பங்குச்சந்தை சரிவு: இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத 6 தவறுகள்!
``இப்படியெல்லாம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை... என் ஆசையெல்லாம்" - நடிகை நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் தெலுங்கில் அறிமுகமான முதல் படம் அலா மொதலைந்தி (Ala Modalaindi). 2011-ல் வெளியான ஒரு வெற்றிகரமான தெலுங்கு காதல் நகைச்சுவைத் திரைப்படம். பி.வி. நந்தினி ரெட்டி இயக்கிய இப்படத்தில் நடிகர் நானி ஹீரோவாக நடித்திருந்தார். நித்யா மேனனின் தெலுங்கு அறிமுகத்தின் முதல் படம் பெரும் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நடிகையாக இன்றும் வலம்வருகிறார்.
அலா மொதலைந்தி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.




அதில், `` 'அலா மொதலைந்தி' (Ala Modalaindi) என்றால் 'அப்படித்தான் அது தொடங்கியது' என்று பொருள். எனக்கு இப்படியொரு தலைப்பு கொண்ட படத்தைக் கொடுத்தது பிரபஞ்சத்தின் லீலை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கிருந்துதான் எல்லாமே தொடங்கியது.
நந்தினி ரெட்டியும் நானும் அந்த நாட்களைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருப்போம். அப்போது நாங்கள் யார் என்று யாருக்கும் தெரியாது, யாரும் எங்களைப் பொருட்படுத்தவும் இல்லை. நாங்கள் என்ன உருவாக்க முயல்கிறோம் என்பது பலருக்குப் புரியவில்லை. தெலுங்கில் அதுவரை வந்திராத காதல் கலந்த நகைச்சுவைத் திரைபபடத்தை எடுக்க முயற்சித்தோம். அதனால் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
படப்பிடிப்பு முடிந்ததும் அநேக நாட்களை ஈரானி சாய் கடைகளில் அரட்டை அடித்துக் கழிப்போம். மதிய உணவிற்கு சப்வே (Subway) சாண்ட்விச்கள் சாப்பிடுவோம். இப்போதும் அந்த ஆர்டர்கள் எனக்கு நினைவிருக்கிறது. தினமும் அதே உணவுதான். படப்பிடிப்பு தளத்தில் நிறைய மாற்றங்களைச் செய்வோம். ஒரு காட்சியைப் படமாக்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு கூட அதை மாற்றி எழுதுவோம்.
அந்த நாட்கள் மிகவும் அற்புதமானது. நாங்கள் அப்போது பிரபலம் இல்லை என்பதால் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. அதனால் எங்களுக்குப் பிடித்ததைச் செய்தோம். நாங்கள் நாங்களாகவே இருந்தோம்.




ஒருநாள், படப்பிடிப்பிற்குச் செல்லும் வழியில் மதிய உணவு வாங்க ஒரு சிறிய சப்வே உணவகத்தில் நின்றோம். நந்தினி என்னிடம், "நீயே உள்ளே போய் வாங்கிட்டு வா. இனிமேல் உன்னால் இப்படிச் சுதந்திரமாக எந்த உணவகத்திற்குள்ளும் நுழைய முடியாது," என்றார்.
எனக்கு அப்போது அது அபத்தமாகத் தோன்றியது. என்னை அடையாளம் காண்பார்கள், மக்கள் என்னைப் பார்க்க விரும்புவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
உண்மையில் எனக்கு அப்படி ஒரு விருப்பமும் இருந்ததில்லை. சிறிய, மாறுபட்ட படங்களில் நடிக்க வேண்டும், யாரும் அறியாத ஒருவராகச் சுதந்திரமாக இருக்க வேண்டும், நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், கஃபேக்களில் தனியாக அமர்ந்து புத்தகம் படிக்க வேண்டும்... இதுதான் என் திட்டமாக இருந்தது. ஆனால்... அலா மொதலைந்தி படம் வந்த பிறகு எதுவுமே முன்பைப் போல இல்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



















