சேயோன்: 'அன்று கல்லூரி சீனியர்; இன்று இசையமைப்பாளர்'; SK - SANA 24 வருட நட்பு பற...
கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!
கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
சி.பி.எம் கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் மாநிலம் முழுவதும் பரவலாக செல்வாக்கு உள்ளது. சி.பி.எம் தற்போது ஆட்சியில் உள்ளது, காங்கிரஸ் ஏற்கனவே ஆண்ட கட்சியாக உள்ளது. அதே சமயம் பா.ஜ.க இப்போதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது.
திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பா.ஜ.க அமைப்பு ரீதியாக பலம்பெற்று வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேமம் சட்டசபை தொகுதியில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று ஓ.ராஜகோபால் எம்.எல்.ஏ-வாக இருந்தார்.
கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க அதிக வார்டுகளில் வென்றது. பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராக உள்ளார். பா.ஜ.க-வுக்கு அடித்தளம் உள்ளதால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விரும்பி அக்கட்சி தலைவர்கள் காய் நகர்த்துகின்றனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருவனந்தபுரம், வர்க்கலா, ஆற்றிங்கல், சிறையின்கீழ், நெடுமங்காடு, வாமனபுரம், களக்கூட்டம், வட்டியூர்காவு, நேமம், அருவிக்கரை, காட்டாக்கடை, கோவளம், நெய்யாற்றின்கரை, பாறசாலை ஆகிய 14 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில் திருவனந்தபுரம், நேமம், களக்கூட்டம் சட்டசபை தொகுதிகள் முழுவதும் திருவனந்தபுரம் மாநகராட்சி வார்டுகளை மட்டுமே உள்ளடக்கியதாகும். வட்டியூர்காவு உள்ளிட்ட சில தொகுதிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் சில வார்டுகள் வருகின்றன. எனவே, மாநகராட்சியை உள்ளடக்கிய தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க தலைவர்கள் முட்டிமோதுகின்றனர்.
திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட நடிகர் கிருஷ்ணகுமார் முயல்கிறார். திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவி வழங்காத கோபத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஐ.பி.எஸ் வெளியே கூறிவருகிறார். ஆனாலும், அவர் மறைமுகமாக வட்டியூர்காவு தொகுதியில் போட்டியிட்டால் தனக்கு சாதகமாக களம் இருக்குமா என தனது ஆதரவாளர்கள் மூலம் பல்ஸ் பார்த்து வருகிறாராம்.
கேரளாவில் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கொடுத்த நேமம் தொகுதி தனக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப்போட்டு அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கிவிட்டாராம் மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர்.

ஆற்றிங்கல் தொகுதியை மாநில நிர்வாகிகள் சுதீர் மற்றும் ஷோபா சுரேந்திரன் ஆகியோர் கேட்கிறார்கள். காட்டாக்கடை தொகுதியில் போட்டியிட பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் பி.கே.கிருஷ்ணதாஸ் விரும்புகிறார். பாறசாலை தொகுதியில் கரமன ஜெயன், களக்கூட்டம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் நெய்யாற்றின்கரை தொகுதியில் செங்கால் ராஜசேகர் ஆகியோர் போட்டியிட விரும்பி டெல்லி தலைவர்களை சுற்றி வருகிறார்களாம்.
அதே சமயம் பா.ஜ.க கூட்டணியில் உள்ள ட்வெண்டி ட்வெண்டி கட்சியும், பி.டி.ஜே.எஸ் கட்சியும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க-வுக்கு சாதகமான சில தொகுதிகளை கேட்கின்றன. இதனால், என்.டி.ஏ கூட்டணிக்குள் தொகுதி பங்கு வைப்பதில் இழுபறி நீடிக்கிறது.!


















