'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' - ஈரான் மக்களுக்கு காஷ்மீர்...
"என் அப்பாவின் ஆதரவு ஒரே நாளில் கிடைக்கவில்லை"- திருநங்கையாக மாறிய கிரிக்கெட் வீரர் மகள் நெகிழ்ச்சி!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர், தனது வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாக பாலின மாற்று அறுவை சிகிச்சை (gender affirming surgery) வெற்றிகரமாக தாய்லாந்தில் நிறைவு பெற்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில், அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் நிலையில், தனது அப்பா அருகில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அப்பதிவில், "இந்தப் பயணம் என்னுடைய தனிப்பட்ட மாற்றமாக மட்டுமல்லாமல், எனது குடும்பத்தாருக்கும் உணர்ச்சிமிக்க, சவாலான ஒன்றாக இருந்தது. என்னை உடனடியாகப் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. அதற்கு காலம், பொறுமை மற்றும் பரஸ்பர புரிதல் தேவைப்பட்டது. இந்த பயணம் எனக்கு மட்டுமல்லாமல் என் குடும்பத்துக்கும் கடினமான ஒன்றாக இருந்தது.
என்னை அவர்கள் புரிந்துகொள்வதும், ஏற்றுக்கொள்வதும் உடனடியாக நடக்கவில்லை. அதற்கு நேரம் தேவைப்பட்டது. அந்த இடைவெளியில் குழப்பங்களும், பல கேள்விகளும் இருந்தன. ஆனால் அந்த அனுபவங்களே எங்களை வளரச் செய்தது. இன்று, என் மனதில் நன்றியுணர்வைத் தவிர வேறொன்றும் இல்லை. என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தில் என் அப்பா என்னுடன் இருப்பது, எல்லாவற்றுக்கும் மேலான அர்த்தமுள்ளதாக உள்ளது.

இந்த அறுவை சிகிச்சை என் வாழ்க்கையின் மிகப்பெரிய முன்னேற்றமாகும். என் அப்பா என்னுடன் இருந்ததால் தான் இது சாத்தியமானது. வளர்ச்சிக்கும், அன்புக்கும், ஏற்றுக்கொள்ளுதலுக்கும் காலம் தேவைப்படுகிறது. இதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் அனயா பங்கர். பிறப்பில் ஆணாக இருந்த இவரின் முன்னாள் பெயர் ஆரியன்.
தன் அப்பாவைப் போல கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவர், மும்பை 16 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் மும்பை அணிக்காவும், 19 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் புதுச்சேரி அணிக்காவும், 23 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகத் தன்னைத் திருநங்கையாக அடையாளப்படுத்திக்கொண்டு, தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் இருந்தார்.

2023-ம் ஆண்டு ஹார்மோன் மாற்று சிகிச்சை (hormone replacement therapy) தொடங்கியபோது, அதுகுறித்த தனது அனுபவங்களையும் மாற்றங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இந்த சிகிச்சை அவரது உடல் நிலை மற்றும் கிரிக்கெட் விளையாடும் திறனில் மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அளித்த நேர்காணலில், தனது பாலின அடையாளப் பயணத்தின் போது சந்தித்த சவால்கள், சமூகத்தின் எதிர்வினைகள், ஆதரவு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து அனயா திறந்த மனதுடன் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.













