`கள்ளக்குறிச்சிக்கும் இடைத்தேர்தல்; விஜய் தன்னை நிரூபிக்க..!’- தவெக எம்எல்ஏ விவ...
`கொலையான ஆசிரியை குடும்பத்திற்கு இழப்பீடு என்னாச்சு?'- எஸ்.பிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றியவர் ரமணி. இவரை காதலித்து வந்த மதன்குமார் என்பவர் ரமணி திருமணத்திற்கு மறுத்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு நவ.20ம் தேதி, பள்ளி வளாகத்திற்குள்ளேயே ரமணியை குத்திக் கொலை செய்தார். இது தொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர்.
அரசு பள்ளி வளாகத்திலேயே பாதுகாப்பு இல்லை என அப்போது பெரும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர், தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டியும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையம் உத்தரவிட வேண்டும். இறந்த ரமணியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இம்மனுவை கடந்த 2025ம் ஆண்டு டிச.30ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தஞ்சாவூர் எஸ்.பிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தேசிய மனித உரிமை ஆணையம். இது தொடர்பாக, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி இந்தாண்டு பிப்.2ம் தேதி, மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில், மதன் ஜாமீனில் வெளியே விடுவிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கு நன்னடத்தைப் பிணையம் பெறுவதற்காக பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மதன் சென்னையில் பணியாற்றி வரும் நிலையில், நீதிமன்ற விசாரணைகளில் தொடர்ந்து ஆஜராகி வருகிறார். மேலும், பள்ளி வளாகத்தைச் சுற்றிலும், சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, இறந்த ரமணியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கியது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, இந்தாண்டு செப்.25ம் தேதி, எஸ்.பி.,க்கு விளக்கம் கேட்டு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அது தொடர்பாக எவ்வித பதிலும், எஸ்.பி தரப்பில் ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தஞ்சாவூர் எஸ்.பி வரும் டிச.29ம் தேதி காலை 11:00 மணிக்கு, தேசிய மனித உரிமைகள் டெல்லியில் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகி, இறந்த ரமணியின் குடும்பத்தினருக்கு, இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால், தற்போதைய நிலை குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















