின்றனர். இதுவும் இந்திய ரூபாயை இன்னும் சரிய செய்கிறது.

இது மற்ற நாடுகளுக்கு நடக்கவில்லை. அதனால், அந்த நாடுகளின் நாணயங்கள் சரிவை சந்திக்கவில்லை.

ஏற்றுமதி - இறக்குமதி
ஏற்றுமதி - இறக்குமதி

இந்தியா ஏற்றுமதியை விட, அதிகமாக இறக்குமதியை தான் செய்கிறது.

இதனால், இந்தியாவில் இருந்து டாலர்கள் அதிகம் வெளியே செல்கின்றன. ஆனால், வெளியே செல்லுமளவிற்கு, ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு டாலர்கள் வருவதில்லை. இதுவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்."

``சரி... அப்போது இறக்குமதி குறைக்கலாம் தானே? இதனால், சரிவை கட்டுப்படுத்த முடியுமல்லவா?"

``இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில் இறக்குமதிகளை குறைக்க முடியாது.

இந்தியா இறக்குமதி செய்யும் பொருள்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் தங்கமும், கச்சா எண்ணெயும்.

கடந்த ஆண்டை விட, சமீப மாதங்களில் இந்தியா தங்கத்தை மூன்று மடங்கு அதிகம் இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம், எவ்வளவு டாலர்கள் இந்தியாவில் இருந்து வெளியே சென்றிருக்கும்?

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம் என்றால், அதை சுத்திகரிக்க ஆட்கள் தேவைப்படுவார்கள். அங்கே வேலைவாய்ப்பு உருவாகிறது. அடுத்ததாக, சுத்திகரித்து வந்த எண்ணெயை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்துவார்கள். வேலைக்கு செல்வார்கள். சம்பளம் வாங்குவார்கள்... செலவளிப்பார்கள்... உற்பத்தியும் அதிகரிக்கும். - இப்படி பொருளாதாரம் மேம்படும்.

ஆனால், தங்கத்தை மக்கள் வாங்கி வீட்டிலோ, லாக்கரிலோ வைத்து கொள்கிறார்கள். அது வேறு எங்கும் செல்லாது... எந்தப் பயனும் இல்லை. முன்பு 3,000 டாலருக்கு விற்பனையாகி வந்த தங்கம், இப்போது 4,000 டாலருக்கு விற்பனையாகிறது. கூடுதலாக, 1000 டாலர் வெளியே செல்கிறது.

அப்போது தங்கம் இறக்குமதியில் மட்டும் எத்தனை ஆயிரம் டாலர்கள் அதிகம் வெளியே சென்றிருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்."

``இந்திய ரூபாய் வீழ்ச்சி இந்தியாவை என்ன செய்யும்?"

``இது ஏற்றுமதியாளர்களுக்கு குட் நியூஸ். இந்த மதிப்பு சரிவு அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை தரப்போகிறது.

இவர்கள் டாலர்களில் தான் வர்த்தகம் செய்வார்கள். இவர்களுக்கு வரும் டாலரை இந்திய ரூபாயாக மாற்றும்போது, அதிக வருமானம் தானே.

ஆனால், இறக்குமதியாளரை பெரிதும் இந்த வீழ்ச்சி பாதிக்கும். இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது என்று தரவு கூறுகின்றன. இறக்குமதியாளர்கள் அதிக பணம் கொடுத்து இறக்குமதி செய்யும்போது, அந்தப் பொருளை அதிக விலைக்கு தான் விற்பார்கள். இதனால், விலைவாசி உயரும்.

இன்னொரு பக்கம், உலக அளவில் இந்தியா கச்சா எண்ணெய்யின் டாப் இறக்குமதியாளர். இதன் இறக்குமதி செலவு அதிகரிக்கும்போது, போக்குவரத்து செலவு அதிகரிக்கும். இதுவும் விலைவாசியை கூட்டும்."

RBI
இந்திய ரிசர்வ் வங்கி

``இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது? அவர்கள் இப்போது என்ன செய்தால் நல்லது?"

``இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலர்களை அடிக்கடி விற்று எங்களது வருமானத்தைப் பாதிக்கின்றனர் என்று ஏற்றுமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மற்றொரு பிரிவினரோ, இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்ய வேண்டுமென்றால், சரிவும் இல்லாமல், அதிக உயர்வும் இல்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

ஒரேடியாக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.95-ஐ தொட்டால், அது பொருளாதாரத்திற்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதன் வேகத்தை மட்டுப்படுத்துவதை இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயம் செய்ய வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி எப்போதுமே இந்திய ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்துவது அவசியமில்லை. இதன் ஏற்ற, இறக்கங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படும் போது மட்டும், இதில் தலையிட வேண்டும்".

"நிதியமைச்சர் ஒன்று சொல்கிறார்; வங்கிகள் ஒன்று சொல்கின்றன" - கடன் தொகை குறித்து விஜய் மல்லையா

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, ராஜஸ்தான் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் முராரி லால் மீனா இந்தியாவிலிருந்து தப்பியோடிய பொரு... மேலும் பார்க்க