செய்திகள் :

உங்கள் ராசிப்படி சொந்த வீடு யோகம் எந்த வயதில் அமையும்? விளக்கங்கள் - பரிகாரங்கள்!

post image

சொந்த வீடு என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும். சிலருக்கு மிக எளிதில் சட்டென சொந்த வீடு அமைந்துவிடும். ஆனால் வேறு சிலருக்கோ, அவர்கள் எவ்வளவு பகிரத பிரயத்தனம் செய்தாலும் எளிதில் சொந்த வீடு அமையாது. காரணம் என்ன? ஜோதிடம் என்ன சொல்கிறது தெரியுமா?

சொந்த வீடு

ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டைக் குறிப்பிடும் இடம் சுக ஸ்தானமாகிய 4-வது இடமாகும். இந்த இடத்துக்கு அதிபதியாகத் திகழும் கிரகம், செவ்வாய், சுக்ரன் ஆகியோரின் நிலை ஜாதகத்தில் பலமாக இருந்தால், அந்த ஜாதக்கருக்குச் சொந்த வீடு எளிதில் அமைந்து விடும்.

அதேநேரம், குறிப்பிட்ட இந்தக் கிரகங்கள் பகை, நீசம் பெற்றிருந்தாலும் மறைவு ஸ்தானங் களில் இருந்தாலும்... அந்த ஜாதகர் என்னதான் செல்வந்தராக இருந்தாலும், சொந்த வீடு என்பது அவருக்குக் கனவாகவே இருக்கும். ஆக, எந்தக் கிரகம் பலமற்று உள்ளதோ, அதற்கேற்ப பரிகாரம் செய்து பலன் பெறலாம். ராசிப்படி சொந்த வீடு எப்போது அமையும் என்பது குறித்தும் ஜோதிட சாஸ்திரம் விவரிக்கிறது. அதுபற்றியும் விளக்கமாக அறிவோம்.

12 ராசிக்காரர்களுக்கும் சொந்த வீடு யோகம் எப்படி

மேஷம்:

இந்த ராசிக்காரர்கள், செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். செவ்வாய் பூமிக் காரகன் ஆவார். எனினும், இந்த ராசிக்காரர்களில் பெரும்பாலானோருக்கு 42 வயதுக்கு மேல் சொந்த வீடு யோகம் அமையும். ஒருவேளை, தசா புக்தியும் வலுவான பூர்வ புண்ணிய ஸ்தானமும் கைகொடுத்தால், அதற்கு முன்னதாகவே சொந்த வீடு அமைந்துவிடும். இவர்களுக்குச் செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகியோரால் சொந்த வீடு அமைவதில் தடைகள் ஏற்படலாம்.

இந்த ராசியைச் சேர்ந்த அன்பர்கள், செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் கோயில்களுக்குச் சென்று, முருகனுக்கும் அங்காரகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வைத்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் முலம் சொந்த வீடு வாங்குவதில் இருக்கும் தடைகள் நீங்கும்.

ரிஷபம்:

சுக்ரனை ராசியதிபதியாகக் கொண்டவர்கள். இவர்களுக்கு, மனதுக்கேற்ற சொந்த வீடு எளிதில் வாய்த்துவிடும். எனினும், சிலருக்கு, அசுரகுருவான சுக்ரனின் நிலை பாதகத்தை உண்டு பண்ணலாம். வாழும் காலத்திலேயே வீட்டை விற்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே, இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைவர் பெயரில் வீடு வாங்கலாம். அதனால் யோகம் கூடிவரும்.

பெரும்பாலும் 30 வயது அல்லது அடுத்த மூன்று வருடங்களுக்குள் சொந்த வீடு கிடைக்க வாய்ப்பு உண்டு. இவர்கள், ஒருமுறை குடும்பத்துடன் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சிவாலயங்களில் சூரியபகவானுக்குச் செம்பருத்தி மலர்களால் அர்ச்சனை செய்து, பசுவுக்குக் கோதுமை கொடுப்பதன் மூலம் சொந்த வீடு அமையும்.

மிதுனம்:

மிதுன ராசிக் காரர் களுக்குப் புதன் ராசியாதிபதி. இவர்களுக்கு வீடு அமைவது சற்றுக் காலதாமதமாகும். சொல்லப்போனால் இவர்களில் பலருக்கும் சொந்த வீடு வாங்குவதில் நாட்டம் அதிகம் இருக்காது. 45 வயதுக்கு மேல் சொந்த வீடு அமையும். மிதுன ராசியில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி, பச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கலாம். ஒருமுறை, குடும்பத்துடன் திருப்பதி பெருமாளை தரிசித்து வருவதால், சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.

கடகம்:

இந்த ராசிக்காரர்களில் பெரும் பாலானோர், பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளவர்கள். சொந்தமாக, சுய உழைப்பில் சொந்த வீடு வாங்கும் யோகம் 50 வயதை நெருங்கும் போது நிறைவேறலாம். விரைவில் சொந்த வீடு அமைய, சந்திரனைத் தலையில் சூடியிருக்கும் சிவபெருமானை வழிபட வேண்டும். அதேபோல் கடக ராசியில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானை வழிபடுவதும் விசேஷம். மேலும், பசு மாட்டுக்கு ஊறவைத்த மொச்சைப் பயறை உண்ணக் கொடுக்கவேண்டும். இவ்விதம் ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்து வந்தால், விரைவில் சொந்த வீடு அமையும் என்பார்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு, சொந்த வீடு விஷயத்தில் பூர்வபுண்ணிய பலன் அதிகம் உண்டு என்பார்கள். இவர்களில் சிலருக்கு, பிறக்கும் போதே சொந்த வீடு அமைப்பு இருக்கும். இல்லையென்றாலும் வாழ்க்கைத் துணை வர் வழியில் சொந்த வீடு அமையலாம். சொந்த உழைப்பில் வீடு வாங்கவேண்டும் எனில், 60 வயதுக்குமேல் அமையும். அதன் பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்கும் யோகமும் கைகூடும். இவர்கள், செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி அல்லது கிருத்திகை நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் திருச்செந்தூர் - செந்திலாண்டவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.

கன்னி:

இந்த ராசிக்காரர்களில் பெரும்பாலானோர், கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தனிக்குடித்தனம் தனியே வீடு எனும் சிந்தனை இல்லாமல் இருப்பார்கள். ஒருவேளை, சொந்த வீடு வாங்க வேண்டும் நினைத்தால் 25 வயதுக்குமேல் எப்போது வேண்டுமானால் இவர்களால் சொந்த வீடு வாங்க இயலும். வியாழக் கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சொந்த வீடு அமைவதில் ஏற்பட்டுள்ள தடைகள் விலகும்.

செவ்வாய் பகவான்

துலாம்:

இந்த ராசிக்காரர்கள் சொந்த வீடு வாங்கவேண்டும் என விரும்பினால் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இவர்கள் முயற்சி செய்தால், 36 வயது முதல் 41 வயதுக்குள் இவர்களுக்குச் சொந்த வீடு அமைய வாய்ப்புண்டு. அப்படி வீடு அமையும்போது, பூர்விகமான சொந்த மனையிலோ, வாழ்க்கைத் துணைவர் மூலம் கிடைக்கும் மனையிலோ வீடு கட்டுவார்கள். இந்த ராசியினர், சனிக்கிழமைகளில் ஆஞ்ச நேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால், விரைவில் சொந்த வீடு அமையும்.

விருச்சிகம்:

புறநகர்ப் பகுதிகளில் அமைய வாய்ப்பு உண்டு. 45 வயதுக்கு மேல் சிற்சில தடைகள், சிரமங்களோடு சொந்த வீடு அமையும். வாழ்க்கைத் துணைவரின் பெயரில் வீடு அல்லது சொத்து வாங்குவது சிறப்பு. இவர்கள், ஒருமுறையேனும் வியாழக்கிழமைகளில் திருச்செந்தூர் சென்று முருக னைத் தரிசித்து வழிபடுவது அவசியம். செவ்வாய்க்கிழமையன்று சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்ய வேண்டும். தொடர்ந்து 9 வாரங்கள் செய்தால், சொந்த வீடு அமைவதில் உள்ள தடைகள் நீங்கும்.

தனுசு:

இவர்கள் சிறு வயதிலேயே சொந்த வீட்டில் விளையாடும் பாக்கியம் பெற்றவர்கள். குருபகவானின் திருவருளால் இந்தப் பாக்கியம் இவர்களுக்குக் கிடைக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள். திருச்சிக்கு அருகிலுள்ள மண்ணச்சநல்லூர் பூமிநாதரை வழிபட்டு வரலாம். வியாழக் கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதன் மூலம் சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் உண்டாகும்.

மகரம்:

நவ கிரகங்களில் நிலத்துக்கு உரியவர் செவ்வாய் பகவான். இவர் உச்சம் அடையும் ராசி மகரம். ஆகவே, இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். இந்த ராசியினர் கட்டிய வீடு இரண்டு தலைமுறைகளையும் தாண்டி நிலைத்திருக்குமாம். 50 வயதை நெருங்கும்போது சொந்த வீடு வாங்க வாய்ப்பு உண்டாகும். இவர்கள் மனைவி, பிள்ளைகள் பெயரில் சொத்துகள் வாங்குவதால் நன்மைகள் உண்டு. தினமும் திருச்செந்தூர் முருகன் படத்துக்கு மலர்கள் சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம். செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் பகவானுக்கு அபிஷேக - அர்ச்சனை செய்து வழிபடுவது விசேஷம்.

கும்பம்:

33 வயதுக்கு மேல் சொந்த வீடு அமையும். பெரும்பாலும் சகோதரர்களுடன் சேர்ந்து மனை வாங்கி, ஆளுக்கொரு பாகத்தில் வீடு கட்ட வாய்ப்பு உண்டு. இவர்களில் சிலருக்கு வீட்டு வாடகை மூலமும் வருமானம் வரும். இவர்கள் வெள்ளிக் கிழமை களில் முருகனுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபடுவதுடன், செவ்வாய் பகவானுக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் இப்படிச் செய்தால், விரைவில் சொந்த வீட்டில் சகல வசதிகளுடன் வசிக்கும் யோகம் ஏற்படும்.

மீனம்:

இவர்கள் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு 25 வயதை நெருங்கும்போது, வீடு அமைய வாய்ப்பு உண்டு. இல்லையென்றாலும் மத்திம வயதுக்குள் மனதுக்குப் பிடித்தமான வீட்டில் வாழும் பாக்கியம் உண்டாகும். இந்த ராசியில் பிறந்த வர்கள் புதன் கிழமையன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளுக்குத் துளசியாலும் தாயாருக்கு மஞ்சளாலும் அர்ச்சனை செய்யவேண்டும். தொடர்ந்து ஐந்து புதன் கிழமைகள் இவ்வாறு செய்து வழிபட்டால், `சொந்த வீடு’ கனவு நிறைவேறும்.

உங்கள் வீட்டில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்க... பண வரவை ஈர்க்கும் 15 எளிய வாஸ்து பரிகாரங்கள்!

நல்ல ஆரோக்கியமும் செல்வ சுபிட்சமும் நிறைந்த வீடுதான் ஆனந்தம் நிறைந்த வீடாக இருக்கும். ஆனால், சிலரது வீடுகளில்... காரணம் அறியாதமுடியாதபடி இறுக்கம் சூழ்ந்திருக்கும். நன்கு உழைத்து லாபம் ஈட்டினாலும், வீட... மேலும் பார்க்க

செவ்வாய் தோஷ பாதிப்பு கல்யாணத்துக்கு மட்டும்தானா? கவனிக்கவேண்டிய வேறு விஷயங்கள் என்னென்ன?

பெற்றோர்களின் பெருங்கனவு பிள்ளைகளின் கல்யாணமாகத்தான் இருக்கும். வாரிசுகளுக்கு நல்லபடியே கல்யாணம் செய்து வைத்து விட்டால், பெரும் கடமையை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவர்களுக்கு. ஆனால், குறிப்பிட்ட சிலருக்க... மேலும் பார்க்க

வார ராசிபலன் | 24.8.26 முதல் 30.8.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் August 24 th to August 30th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, h... மேலும் பார்க்க

பஞ்சாங்கக் குறிப்புகள் ஆகஸ்ட் 24 முதல் 30 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் மேலும் பார்க்க

நட்சத்திரப் பலன்கள் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள்நட்சத்திரப் பலன்கள்நட்சத்திரப் பலன்கள்நட்சத்திரப் பலன்கள் மேலும் பார்க்க