செய்திகள் :

எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்! | முதல் களம் - 03

post image

`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் சில தருணங்கள், வழக்கமான தேர்தல் வெற்றிகளைக் கடந்து, ஒரு தலைமுறையின் பயணத்தை முற்றாக மாற்றிவிடும்.

மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் — எம்.ஜி.ஆர்

அந்த வகையில் ஒற்றை நபராக மட்டுமல்ல; ஒரு புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கப்புள்ளியாகவும் மாறினார் எம்.ஜி.ஆர்.

அவரின் முதல் சட்டமன்றத் தேர்தல் வெற்றி, அவருக்கான வெற்றியாக மட்டுமல்லாது, இருபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியைத் தகர்த்தெறிந்து, திராவிட அரசியலின் உச்சத்தை உருவாக்கிய திமுகவின் மகத்தான வெற்றிக்குத் துணை புரிந்ததாகவும் அமைந்தது. ஆம், 1967-ல் நடைபெற்ற அந்தத் தேர்தலில்தான் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியைப் பிடித்து, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது. 

எம்.ஜி.ஆர், கலைஞர்

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், அண்ணாவை சென்று சந்தித்த இளம் திமுக தலைவர்கள் சிலர், அவருக்கு மாலை அணிவிக்க முயன்றபோது, “இந்தத் தேர்தல் வெற்றிக்காக யாருக்காவது மாலை அணிவிக்க வேண்டுமென்றால், அது எம்.ஜி.ஆருக்குதான்  அணிவிக்கப்பட வேண்டும்" என அண்ணா கூறியதாக அப்போது ஒரு பேச்சு உண்டு. அண்ணா அப்படிச் சொன்னது உண்மையோ இல்லையோ, திமுகவின் வரலாற்று வெற்றியில் முக்கியப் பங்காற்றியவர், அந்நாளைய தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவரும், பின்னாளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்தவருமான எம்.ஜி.ஆர் என அழைக்கப்பட்ட எம்.ஜி. ராமச்சந்திரன் என்பதை திமுகவினரும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வார்கள்.

தமிழ்நாட்டின் அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த 1967 தேர்தலின்போது என்ன நடந்தது, எம்.ஜி.ஆர் திமுகவுக்கு வந்தது எப்படி,  முதன்முதலாக அவர் போட்டியிட்ட தொகுதி எது, அந்தத் தேர்தலில், எம்.ஜி.ஆரால் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்ல முடியாமல் போனது ஏன், பிரசாரத்துக்குச் செல்லாமலேயே அவர் வெற்றி பெற்றது எப்படி, திமுக பெற்ற மாபெரும் வெற்றிக்காக எம்.ஜி.ஆரை அண்ணா சிலாகித்துப் பேசியது ஏன்...? விடைகளைத் தெரிந்துகொள்ள, 1960-களின் ஃப்ளாஷ்பேக்குகளுக்குள் செல்லலாம். 

எம்.ஜி.ஆர்

1950-களின் இறுதி மற்றும் 1960-களின் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அரசியல் களம், ஓர் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்தது. விலைவாசி உயர்வு, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கான பஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் பண்ணையார்தனமான அரசியல் அணுகுமுறை போன்றவை  காங்கிரஸ் ஆட்சி மீது, மக்களிடையே சோர்வையும் சலிப்பையும் ஏற்படுத்தி இருந்தன. இன்னொருபுறம் இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டுசென்ற திமுகவின் எழுச்சி, உச்சத்தில் இருந்தது.

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், காங்கிரஸின் அகம்பாவம், சமூக நீதி, தமிழ்மொழி அடையாளம், சாதி–மத பாகுபாடுகளுக்கு எதிரான தத்துவங்கள், மாநில உரிமைகள் சார்ந்த முழக்கங்கள் போன்றவை, மக்களை திமுகவை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்தன. அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், நாவலர் போன்ற சக்திவாய்ந்த பேச்சாளர்களும்  தலைவர்களும், திமுகவுக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார்கள். 


ஆனால், திமுகவுக்கு ஒன்றே ஒன்று மட்டும் இன்னும் ஒரு குறையாகவே இருந்தது. அது - பொதுமக்களின் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடிக்கும் அளவுக்கான பிரபல முகம். அதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நுட்பமாக கண்டு உணர்ந்த கருணாநிதிதான், எம்.ஜி.ஆரை திமுகவுக்கு அழைத்து வந்தார். மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால கறுப்பு வெள்ளை படங்களின் வெற்றிக்கு, கருணாநிதி தீட்டிய திரைக்கதை வசனங்கள் பெரும் பங்களிப்பை அளித்தன. அதன் அடிப்படையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஆழமான நட்பும், தொடர்ச்சியாக இடம் பெற்ற கலந்துரையாடல்களும்தான் எம்.ஜி.ஆரை அண்ணாவை தலைவராக ஏற்றுக்கொண்டு, திமுக பக்கம் இழுத்து வந்தது.

எம்.ஜி.ராமச்சந்திரன்

அந்த வகையில்,எம்.ஜி.ஆர், 1953-லிருந்தே திமுகவின் பிரசாரக் கருவூலமாக வலம் வரத் தொடங்கினார். ஏழைகளின் காப்பாளன், அநீதிக்கு எதிரான போராளி போன்ற அவர் மீதான திரைப்பட பிம்பம் திமுகவின் கொள்கைகளுடன் ஒத்துப்போனது. அவரது பல்வேறு படங்கள் திமுக பிரசாரத்திற்கு உதவின. திமுகவுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டியதில், எம்.ஜி.ஆரின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை அண்ணாவே நேரடியாக கண்டு உணரும் சில சந்தர்ப்பங்களும் அவருக்கு வாய்த்தன. 

1964-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு சம்பவம் இது. அண்ணா, தனது கட்சி செயல்வீரர்கள் இருவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்றபோது, காரில் பறக்கும் திமுகவின் கொடியைக் கண்ட சில உள்ளூர்வாசிகள், அந்த வாகனத்தை நிறுத்தினர். காரின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த அவர்கள், வெள்ளைச் சட்டையில் வீற்றிருந்த அண்ணாவைப் பார்த்து, அவர் யார் என்பதை அறியாமலேயே,  

“ஐயா… நீங்க எம்.ஜி.ஆர் கட்சியா?" எனக் கேட்டுள்ளனர். அண்ணா – எம்ஜிஆரின் அரசியல் ஆசான். அந்த கேள்வி அவரைப் புன்முறுவல் பூக்க வைத்தது. உடன் வந்த செயல்வீரர்களை நோக்கி சிரித்தபடி,

“பாருங்க… இதுதான் எம்.ஜி.ஆரின் மக்கள் ஈர்ப்பு சக்தி" என அண்ணா பெருமையுடன் கூறியதாக திமுக-வின் வரலாற்று பக்கம் ஒன்று சொல்கிறது. 

 அடுத்ததாக 1966-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. சென்னை, விருகம்பாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் திமுக மாநாட்டு மேடையில் இருந்த எம்ஜிஆர், கட்சிக்காக 3 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். அந்த ஆண்டுகளில் ரூ.3 லட்சம் என்பது “அதிர்ச்சி” அளிக்கும் அளவுக்குப் பெரிய தொகை.

ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பின் உரையாற்ற மைக்கைப் பிடித்த அண்ணா, கூட்டம் முழுவதும் கவனமாகக் கேட்டு கொண்டிருக்கும் நிலையில், “எம்ஜிஆர் இந்த மூன்று லட்சத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்ளலாம். எங்களுக்கு அதைவிட முக்கியமானது — இவரால் நமக்கு கிடைக்கப் போகும் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாக்குகள்.”

- இந்த இரண்டு நிகழ்வுகளையும், தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆர் உருவாக்கிய பேரலைக்கும், அண்ணா அதனை உணர்ந்து கொண்டிருந்த தொலைநோக்குத் திறனுக்குமான வரலாற்றுப் பதிவுகளாக பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர்

இத்தகைய சூழலில்தான், 1967-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியாகி, தமிழக அரசியல் களம் பரபரப்பாகியது. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் எம்.ஜி.ஆரும் இடம்பெற்றார். அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி சென்னை பரங்கிமலை தொகுதி.

பிரசாரம் அனல் பறந்துகொண்டிருந்த நிலையில், தேர்தலுக்கு  ஒரு மாதம் முன்பு, அதாவது ஜனவரி 12 அன்று, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அன்றைய தினம் எம்.ஜி.ஆரின் சென்னை ராமாபுரம்  வீட்டுக்கு, நடிகர் எம்.ஆர். ராதா மற்றும் தயாரிப்பாளர் கே.கே. வாசு வந்தனர். 'பெற்றால்தான் பிள்ளையா' என்கிற திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது தகராறு ஏற்பட்டது.

திடீரென எம்.ஆர்.ராதா துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரின் இடது காதருகே இரு முறை சுட்டார். ஒரு குண்டு கழுத்தில் பாய்ந்தது. ராதா தானும் சுட்டுக்கொண்டார். இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எம்.ஜி.ஆரின் குரல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. 

செய்தி பரவியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு முன்பாக திரண்டனர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக்கொள்ள, திரையுலக வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளானது. இன்னொருபுறம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தெருவில் அழுது திரண்டனர். ஊரெங்கும் பதற்றம். கடைகள் மூடப்பட்டன. எம்.ஆர்.ராதாவின் வீடு தாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நலம்பெற வேண்டி அவரது ரசிகர்கள் கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்த அன்று மாலையே அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்களும், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு விரைந்தனர். அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தனர். ஆபத்து கட்டத்தை எம்.ஜி.ஆர் தாண்டிவிட்டதாக மருத்துவர் கூறியதைக் கேட்ட பின்னர்தான் அண்ணாவும் அவருடன் வந்திருந்த திமுக இளம் தலைவர்களும் நிம்மதி அடைந்தனர். ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். 

எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும்

எம்.ஜி.ஆரால், அவர் போட்டியிடும் பரங்கிமலை தொகுதிக்குக் கூட பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை. ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போனது. துப்பாக்கிச் சூடு நிகழ்வு, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே மாபெரும் அனுதாப அலையை உருவாக்கியது. திமுக தலைமையும் இதை திறம்பட பயன்படுத்திக் கொண்டது. கழுத்தில் பேண்டேஜ் கட்டுடன், கைகளைக் கூப்பி வணங்கும் எம்.ஜி.ஆரின் மருத்துவமனை படுக்கை புகைப்படம், தமிழகம் முழுவதும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது.

இது எம்.ஜி.ஆர் மீது மட்டுமல்லாது, திமுகவுக்கும் மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி, திமுகவின் தேர்தல் வெற்றிக்கு கூடுதல் பங்களிப்பை அளித்தது. மருத்துவமனையில் படுத்துக்கொண்டே பரங்கிமலை தொகுதியில் 54,106 வாக்குகள் பெற்று, எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் டி.எல். ரகுபதி 26,432 வாக்குகளுடனும், ஜனசங்க வேட்பாளர் கே. காசிநாதன் 613 வாக்குகளுடனும் தோற்றனர். வெற்றி எம்.ஜி.ஆருக்கு மட்டுமா? அண்ணா தலைமையிலான திமுக கூட்டணி, 234 இடங்களில் 179 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் வெறும் 51 இடங்களுடன் தோற்றது.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்...
இந்தியாவில் முதல்முறையாக ஒரு பிராந்தியக் கட்சி, தேசியக் கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது. காமராஜர், பக்தவத்சலம் போன்ற ஜாம்பவான்கள் தோல்வியைத் தழுவினர்.

சட்டமன்ற உறுப்பினரான எம்.ஜி.ஆர் , பின்னர் அதிமுகவைத் தொடங்கி மூன்று முறை முதலமைச்சரானார். இன்றும் எம்.ஜி.ஆரின் அந்த மருத்துவமனை புகைப்படம்,  1967 தேர்தலின் அரசியல் அடையாளமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது!

(தொடரும்.!)

”ஒரு கைக்கு 5 விரல்களே போதும்; விஜய்யின் த.வெ.க ஆறாவது விரல்.!”– ராஜேந்திர பாலாஜி கிண்டல்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இதுவரை நடந்து முடிந்த அரசியலில் பார்த்தால் ஒவ்வொரு நேரமும் தி.மு.கவும் படுதோல... மேலும் பார்க்க

'விவசாயி வீரமணி, ஓட்டுநர் சங்கர், டாப் காவல் நிலையம்.!' - குடியரசு தினத்தில் வழங்கப்பட்ட விருதுகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை முன், கொடியேற்றினார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். கொடியேற்ற நிகழ்விற்... மேலும் பார்க்க

"கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பது எங்கள் உரிமை; தருவது உங்களின் கடமை" - சொல்கிறார் விஜய பிரபாகரன்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்தக் கூட்டணி என்று தேமுதிக இதுவரை அறிவிக்காத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய பிரபாகரன், ... மேலும் பார்க்க

'அண்ணன் திருமாவிற்கு தெரியும்; நான் தடம் மாறவில்லை!' விசிகவினருக்கு ஆதவ் விளக்கம்

நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விடுதலைச் சிறுத்தை கட்சிகள் குறித்து பேசியிருந்தது, விசிகவினர் இடையே அத... மேலும் பார்க்க