செய்திகள் :

கோவை: ஐடி பார்க் அருகே குட்டையில் குளிக்கும் யானைகள்; வனத்துறையினர் கண்காணிப்பு

post image

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால், அங்கு யானை, சிறுத்தை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

அண்மைய காலமாக யானைகள் மற்றும் சிறுத்தைகள் ஊர்ப்பகுதிகளுக்குள் அதிகமாக நடமாடத் தொடங்கியுள்ளன. காட்டை ஒட்டியுள்ள ஊர்கள் வழியாக நகர பகுதிகளுக்கும் யானைகள் வரத் தொடங்கியுள்ளன.

கோவை ஐடி பார்க் அருகே வந்த யானைகள்
கோவை ஐடி பார்க் அருகே வந்த யானைகள்

யானைகள் விளைநிலங்கள், வீடுகளை சேதப்படுத்துவதாக புகார் உள்ளது. அதே நேரத்தில், காடுகளை ஒட்டி ஏராளமான கட்டிடங்கள் மற்றும் வளர்ச்சி பணி காரணமாக யானைகளின் பாதையில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் உள்ளது.

இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் உள்ள 3 ஆண் யானைகள் நேற்று இரவு காட்டை விட்டு வெளியேறியுள்ளன.

தொடர்ந்து அந்த யானைகள் நள்ளிரவு ஊரைச் சுற்றி நடமாடியுள்ளன. அதிகாலை நெருங்கும்போது, அந்த யானைகள் சரவணம்பட்டி அருகே சென்றுவிட்டன.

கோவை ஐடி பார்க் அருகே வந்த யானைகள்
கோவை ஐடி பார்க் அருகே வந்த யானைகள்

கோவை யானைகளைக் காண மக்கள் அதிகமாக வருகை தரும் கீரணத்தம் குட்டையில் 3 யானைகளும் முகாமிட்டன. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

யானைகளைப் பார்க்க அந்தப் பகுதியில் அதிகளவு மக்கள் திரண்டுள்ளனர். காவல்துறை மற்றும் வனத்துறை இணைந்து கூட்டத்தை விலக்கியுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “நேற்று நள்ளிரவு முதல் 3 யானைகளும் ஊருக்குள் சுற்றி வருகின்றன. யானைகளை டிரோன் மூலம் கண்காணித்து வருகிறோம். 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குட்டையிலிருந்து வெளியேறி ஓய்வில் உள்ள யானைகள்
குட்டையிலிருந்து வெளியேறி ஓய்வில் உள்ள யானைகள்

யானை தற்போது குட்டையிலிருந்து வெளியேறி ஓய்வில் உள்ளது. மாலை தான் மீண்டும் காட்டு பகுதிக்கு திரும்பும். அதுவரை கண்காணிப்பு பணி தொடரும். எனவே மக்கள் பயப்பட தேவையில்லை” என்றனர்.