கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது ...
`என்னால் பலனடைந்த பலர் என்னுடன் நிற்கவில்லை..!' - இணைப்பு விழா ஆலோசனையில் மனம் திறந்த வைத்திலிங்கம்
டெல்டாவில் அதிமுக முகமாக அறியப்பட்ட `சோழமண்டல தளபதி' என கட்சியினரால் அழைக்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம், அதிலிருந்து விலகி கடந்த 21ம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். உடன் அவரது மகன் டாக்டர் சண்முகபிரவும் இருந்தார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த உடனே கிளம்பிய அவரது கார் நேராக அறிவாலயத்தில் போய் நின்றது.

``அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்திருக்கிறேன், நல்லாட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் இருக்கிறார்" எனப் பேட்டி கொடுத்தவர், வரும் 26ம் தேதி தஞ்சாவூரில் இணைப்பு விழா நடப்பதாகவும் சொன்னார். இதையடுத்து நேற்று காலை தஞ்சாவூர் வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் இருந்த வைத்திலிங்கத்தை ஆதரவாளர்கள் சந்தித்தனர். அப்போது, திமுக-வில் இணைவதாக இருந்த அவரது தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன், ``என் குடும்பத்தினர் வற்புறுத்தியதால் நான் திமுக-வில் இணையவில்லை, அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலகுகிறேன். நான் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு அண்ணன் வைத்திலிங்கம் என்னை மன்னிக்க வேண்டும்" என சென்டிமென்டாக டிவியில் பேசியதைப் பார்த்த வைத்திலிங்கத்தின் கண்கள் கலங்கியுள்ளன.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை தொடங்கிய சமயத்தில், ஓ.பி.எஸ் தலைமையில் தஞ்சாவூர் மஹாராஜா மஹால் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை வைத்திலிங்கம் செய்தார். அப்போது பேசிய ராமச்சந்திரன், ``அண்ணன் என் அரசியல் வழிகாட்டி, அவரது ஆளுமையை பார்த்து வளர்ந்த, நான் அவருக்காக எதையும் செய்வேன், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறேன்" என்ற போது அரங்கம் அதிர்ந்தது. திமுக-வில் இணைவதை மட்டும் கைவிட்டுள்ளார், வைத்திலிங்கத்திடம் இருந்து என்றும் விலக மாட்டார். வாட்ஸப் டீபியில் வைத்திலிங்கம் போட்டோவை தான் இப்போதும் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

வரும் 26ம் தேதி திமுக மகளிர் மாநாடு தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடக்கிறது. அந்த திடலிலேயே இணைப்பு விழா நடக்கிறது. அப்போது தன் ஆதரவாளர்களை திமுக-வில் இணைக்கிறார் வைத்திலிங்கம். ஊரே மெச்சும் வகையில் இந்த நிகழ்வு இருக்க வேண்டும் என நினைத்திருக்கிறார் வைத்தி. இதற்காக நேற்று தஞ்சாவூர் தமிழ்நாடு ஹோட்டலில் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதில் நாஞ்சிக்கோட்டை சத்தியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஒரத்தநாடு மற்றும் திருவோணத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்.
அப்போது, ``முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி செய்கிறார், மீண்டும் திமுக ஆட்சியில் அமரும், ஸ்டாலின் முதல்வர் ஆவார். ஒருங்கிணைப்பு குறித்து எவ்வளவோ பேசியும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. இதனால் தாய் கழகத்தில் இணைந்தேன். என்னால் பெரிய அளவில் பலனடைந்த பலர் இன்று என்னுடன் இல்லை. என்னால் எந்த பலனும் அடையாத நீங்கள் என் மீது கொண்ட பாசத்தால் என்னை விட்டு விலகாமல் என் பின்னால் அணிவகுத்து நிற்கிறீர்கள். எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது நடக்கும்.

இணைப்பு விழாவை வரலாற்றில் இடம் பெறும் வகையில் நடத்த வேண்டும்" எனப் பேசியுள்ளார். மகளிர் மாநாடு மாலை நடக்கிறது. அந்த மேடையிலேயே இணைப்பு விழா நடத்துவதற்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதை தவிர்த்த வைத்திலிங்கம், தனித்து தெரிய வேண்டும் என்கிற தன் விருப்பத்தை ஸ்டாலின் தரப்பிடம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அன்று காலை 11 மணியளவில் அதே இடத்தில் தனி மேடை அமைத்து இணப்பு விழா நடப்பதற்கான ஏற்பாடு ஜரூராக நடக்கிறது. ஒரு கிராமத்திற்கு இரண்டு என ஒரு ஒன்றியத்திற்கு 15 வேன்கள் வீதம் ஆதரவாளர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடு முதலில் செய்யப்பட்டது.
தவைத்திலிங்கத்தின் 90 சதவிகித ஆதரவாளர்கள் திமுக-வில் இணைய இருப்பதால், ஒரு ஒன்றியத்திற்கு 30 வேன்கள் அனுப்புகின்றனர். இணைப்பு விழா யார் சொல்லுக்கும் இடம் கொடுக்காத வகையில் இருக்க வேண்டும் என வைத்திலிங்கம் நினைக்கிறார். தன்னுடன் திமுக-வில் இணைபவர்களின் பெயர், முகவரி, செல் நம்பர் என அனைத்தையும் குறிப்பிட்ட ஃபைல் தயார் செய்துள்ளனர். ஆதரவாளர்கள் மட்டுமன்றி வைத்திலிங்கமும் அமைச்சராக இருக்கும்போது எப்படி உற்சாகமாக இருப்பாரோ அதே உற்சாகத்துடன் வேகமாகச் செயல்படுகிறாராம்.













