TNPSC குரூப் 2, 2A தேர்வு ஒத்திவைப்பு; "ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்!"- ...
இளைஞரணியினருக்கு சீட் கேட்டு கோரிக்கை வைத்த உதயநிதி; முதலமைச்சர் கொடுத்த பதில் என்ன?
விருதுநகரில் திமுக-வின் இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, தென் மண்டல அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய முதலைமச்சர் மு.க.ஸ்டாலின், “ விருதுநகர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கல்விக் கண் திறந்த காமராசர்தான். காமராசர் என்று சொன்னால் மதிய உணவு திட்டம்போல் திராவிட மாடல் ஆட்சி என்றால் காலை உணவு திட்டம்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் கத்தி நம் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை அழித்தால் நமது அடையாளத்தை அழித்து விடலாம் என்று பாஜக நினைக்கிறது. நீட்டை கொண்டுவந்து நம்மை படிக்கவிடாமல் பழைய நிலைக்கு கொண்டு செல்ல பாஜக நினைக்கிறது.
தமிழ் மொழிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் அதை போராடி தடுத்துள்ளோம். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லாத நிலைதான் முதலில் இருந்தது. வாய்ப்புகளை மறுத்த அநீதியை சமூக நீதியால் வென்றோம்.

மாநில கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்பதை இந்தியாவில் முதலில் நிகழ்த்திக் காட்டியது திமுகதான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரத்தை பெற்று தந்துள்ளோம்.
மாநில கட்சிகளே இருக்கக் கூடாது என்று பாஜக செயல்பட்டு வருகிறது; பாஜகவினால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு. இன்னும் பல நூற்றாண்டு காலத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது.
உதயநிதி ஸ்டாலின் பேசும் போது சொன்னார் இளைஞரணிக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று. அவர் ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைக்கிறார். ஒன்றை சொல்கிறேன் என்னுடன் இளைஞரணியில் இருந்தவர்களில் தற்போது 10 பேர் அமைச்சர்கள், 24 எம்.எல்.ஏ-க்கள், 4 எம்.பி-க்கள் என எல்லோரும் பதவியில் இருக்கின்றனர். இப்படி இருக்கும் போது இளைஞரணியை பற்றி நான் மறப்பேனா?

மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காத எடப்பாடி பழனிசாமி தற்போது என்டிஏ பழனிசாமியாக மாறி நிற்கிறார். நானும் ரெளடி தான் என்பது போல நான் தான் கூட்டணிக்கு தலைமை என்று புலம்பிக் கொண்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பட்ஜெட்டில் மத்திய அரசு நமக்கு கொடுத்தது ஜீரோ. நாமும் அதை சட்டமன்ற தேர்தலில் திருப்பி கொடுப்போம் ”என்றார்















