கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது ...
ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; கனெக்ட் ஆகிறதா இந்த 'ஆந்தாலஜி' படம்?
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வரும் இந்தப் பாகத்தில் 'ஹாட்ஸ்பாட் 2' படத்திற்காக கதை கேட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர்.
இயக்குநராக நினைக்கும் பெண் (ப்ரியா பவானி ஷங்கர்) அத்தயாரிப்பாளரைச் சந்தித்து கதை சொல்கிறார். தயாரிப்பாளரிடம் இயக்குநர் சொல்லும் 3 குறும்படங்களின் தொகுப்பே இந்த இரண்டாம் பாகம்.
டியர் ஃபேன்:
இரண்டு சமகால இளைஞர்களான ரக்ஷனும், ஆதித்யா பாஸ்கரும் தாதா, ராசா என இரு உச்ச நடிகர்களின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள்.
நட்சத்திரங்களைக் கொண்டாடுவது, போட்டியாக நினைக்கும் நட்சத்திரங்களின் போஸ்டர்களைக் கிழிப்பது என இவர்களுக்கிடையில் ஃபேன் வார் முட்டிக்கொள்கிறது.

திடீரென ஆதித்யா பாஸ்கரின் மனைவியையும், ரக்ஷனின் குடும்பத்தினரையும் மர்ம நபரொருவர் கடத்திவிடுகிறார். எதற்காக அந்த மர்ம நபர் இவர்களின் குடும்பத்தைக் குறிவைத்து கடத்தினார், அந்த மர்ம நபர் இவர்களுக்கு எடுத்துரைக்கும் பாடமென்ன என்பதைச் சொல்வதுதான் இந்த எபிசோடின் கதை.
ப்ளாக் & வைட் :
படிப்பு முடித்துவிட்டு வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் தன் மகளை (சஞ்சனா திவாரி) அழைத்து வர விமான நிலையம் செல்கிறார் தம்பி ராமையா.
மகளின் மாடர்ன் உடை, மகளுடன் வரும் அவருடைய ஆண் நண்பர் போன்றவை தம்பி ராமையாவின் கண்களை உறுத்துகின்றன.
பிறகொரு நாள், தம்பி ராமையாவின் வீட்டிற்கு வரும் அவருடைய பாஸ் முன்பு மாடர்ன் உடை அணிந்து வருகிறார் சஞ்சனா. இதனால் கோபமடையும் தம்பி ராமையா என்ன செய்கிறார், என்ன மெசேஜ் சொல்ல வருகிறார் என்பதாக இந்த இரண்டாவது எபிசோட் விரிகிறது.
யுவர்ஸ் லவ், லவ்விங்லி:
காதல் சப்ஜெக்டில் மீண்டும் மீண்டும் தோல்வியையே சந்திக்கிறார் அஷ்வின். பிறகு, புதிய சிம்கார்ட் வாங்கி அதனை ஆக்டிவேட் செய்ய நினைக்கும் அவருக்கு எதிர்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணுடன் நட்பு கிடைக்கிறது.

அந்த நட்பு, காதலில் வந்து நிற்கிறது. இரண்டு பேரும் சந்தித்துக் கொள்ளவே முடியாத சூழலில் இருக்கிறார்கள். இறுதியில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டார்களா, சந்திப்பிற்குப் பிறகு நிகழும் டிவிஸ்ட்கள் என்னென்ன என்பதுதான் இந்த மூன்றாவது எபிசோடின் கதை.
சமகால இளைஞர்களைப் பிரதிபலிக்கும் ரக்ஷன், ஆதித்யா பாஸ்கரின் கதாபாத்திரங்களில் இளைஞர்களின் துள்ளல் தெரிந்தாலும், போட்டி போட்டுக்கொள்ள வேண்டிய வலுவான நடிப்புப் பக்கங்கள் அவர்களிடம் எட்டிப்பார்க்காதது மைனஸ்.
எம்.எஸ். பாஸ்கர், அவருக்கு நன்கு பரிச்சயமான கதாபாத்திரக் களத்திலேயே ரவுண்டு போயிருக்கிறார். அவரின் கதாபாத்திர வடிவமைப்பில் இல்லாத புதுமை குணம், பத்தோடு பதினொன்றாக அவரைக் கடந்து போகவும் வைத்திருக்கிறது. ஆனாலும், அவர் நடிப்பில் குறையேதுமில்லை.
தந்தையாக வரும் தம்பி ராமையாவின் நடிப்பில் வழக்கமான 'டச்'களே நிரம்பியிருக்கின்றன. இவர் முற்போக்காகச் சிந்திக்கும் தந்தையா?, பிறகு ஏன் இடம், பொருள், ஏவல் என்கிறார்? என்பது போன்ற கேள்விகளை எழுப்பும் குழப்பமுடையதாகவும் அமைந்திருக்கிறது இவருடைய கதாபாத்திர வடிவமைப்பு.
மகளாக சஞ்சனா திவாரியிடம் செயற்கைத்தனங்கள் நிரம்பிய நடிப்பே வெளிப்பட்டிருக்கிறது.
ரொமாண்டிக் ஹீரோவாக நல்லதொரு நடிப்பைத் தந்திருக்கும் அஷ்வின், வசன உச்சரிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஓரிரு காட்சிகளில் மட்டும் தலைகாட்டும் பவானி ஸ்ரீக்கு நடிப்பில் பெரியளவில் வேலை கொடுக்கப்படவில்லை.
நரேடராக ப்ரியா பவானி ஷங்கர் இந்தக் கதைக்குக் கூடுதல் மைலேஜ் சேர்க்கும் நல்லதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார்.

மூன்று கதைகளை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்த விதம், கதையின் களத்திற்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் மென்மையான லைட்டிங் என எங்கும் நேர்த்தியான பணியை ஒளிப்பதிவாளர்கள் ஜகதீஷ் ரவியும், ஜோசஃப் பவுலும் தந்திருக்கிறார்கள்.
நம்மை டயர்டாக்கி சோம்பல் முறிக்க வைக்கும் இடங்களில் கராராக கத்திரி போடத் தவறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் முத்தையன். முதல் பாகத்தில் வரும் அதே நாதஸ்வர பின்னணி இசையே இங்கும் பெரும்பான்மையான இடங்களில் ரிப்பீட் மோடில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மூன்று கதைகள், அதற்குள்ளிருக்கும் மனிதர்கள், அவர்களின் சிக்கல்கள் என்பதைப் பேசுகிறது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கும் இப்படம்.
ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்! ஆனால், முட்டி மோதிக் கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்குச் சாட்டையடி கொடுத்து பாடமெடுக்கும் கடத்தல் வில்லன் என எங்கும் கிளிஷே சாயங்களே தென்படுகின்றன.
இரண்டாவது எபிசோடில், தந்தை - மகள் உறவை வைத்து ஆடை சுதந்திரம் பற்றி பேச முயன்றதெல்லாம் ஓகே. ஆனால், அதில் 'இடம் பொருள் ஏவல்' எனப் பல்டி அடித்திருப்பது பூமரிசத்தின் மற்றுமொரு முகமே.
மகளின் விருப்பமும், தந்தையின் பிடிவாதமும் ஒன்றல்ல பாஸ்! ஆடை சுதந்திரம் என்று பேசத் தொடங்கிவிட்டு, மீண்டும் பெண்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எவ்வகை நியாயம்?
மூன்றாவது எபிசோடில், ஃபேண்டஸி முடிச்சுகளை ஆங்காங்கே தூவி கதையைச் சுவாரஸ்யமாகப் பின்னி தேவையான சிக்னலை எட்டிப் பிடிக்கிறார் இயக்குநர். ஆனால், இக்காலத்தில் உண்மையான காதலே இல்லை என்றெல்லாம் சுற்றுவது அபத்தம். மேலும், அதிர்ச்சிகரமான டிவிஸ்ட்களுக்காக, ஆறடிக்கு ஆறேழு டிவிஸ்ட்களை நிரப்பியிருப்பது மைனஸ்.
விஜயகாந்த் ஜெயந்தி, 2050-ல் முதல்வர் சிவகார்த்திகேயன், எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சேதுபதி என்பது போன்ற பல வசனங்களை திரைக்கதையில் வம்படியாகச் சேர்த்துவிட்டிருக்கிறார் இயக்குநர். அவற்றில், சில நம் பல்ஸைப் பிடித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவை நமக்கு சலிப்பையே உண்டாக்குகின்றன.

மார்டன் பெண்களின் குணமும், எண்ணங்களும் இப்படியானதாகத்தான் இருக்கும் எனப் பார்வர்ட் மெசேஜ்கள் கொண்டு முதிர்ச்சியின்றி கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதும், மேம்போக்கான வகையில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதும் தவறான போக்கு.
கதையைப் புதுமையாகக் கையாள்வதிலும், அரசியல் தெளிவுக் கொண்ட கதாபாத்திர வடிவமைப்பு, வசனங்கள் அமைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இந்த 'ஹாட்ஸ்பாட் - 2' ஜனரஞ்சகமானதாக அனைவருக்கும் கனெக்ட் ஆகியிருக்கும்.















