மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று...
"கணவர் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார்" - குழந்தையுடன் ஆட்டோ ஓட்டும் மும்பைப் பெண்
மும்பை கல்யான் பகுதியைச் சேர்ந்த கோமல் கெய்க்வாட் என்ற 25 வயது பெண் தனது 3 வயது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். கோமல் கெய்க்வாடிற்கு 18 வயதில் திருமணமானது.
அவரது கணவர் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தார். கடந்த 2023ம் ஆண்டு கோமலிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு ஒரு வயதாக இருந்தபோது தனது சொந்த ஊரான பர்பானிக்குச் சென்று வருவதாகக் கூறி விட்டு கோமல் கணவர் சென்றார்.

அதன் பிறகு அவர் வரவே இல்லை. குடும்பம் நடத்த, வீட்டு வாடகை கொடுக்க மற்றும் குழந்தையைக் கவனித்துக்கொள்ள என எதற்கும் பணம் இல்லை. சில நேரங்களில் சாப்பிடக்கூட பணம் இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் அவருக்கு ஆட்டோதான் கைகொடுத்துள்ளது. இப்போது கோமல் தனது 3 வயது குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துகிறார்.
வீட்டில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் இப்போது வீட்டை விட்டு வரும்போது தனது மகளையும் அழைத்து வந்துவிடுகிறார். மகளை முன் இருக்கையில் தன்னுடன் வைத்துக்கொள்கிறார்.
இது குறித்து அவரிடம் பேசியபோது, ''எனது கணவர் எனக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து இருந்தார். இதன் மூலம் அவர் இல்லாத நேரத்தில் என்னால் ஆட்டோவில் மகளை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியும் என்று கூறினார். ஆனால் ஒரு நாள் இந்த ஆட்டோதான் எனக்கு சாப்பாடு போடப்போகிறது என்று அப்போது எனக்கு தெரியாது.
திடீரென சொந்த ஊருக்குச் சென்று வருவதாகச் சொல்லிவிட்டு சென்ற கணவர் திரும்ப வரவே இல்லை. இதனால் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு ஒரு வயதில் குழந்தை இருந்ததால் என்னை யாரும் வீட்டு வேலைக்கு அழைக்கவில்லை. எனவே வேறு என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோது தான் ஆட்டோ ஓட்ட முடிவு செய்தேன்.
முதலில் வாடகைக்கு ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டினேன். சில மாதங்களில் ரூ.60 ஆயிரம் சேமித்து அதனை முன்பணமாக கட்டி கடனுக்கு ஆட்டோ ஒன்றை வாங்கினேன். அதில் முன்பகுதியில் எனது மகள் இருக்கும் வகையில் இருக்கையை மாற்றி அமைத்தேன்.
காலை 6.30 மணிக்கே எனது பயணம் தொடங்கிவிடும். காலையிலேயே சாப்பாட்டையும் எடுத்துகொள்வேன். மதியம் வரை ஆட்டோ ஓட்டிவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவேன். பிறகு மாலை 4 மணிக்குச் சென்று இரவு 10 வரை ஆட்டோ ஓட்டுவேன். இதில் எந்தவித விடுமுறையோ அல்லது ஓய்வோ கிடையாது.

தினமும் 16 மணி நேரம் ஆட்டோ ஓட்டுகிறேன். இதில் தினமும் ரூ.400 முதல் 500 வரை கிடைக்கிறது. எனக்கு ஏற்பட்ட நிலை எனது மகளுக்கும் ஏற்படக்கூடாது. எனது மகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். அவளை ஐ.பி.எஸ் அதிகாரியாக்குவேன்'' என்று கூறும் கோமல் ரூ.2500 வாடகை வீட்டில் வசிக்கிறார்.
ஆட்டோவிற்கு மாதம் ரூ.6500 மாத கடன் தொகை செலுத்துகிறார். கோமல் குறித்து கேள்விப்பட்ட உள்ளூர் சிவசேனா கவுன்சிலர், கோமலைச் சந்தித்து ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்து இருக்கிறார். அதோடு அவரின் மகள் படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்து இருக்கிறார்.

















