TVK Vijay: ஜல்லிக்கட்டு காளை குட்டிகதை முதல் கரூர் சம்பவம் வரை! - வேலூரில் விஜய்...
கூல்டிரிங்க்ஸ் குடிப்பது போல் வந்து குழந்தையை கடத்திச் சென்ற தம்பதி - 20 நிமிடங்களில் மீட்ட போலீஸார்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி, முத்துச்செல்வி. இத்தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வருகின்றனர். அந்தக் கடை முன்பு அவர்களது கபிலேஷ் என்ற 2 வயது ஆண் குழந்தை கடையின் விளையாடி கொண்டிருந்தது.
இந்த நிலையில், கூல்ட்ரிங்க்ஸ் குடிக்க வந்த ஒரு தம்பதியினர் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் தாங்கள் வந்த பைக்கில் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, உடனே பைக்கை ஸ்டார்ட் செய்து குழந்தையை கடத்திக் கொண்டு சென்று விட்டனர்.

பரிதவித்த தாய் முத்துச்செல்வி, குலசேகரபட்டினம் காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறி கதறியழுதார். இதனையடுத்து பைக்கில் தம்பதியினர் சென்ற வழியே போலீஸார் தேடிச்சென்றனர். அப்போது குழந்தை தொடர்ந்து அழுததால், காரைக்கால் அம்மையார் கோயில் அருகில் பைக்கை நிறுத்தி விட்டு குழந்தையை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார் சந்தேகத்தின் பேரில் அத்தம்பதியினரை பிடித்து விசாரிக்கும் போது குழந்தையை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீஸார், காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குழந்தையை கடத்தியவர்கள் திருச்செந்தூர் அருகில் உள்ள பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், சென்னை பள்ளிக்கரணையில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் லிங்கதுரை, அவரது மனைவி ஜெயந்தி என்பது தெரிய வந்தது. ”எங்களுக்கு திருமணமாகி 11ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் குடும்பத்தினரின் கடுமையான வற்புறுத்தலால் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தோம். அப்போது பதிவு செய்தபோது பெண் குழந்தையை வளர்க்க கொடுத்துள்ளனர்.

ஆனால், எங்கள் குடும்பத்தினரிடம் ஆண் குழந்தையை எடுத்து வளர்ப்பதாக கூறியுள்ளோம். இதனையடுத்து சொந்த ஊருக்கு வந்தபோது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பதற்காக கடைக்கு சென்றோம். அங்கு துரு துருவென விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்ததும் நைசாக பேசி குழந்தையை கடத்தி செல்ல முடிவெடுத்து குழந்தையை கடத்தினோம்” என்றனர். கடத்தப்பட்ட குழந்தையை 20 நிமிடங்களில் போலீஸார் மீட்டனர். இச்சம்பவம் குலசேகரபட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















