கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது ...
கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன?
அம்ருத் பாரத் ரயில் தொடக்கவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி இன்று கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் சென்றிருந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் புத்தரிகண்ட மைதானம் வரை ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அதேசமயம் பிரதமரை வரவேற்க திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் செல்லவில்லை. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வருகை தரும்போது அவர்களை வரவேற்க மேயர் செல்வது வழக்கமாகும். கேரளாவில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றிய பா.ஜ.க, 'பிரதமர் மாநில தலைநகரான திருவனந்தபுரத்துக்கு வரும்போது அவரை வரவேற்பவர்கள் பட்டியலில் பா.ஜ.க மேயர் இடம்பெறுவார்' என தெரிவித்திருந்தது.

ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளார். அவரை வரவேற்க மேயர் விமான நிலையத்துக்கு செல்லவில்லை. மேயரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களைக் கூறி மேயரை அனுமதிக்கவில்லை எனவும், கேரள பா.ஜ.க -வின் முதல் மேயருக்கு எதிராக சிலர் அரசியல் காய் நகர்த்தியதாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்தன. இந்த விவாதம் சர்ச்சையாக வெடித்ததை அடுத்து திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் கூறுகையில், "எனது பெயரை யாரும் நீக்கவில்லை. பிரதமர் கலந்துகொள்ளும் இரண்டு நிகழ்ச்சிகளின் மேடைகளிலும் மேயர் இருக்க வேண்டும் என கட்சி முடிவு செய்திருந்தது. பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றுவிட்டு உடனே மேடைக்கு வர இயலாது. ஏனென்றால், பிரதமரின் கான்வாயில் கவர்னர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி உண்டு. எனவேதான் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லவில்லை" என்றார்.













