"கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால்.!" - முதல்வர் விஜய்யின் அறிவிப்பும் MLA...
'எனக்கு ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் பிரிந்து சென்றதால் கருவாற்றா பகுதியில் மறுமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு புதிய வீடு கட்டும் பணிக்காக சிவன்குட்டி குடும்பத்தினருடன் கருவாற்றாவில் வாடகை வீட்டில் தங்கி வந்தனர்.
சிவன்குட்டியின் மகளின் மகளான 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஏற்கெனவே பரவூரில் இருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு மாணவனை சிறுமி காதலித்துள்ளார். காதலனுடன் பேச சிறுமிக்கு ஐபோன் வாங்கவேண்டும் என ஆசை வந்துள்ளது. சிறுமியின் காதலனுக்கு பைக் வாங்கவேண்டும் என்ற ஆசை இருந்துவந்துள்ளது. அதற்கான பணத்தை எப்படி திரட்டுவது என யோசித்துள்ளனர்.
அப்போது, சிறுமி தனது வீட்டில் உள்ள 6 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து ஐபோன் மற்றும் காதலனுக்கு பைக் வாங்கலாம் என எண்ணினார். இதற்கிடையே சிறுமியின் தாய் பிரசவத்திற்காக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன் பாட்டியும் சென்றிருந்ததால், சிவன்குட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார் சிறுமி.

தனது திட்டத்தின்படி நகை இருக்கும் பீரோ மற்றும் வீட்டின் அமைப்பை வீடியோ கால் மூலம் காதலனுக்குக் காண்பித்துக் கொடுத்தார். மேலும், வீட்டுக்குள் எப்படி நுழைவது என்பதுபோன்ற திட்டங்களையும் வகுத்துக்கொடுத்துள்ளார் சிறுமி. இதையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பரவூரிலிருந்து மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிறுமியின் காதலனும் அவனது நண்பர்களான இரு சிறுவர்களும் ஹரிப்பாடு வந்தடைந்தனர்.
இரவு 10.45 மணிக்கு ஆட்டோவில் சிவன்குட்டியின் வீட்டிற்குச் சென்றனர். வீட்டின் பின்புறமிருந்த எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் துவாரத்தின் வழியாக ஒரு சிறுவன் உள்ளே புகுந்து பின்பக்க கதவைத் திறக்க, மற்ற இருவரும் உள்ளே நுழைந்தனர். அவர்களை சிவன்குட்டி தடுக்க முயன்றபோது, அவரைத் தாக்கி கீழே தள்ளி, வாயில் துணியைத் திணித்து, துணியைக் கொண்டு கை, கால்களைக் கட்டிக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்தனர். பின்னர் பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு, நள்ளிரவு 1.30 மணி வரை வீட்டிலேயே தங்கியிருந்த சிறுவர்கள், அதிகாலை ரயிலில் பரவூருக்குத் தப்பிச்சென்றனர்.

கொள்ளையடித்ததில் 2 கிராம் நகையைத் தரகர் மூலம் ரூ.16,000-க்கு விற்பனை செய்துவிட்டு சிறுவர்கள் தலைமறைவாகினர். கொலை நடந்த பிறகு இரண்டு நாட்கள் நண்பர்களுடன் தங்கியிருந்த சிறுமி, கடந்த திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்து, தாத்தாவைக் காணவில்லை என்றும் வீடு பூட்டப்பட்டிருப்பதாகவும் அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடினார்.
போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமி முன்னுக்குப் பின் முரணான பதிலளித்தார். போலீஸாரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து சிறுமி நடந்த உண்மையை கூறினார். அதிலும், தாத்தாவை காதலன் உள்ளிட்டோர் தாக்கி, கொலை செய்வதை 13 வயது பேத்தி வீடியோ கால் வழியாக நேரடியாகப் பார்த்துள்ள அதிர்ச்சி தகவலும் போலீஸ் விசாரணையில் வெளியானது.
இதையடுத்து, சிறுமி, சிறுமியின் காதலன், காதலனின் நண்பர்கள் இருவர் என நான்கு பேரையும் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஆலப்புழா எஸ்.பி டி.கே. விஷ்ணு பிரதீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பேத்திக்கு ஐபோனும், அவரது காதலனுக்கு பைக்கும் வாங்குவதற்காக வீட்டில் இருந்த 6 பவுன் நகையைத் திருடவே இக்கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான உள் ரத்தப்போக்கு ஏற்பட்டதே சிவன்குட்டியின் மரணத்திற்கு காரணம் என உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதேசமயம், தாத்தா தன்னிடம் தவறாக நடந்துகொண்டதால் அதற்குப் பழிவாங்கவே காதலனிடம் கூறியதாகச் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அதுகுறித்தும் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.



















