செய்திகள் :

BB Tamil 9 Day 66: ``என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு" - முறையிட்ட ஆதிரை

post image

ஆதிரை தொடுத்த வழக்கில் ‘குத்தத்தை ஒப்புக்கறேங்கய்யா’ என்று எஃப்ஜே சொன்னது ஒரு சாமர்த்தியமான டிஃபென்ஸிவ் ஆக்ட். இதன் மூலம் அதிக குப்பைகள் கிளறப்படாது. பெயர் டேமேஜ் ஆகாது.

பாரு தொடர்ந்த வழக்கில், தன் பெயர் டேமேஜ் ஆகக்கூடாது என்பதை விடவும் எஃப்ஜேவை பொதுவில் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்கிற பழிவாங்கல் மட்டும்தான் தெரிந்தது.

BB Tamil 9 - Day 65
BB Tamil 9 - Day 65

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 65

‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்கிற பாடலைப் போல கம்முவும் பாருவும் அவர்களாக திருந்தினால்தான். இவர்கள் செய்யும் தவறால் மற்றவர்களுக்கு தண்டனை கிடைத்தும் கூட அது குறித்த வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இவர்களுக்கு இல்லை.

‘எக்சர்சைஸ் செய்யும் போது மைக்கை கழற்றி வைக்கலாம்’ என்பதை சாக்காகக் கொண்டு இருவரும் ஜாக்கிங் போகும் போது பேசிக்கொண்டிருக்க அமித் அதைக் கண்டித்து எச்சரிக்கை தந்தார்.

“டீ, காஃபி சாப்பிட முடியலைன்னு விக்ரம் ரொம்ப அனத்தறான்” என்று கம்மு சொல்ல “அவன் யார் கேக்கறதுக்கு. அவன் கெடக்கறான் கிறுக்குப் பய. வா.. அவன் முன்னாடியே கட்டிப்பிடிச்சு வெறுப்பேத்துவோம்” என்று கெட்ட காரியம் செய்தார் பாரு. வருத்தமும் குற்றவுணர்வும் செய்கிற விஷயமா இது?! “நீங்க நல்லா வருவீங்க” என்று சந்தோஷமாக சாபம் கொடுத்தார் விக்ரம்.

“மத்தவங்களுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு கதறிட்டுத்தான் இருக்கேன்” என்று பாரு சமாளிக்க “உங்களைப் பார்த்தா அப்படி தெரியலையே?” என்று கிண்டலடித்தார் வியானா.

‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?’ - பாரு கம்மு பிடிவாதம்

பாரு - கம்மு செய்த தவறால் மற்றவர்களுக்கும் சேர்த்து புரோட்டீன் உணவுகள் துண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக ஒரு மீட்டிங் ஆரம்பித்தது.

“இவங்க கிட்ட எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் நான் பார்க்கலை” என்று அமித் ஆரம்பிக்க “அது இல்லைன்னு எப்படி சொல்ல முடியும், அழுது காட்டணுமா?” என்று அசட்டுத்தனமாக எதிர்வாதம் வைத்தார் பாரு. அழ வேண்டாம். இனி மேலாவது கம்முவிடம் ரொமான்ஸ் ரகசியம் பேசாமலிருக்கலாம் அல்லவா? தங்ககளின் கிளுகிளுப்பால் மற்றவர்களுக்கு உணவு பறிபோவதைக் குறித்து எந்தவொரு வருத்தமும் அல்லாமல், அதை சாமர்த்தியமாக மறைக்க நினைக்கும் பாருவின் குணாதிசயம் முறைகேடானது.

“சரி.. தலயா நான் ஒரு தண்டனை தரேன். நான் அவங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசப் போறதில்ல. மத்தவங்களுக்கும் இது சம்மதமான்னு தெரியணும்” என்று அமித் சொன்னார். “எங்களை ஒதுக்கி வைக்கணும்னு பார்க்கறீங்களா?” என்று முரண்டு பிடித்தார் பாரு. இருவரும் தொடர்ந்து செய்யும் ரொமான்ஸ் அலப்பறைகளுக்கு தண்டனையாக மற்றவர்கள் இவர்களை புறக்கணிப்பது, அறுவைசிகிச்சை போல ஒரு சிறந்த தண்டனையாகத் தெரிந்தாலும் தார்மீக அடிப்படையில் தவறானது.

BB Tamil 9 - Day 65
BB Tamil 9 - Day 65

“ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்கணும்னு எங்களுக்கு ஆசையில்லை. அப்படியாவது ஏதாவது இம்பாக்ட் கிரியேட் ஆகும்ன்னு பார்க்கறோம்” என்றார் விக்ரம். இந்த ஐடியாவைத் தந்தவரே இவர்தான். “யார் கூடவும் பேசாம இருக்கணும்ன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்ல” என்றார் சுபிக்ஷா.

மெஜாரிட்டியான கருத்து ‘இந்த தண்டனை வேண்டாம்’ என்பதாக இருந்ததால் “சரி… வேற தண்டனை தரேன். வீட்டு வேலையாவது செய்வீங்களா?” என்று அமித் கேட்க “அய்யோ.. பாருவை சமையல்ல மட்டும் விட்றாதீங்க” என்று மற்றவர்கள் அலறினார்கள்.

பாத்ரூம் பணியையே சரியாக செய்யாமல் டபாய்க்கும் பாரு, கூடுதல் பணியை ஏற்றுக் கொள்வாரா என்ன? “வேணுமின்னே நிறைய பாத்திரங்களைப் போடுவாங்க” என்று கம்முவின் சொல்வதின் மூலம் தன்னைப்போலவே மற்றவர்களும் வன்மம் மிக்கவர்கள் என்று நினைக்கிறார்.

“அப்படின்னா நான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்” என்று அமித் அஹிம்சா முறையை கையில் எடுக்க, ஒருவழியாக பணிந்த பாருவும் கம்முவும் சமையல் தவிர இதர வீட்டு வேலைகளை செய்வதாக அரைமனதாக ஒப்புக் கொண்டார்கள். “எனக்கும் முட்டை வேணும்” என்கிற சுயநல காரணத்தைச் சொன்னார் கம்மு.

FJ மீது ஆதிரை தொடுத்த வழக்கு - யார் பக்கம் தவறு?

வழக்காடு மன்றம். FJ மீது ஆதிரை தொடுத்த வழக்கு. “எனக்கும் FJ-க்கு லவ் எல்லாம் இல்லை. பிரெண்ட்ஷிப் மாதிரி ஒண்ணு இருந்தது. அவ்வளவுதான். ஆனா நான் வெளியே போயிட்ட பிறகு ‘ஆதிரை என்னை வெச்சு லவ் கன்டென்ட் பண்ண டிரை பண்ணா.. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்’ன்னு FJ சொல்றாரு. ‘மென் கார்டு’ வெச்சு பிளே பண்றாரு. என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு. இதே மாதிரி இன்னொரு பொண்ணு கிட்டயும் பண்ணாரு. என் மேல சொல்லப்பட்டது பொய்ன்னு ப்ரூவ் பண்ணணும்” என்பதுதான் ஆதிரை தந்த வழக்கின் உள்ளடக்கம்.

ஒரு பார்வையாளராக இந்த விஷயத்தை பிளாஷ்பேக்கில் பார்த்தால் FJ-வும் ஆதிரையும் காதலர்கள் போலத்தான் நடந்து கொண்டார்கள். அவர்களின் சேட்டைகள் அப்படித்தான் இருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் FJ விலகி விட்டார். தன்னால் ஆதிரையின் ஆட்டம் கெடக்கூடாது என்கிற நல்லெண்ணமா, அல்லது தன்னுடைய பெயர் டேமேஜ் ஆகக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வா என்று தெரியவில்லை.

BB Tamil 9 - Day 65
BB Tamil 9 - Day 65

இரண்டாவதுதான் காரணம் என்றால், ஆதிரைக்குப் பின்னால் வியானாவிடமும் ஏறத்தாழ அதையேதான் செய்தார் FJ. இந்த நோக்கில் ஆதிரையின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது.

எனில் ஆதிரையின் தரப்பில் குற்றமே இல்லையா? ‘இங்க எல்லோருக்குமே சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. அப்படியாகத்தான் FJவுடன் நான் பழகினேன். அது பிரெண்ட்ஷிப்பிற்கு மேல ஒண்ணு” என்கிறார் ஆதிரை. FJ செய்தது குற்றம் என்றால் அதற்கு இடம் தந்த ஆதிரையின் மீது கொஞ்சம் தவறு இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் ஒரு பெண் இப்படி வெளிப்படையாக வழக்கு தொடர முடிவு செய்கிறார் என்றால் அவருடைய தரப்பில் உண்மை இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இந்த விசாரணையின் மூலம் அவருடைய பெயரும் டேமேஜ் ஆகலாம்.

விக்ரமின் சாமர்த்தியமான வாதம் - எஸ்கேப் ஆன FJ

இந்த வழக்கில் தீவிரமான வாதப் பிரதிவாதங்கள் நடந்தால் அது FJவிற்கு மிகவும் டேமேஜாக அமையும் என்பதை உணர்ந்த வக்கீல் விக்ரம், “நீ மன்னிப்பு கேட்டுடு.. ஆனா ஒரு கண்டிஷன். இந்த விஷயத்தை இனி ஆதிரை பேசக்கூடாது” என்று சாமர்த்தியமான பாயிண்ட்டை ஆலோசனை சொல்ல, அதற்கு FJ-வும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்.

ஆனால் நீதிமன்றத்தில் தனது ஓப்பனிங் ஆர்க்யூமென்ட்டை ஆரம்பித்த விக்ரம் “இது தவறான புரிதலில் தொடுக்கப்பட்ட வழக்கு” என்று துவங்கியது சரியானதாகத் தெரியவில்லை. ‘சாஷ்டாங்க நமஸ்காரம்’ என்று முடிவு செய்த பிறகு எதற்கு டிஃபென்ஸிவ்?

தனது தரப்பை கால் மணி நேரத்திற்கு ஆதிரை நீட்டி முழக்க “என்னம்மா லென்த்தா போயிட்டே இருக்கு” என்று சலித்துக் கொண்டார் நீதிபதி. என்னதான் ஆதிரை தனது குற்றச்சாட்டை நீட்டி முழக்கினாலும் ‘மாஸ்டர் ஒரு ஊத்தப்பம்’ என்கிற காமெடியாக ‘ஒப்புக்கறேன் எஜமான்’ என்று FJ சரண் அடைந்து விட்டார்.

BB Tamil 9 - Day 65
BB Tamil 9 - Day 65

FJவை வேண்டுமென்றே தப்பிக்கவிட்டாரா அமித்?

FJ-வை குறுக்கு விசாரணை செய்ய விரும்பினார் அரேரா. “மன்னிப்பு கேக்கறவங்க எதுக்கு இது தவறான புரிதல்ன்னு ஆரம்பத்துல சொனனாங்க?” என்று அரோ சரியான பாயிண்ட்டை முன் வைத்தார். “அதான் குற்றத்தை ஒத்துக்கிட்டாங்களே.. அப்புறம் எதுக்கு விசாரணை” என்ற அமித் வழக்கை முடித்து வைத்து விட்டார். இன்னொரு நீதிபதியான சுபிக்ஷாவிற்கு இதில் உடன்பாடில்லை.

அமித் செய்தது சரியா என்றால், நடைமுறை நோக்கில் சரி என்றுதான் தோன்றுகிறது. ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு விசாரணையை இழுப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல். ஆனால் பிக் பாஸ் கோர்ட் என்பது வேறு. இந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் சாட்சியங்களோடு நிகழும் போது FJ-வின் முகமூடி அம்பலமாகும் என்று கணக்கு போட்டு வைத்திருந்த ஆதிரை இதனால் எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்தார். பாருவும் அமித்திடம் தனது ஆட்சேபத்தைச் சொன்னார்.

BB Tamil 9 - Day 65
BB Tamil 9 - Day 65

இந்த வழக்கில் ஆதிரை வென்றாலும் கூட அவருக்கு திருப்தியில்லை. “எப்படி சிம்பதி கிரியேட் பண்ணி சிம்ப்பிளா தப்பிச்சிட்டான் பார்த்தியா?” என்று மனம் புழுங்கினார்.

“இந்தப் பிரச்னையை இத்தோட முடிச்சிடுங்க” என்று அரோ பஞ்சாயத்திற்கு வர பிறகு வேறு ஒரு டிராமா நடந்தது. “கோர்ட்ல நிரூபிக்கறதுதான் என் நோக்கம்” என்ற ஆதிரையிடம் “இங்க கூட காமிரா இருக்கு.. வா பேசலாம்” என்று நியாயஸ்தன் போல பேசினார் FJ. ரம்யா வந்து சாட்சியம் சொன்ன பிறகு தடாலென்று பல்டி அடித்து ‘அம்மா சத்தியமா நான் அப்படிப் பண்ணலை’ என்று கெஞ்சுவதுபோல் அனுதாபம் தேடி, மீண்டும் ஆதிரையின் மீது சாய்ந்து கொண்டதும், அதற்கு அவரும் அனுமதித்ததும் என்ன மாதிரியான வழக்கு இது என்று புரியவில்லை.

ஆதிரைக்கு உண்மையிலேயே FJ மீது கோபமிருந்தால் இந்தச் சமயத்தில் விலகியிருக்க வேண்டும். அவருக்கு உண்மையிலேயே FJ மீது கோபமா, அல்லது தான் சென்ற பிறகு வியானாவுடன் பழகியதால் ஏற்பட்ட பொசசிவ் கோபமா என்பது புரியவில்லை.

FJ மீது பாரு தொடுத்த வழக்கு - உண்மையா, பழிவாங்கலா?

அடுத்த வழக்கும் FJ மீதுதான். வழக்கு தொடுத்தவர் பாரு. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அமித்தையும் பாருவையும் இணைத்து FJ தவறாகப் பேசி விட்டாராம். இரண்டு, பாரு இந்த வீட்டில் லவ் கன்டென்ட் மட்டுமே செய்து கொண்டிருக்கிறாராம்.

இது செல்லாத வழக்கு என்பது வெளிப்படை. எப்படி பிக் பாஸ் அனுமதித்தார் என்று தெரியவில்லை. பாரு சம்பந்தப்பட்டது என்பதால் கச்சா முச்சா நடந்து நிறைய சண்டை நிகழும் என்று எதிர்பார்த்திருக்கலாம்.

“அமித் கூட பாரு டேட்டிங் போறாங்கன்னு சொன்னது ஒரு நார்மல் ஜோக். அப்ப பாரு கூட சிரிச்சாங்க. அப்புறம் வந்து ‘அந்த மாதிரி பேசாதீங்கன்னு என் கிட்ட தனியா சொன்னாங்க. அப்பவே நான் ஸாரி கேட்டுட்டேன்” என்று FJ சொல்ல “அமித் கிட்ட மன்னிப்பு கேட்ட FJ என் கிட்ட ஸாரி கேட்கவேயில்லை…. என்ற பாரு,

BB Tamil 9 - Day 65
BB Tamil 9 - Day 65

இன்னொரு சமயத்தில் ‘FJ என் கிட்ட ஸாரி கேட்ட அப்புறம்’ என்று மாற்றி மாற்றி பேசினார். வக்கீல் சபரி இதை கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார்.

பாரு வழக்கில் இரண்டாவது காரணமான ‘லவ் கன்டென்ட்’ என்பதை ‘ஆமாம்.. நீ அப்படித்தான் பண்றே’ என்று தீர்மானமாக சொன்னார் FJ. ‘அப்படி பண்றது அவங்க இஷ்டம்’என்று நீதிபதி சொல்ல, பாருவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததில் அம்மணிக்கு ஒரே குஷி.

தீர்ப்பு முடிந்ததும் பாருவிற்கும் FJ-விற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ‘8th std பய’ என்கிற மாதிரி கிண்டலாகப் பேசினார் பாரு. “அவ என் கிட்ட இருந்து வார்த்தைகளை பிடுங்க முயற்சி பண்ணான். நான் தப்பிச்சிட்டேன்” என்று பிறகு சபரியிடம் சொல்லி மகிழ்ந்தார் பாரு.

“என் கேஸ்ல எப்படி பண்ணான்.. ஆனா பாரு கேஸ்ல எப்படி பண்ணான் பத்தியா?” என்று இரண்டு வழக்குகளிலும் FJ நடந்து கொண்ட விதத்தை சரியாக சுட்டிக் காட்டினார் ஆதிரை. “உன் வாயாலதாண்டா கெடற” என்று FJ-வை கனி கண்டிக்க “முதல் கேஸ் மாதிரி ரெண்டாவது சீரியஸ் கிடையாது. ஜாலியா பேசினத அந்தம்மா சீரியஸா காட்டறாங்க’ என்றார் FJ.

வழக்கு முடிந்தும், தீர்ப்பு சாதகமாக வந்தும் கூட பாருவால் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியவில்லை. FJவிடம் ஒரண்டை இழுத்துக் கொண்டே இருந்தார். “நான் அப்பவே தனியா ஸாரி கேட்டுட்டேன். ஆனா அதை நீ மறைச்சு.. கோர்ட்ல ஸாரி கேட்கணும்ன்னு பிடிவாதம் பிடிச்சே. லவ் கன்டென்ட் பண்றேன்னுதான் சொன்னேன். அது தப்புன்னு சொன்னேனா?” என்று பாருவிடம் மல்லுக்கட்டினார் FJ.

BB Tamil 9 - Day 65
BB Tamil 9 - Day 65

FJ வும் பாருவிற்கு நிகராக வாய் பேசுபவர் என்றாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை FJ-வை அவமானப்படுத்தவே பாரு வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது வெளிப்படை.

அடுத்த வழக்கு, பாரு அவமதிப்பாக பேசி விட்டார் என்று அரோரா வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில் என்ன நடக்கும் என்பதை இன்று பார்க்கலாம்.

``'ஓசி சேலை’னு என்னை எப்படி அவங்க பேசலாம்; புகார் தரலாம்னு இருக்கேன்!” – நடிகை கம்பம் மீனா

’பாக்கியலட்சுமி முதலான பல சீரியல்களில் நடித்தவர் நடிகை மீனா. கம்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார்.இவர் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கடந்த இரு தினங்களாக சுற்றி வருகிறது.அதாவது ... மேலும் பார்க்க

BB Tamil 9: "அரோராவைப் பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க"- பார்வதியை சாடிய விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 66 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக இருக்கிறார்.மே... மேலும் பார்க்க

Exclusive: திரும்ப ரெண்டு தடவை பிக்பாஸ் கூப்பிட்டாங்க ஆனா.. - பிரதீப் ஆண்டனி

பிரதீப் ஆண்டனி. பிக்பாஸ் சீசன் 7 ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர். 'சிறப்பாக விளையாடுகிறார்' என வெளியில் பரவலாகப் பேச்சு எழத் தொடங்கிய ஒரு நாளில் அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.க... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னை மன்னிச்சிடு"- ஆதிரையிடம் மன்னிப்பு கேட்ட FJ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க