விலைவாசி உயர்வு: "ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?" - ஸ்டாலின் சாடல்
கொலைகள்... திருட்டுகள்... பாலியல் புகார்கள் - தொடரும் குற்றங்கள்... திணறும் குளித்தலை காவல்துறை
கரூர் மாவட்டம், குளித்தலை துணை கண்காணிப்பாளர் எல்லைக்குட்பட்டு 7 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில்தான் கடந்த நான்கு மாதங்களாகக் கொலை, திருட்டு, பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய குளித்தலை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், "குளித்தலை சரகத்தில் உள்ள குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய பகுதிகள் மிகவும் பின்தங்கிய பகுதிகள். இங்கு தொடர் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவது பொதுமக்களை அச்சப்பட வச்சுருக்கு.
குளித்தலை அருகே இருக்கும் மேலப்பட்டி, தெற்கு களத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற 42 வயது பெண் கடந்த மே மாதம் 12 - ம் தேதி, வீட்டின் அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் நிர்வாணமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடியும் குற்றவாளிகளை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.
இந்தக் கொலையில் அங்குள்ள முக்கிய அரசியல் புள்ளிகள் பெயர்களும் அடிபடுவதால், போலீஸார் இந்த விவகாரத்தில் மந்தகதியில் செயல்படுவதாகச் சொல்றாங்க.
அதேபோல், பாலவிடுதி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருணகிரி என்ற விவசாயி, கடந்த மே மாதம் 22- ம் தேதி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றுவிட்டு திரும்பியபோது, மர்ம நபரால் நாட்டுத்துப்பாக்கியால் முதுகில் 10 க்கும் மேற்பட்ட குண்டுகளால் சுடப்பட்டார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகே காப்பாற்றப்பட்டார். பாலவிடுதி காவல் நிலையத்தில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இன்றுவரைக்கும் குற்றவாளியைப் பிடிக்கவில்லை. அதோடு, நாட்டுத் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதும் இதன்முலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கு.
அதேபோல், இதே காவல் நிலையத்துக்குட்பட்ட காமம்பட்டியைச் சேர்ந்த கம்மங்கூழ் கடை நடத்தி வரும் ஒரு பெண்மணியிடம் ஒரு நபர் குடும்பப் பிரச்னைகள் தீர மாந்த்ரீகம் செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அந்தப் பெண்ணிடம் இருந்து தங்கம், வெள்ளி நகைகளையும் பறித்து சென்றார்.
இதிலும் குற்றவாளியைக் கைது செய்யவில்லை. அதேபோல், கடந்த ஜூலை 1 - ம் தேதி காவிரி ஆற்றில் பெரிய பாலம் பகுதியில் தேங்கி கிடந்த தண்ணியில் எலும்பு கூடான நிலையில் ஆண் சடலம் ஓன்று கிடந்துச்சு. அது யார் என்று அடையாளமும் காணவில்லை. கொலையா, தற்கொலையா, நீரில் மூழ்கி இறந்த விபத்தா என்று கண்டுபிடிக்கவும் இல்லை.
குளித்தலை, மலையப்பன் நகரைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண் தன் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவருக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக த.வெ.க கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் என்பவர் சிக்கினார்.
அதேபோல், கடந்த மாதம் மாணிக்கம் என்பவரோடு அனுப்பிய 4 வயது சிறுமியை மாணிக்கம் பாலியல் வன்கொடுமை செய்ய, அந்தச் சிறுமியின் பாட்டி மாணிக்கத்தை அரிவாளால் வெட்டினார். இப்படி, பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் இந்தப் பகுதியில் அதிகமாக நடப்பதால், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதற்கு காரணம், காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்காததும், முக்கியக் குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளைக் கைது செய்ய திணறுவதும்தான்.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் திருட்டுச் சம்பவங்களும் தொடர்கதையாக நடக்கிறது. குளித்தலை, அண்ணாநகர், பிள்ளையார் கோவில், 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த கட்டட பொறியாளர் ரஞ்சித்குமார் வீட்டில் 5 கிராம் தங்கம், அரை கிலோ வெள்ளி காணாமல் போனது.
அதேபோல், அதே பகுதியில் உள்ள அஞ்சாவது குறுக்கு தெருவில் வசிக்கும் பைனான்சியரான பிரமேந்திரன் என்பவரது வீட்டில் 5 பவுன் தங்க நகைகளும், 60 கிராம் வெள்ளியும் திருடு போயின. அதோடு, பண்ட பாத்திரங்களையும் திருடிச் சென்றனர். அதேபோல், கடந்த வருடம் திம்மாச்சிபுரத்தில் உள்ள விவசாயியான கார்த்திக் என்பவரது வீட்டில் 10 பவுன் நகையும், ரூ. 2 லட்சம் பணமும் திருடுபோயின.
இதைத்தவிர, ராஜேந்திரம், பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவலரான சுந்தரின் மகன் சுரேஷ் வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 8 பவுன் நகையும், ஒண்ணேமுக்கால் லட்சம் ரொக்கமும் திருடுபோனது.
அதேபோல், குளித்தலை அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான யமஹா பைக் காணாமல் போனது. இதைவிட கொடுமையாக, குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜாநந்தர்வழி நிறுத்தி வைத்திருந்த ஹோண்டா சைன் வாகனம் திருடுபோனது. இந்தத் திருட்டு சம்பவங்களில் பலவற்றில் இன்னும் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை" என்றனர்.

மேலும், இந்தச் சம்பவங்கள் குறித்து பேசிய, குளித்தலை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கலாநிதி,
"இப்படித் தொடர் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லவே அஞ்சுகிறார்கள். பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளதால், பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாவே பெற்றோர்கள் அஞ்சும் சூழல் உள்ளது.
போதைப் பொருட்களின் விற்பனையும் அமோகமாக நடக்குது. அதேபோல், குளித்தலை பகுதியில் போக்குவரத்து காவலர்களும் இப்போது சரிவர பணியில் இருப்பதில்லை. ரோந்து பணியும் செய்வதில்லை. இதனால், குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும்விதமாக எல்லா குற்றச் சம்பவங்களிலும் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது பண்ண வேண்டும். மேற்கொண்டு குற்றச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் காவல்துறை கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இறுதியாக, 'காவல்துறை மந்தமாக செயல்படுகிறதா?' என்று குளித்தலை சரக டி.எஸ்.பி மணிகண்டனிடம் கேட்டோம்.
"எல்லாமே நான் இங்கு பணிக்கு வருவதற்கு முன்பே நடந்த சம்பவங்கள். இருந்தாலும், சிவரஞ்சனி கொலை செய்யப்பட வழக்கில் ஒரு தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். டெக்னிக்கலாக விசாரித்துக்கொண்டிருக்கிறோம். மாந்த்ரீகம் செய்வதாகச் சொல்லி, பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர் தற்கொலை செய்ய முயற்சித்ததால் கைது செய்ய தாமதமானது. ஆண் சடலம் விவகாரத்தில் அடையாளம் கண்டுவிட்டோம். இருந்தாலும், அதுகுறித்த தகவலை அனுப்புங்க. செக் செய்துவிட்டு சொல்கிறேன்.

நான் வந்தபிறகு நடைபெற்ற குற்றச் சம்பவங்களில் உடனே நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு முன்பு நடந்த குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைத்து, தொடர் விசாரணை நடத்திக்கிட்டு இருக்கிறோம்" என்றார்.
விசாரணை மட்டும் போதாது. குற்றங்களைக் குறைக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

















