பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
Exclusive: திரும்ப ரெண்டு தடவை பிக்பாஸ் கூப்பிட்டாங்க ஆனா.. - பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி. பிக்பாஸ் சீசன் 7 ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர். 'சிறப்பாக விளையாடுகிறார்' என வெளியில் பரவலாகப் பேச்சு எழத் தொடங்கிய ஒரு நாளில் அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
காரணங்களாக 'அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்', 'இவர் இருந்தால் பெண் போட்டியாளர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது' என்பன போன்ற குற்றச் சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன.

அதேநேரம் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் சரி, வெளியிலும் சரி, இவருக்கு ஆதரவான குரல்களும் எழுந்தன. சினிமாத் துறை சார்ந்த பிரபலங்கள் சிலரே இந்த விஷயத்தில் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த பிறகு சினிமா பக்கம் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் கடந்தாண்டு இவருக்கு பூஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என அறிய அவரையே தொடர்பு கொண்டோம்.
எனக்கு இதுதான் கெட்ட வார்த்தை!
''சார் என் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டிருக்கேன், பிக் பாஸ், அது இதுன்னு ஏதாவது கேக்கத்தானே கூப்பிட்டீங்க' எனத் தயங்கியவரை கன்வின்ஸ் செய்து பேச வைத்தோம்.
''பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிற வாய்ப்பு வந்தபோது அவ்வளவு சந்தோஷமா இருந்தது. அதுக்கு முன்னாடி அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்ட சிலர் ஷோ பத்தி அப்படி இப்படினு சொல்லியிருந்தாலும் அதைப் பெரிசா பொருட்படுத்தத் தோணலை.

'எது ஒண்ணும் நம்ம கைக்குள்ளதானே இருக்கு. பார்த்துக்கலாம்'னு போனேன். அந்த வீட்டுல இருந்த வரை என் மனசுக்குத் தப்புனு தெரிஞ்ச எதையும் நான் அங்க செய்யலை.
'கெட்ட வார்த்தை பேசறான்'னு சொன்னாங்க. ஒரு சந்தர்ப்பத்துலயாவது கெட்ட வார்த்தை பேசாத ஒருத்தரைக் காட்டுங்க பார்க்கலாம். எல்லாருக்கும் ஒரே வாழ்க்கைச் சூழல் இருக்காது. சிலர் வளர்ற சூழல் அப்படி இருக்கும். என்னைப் பொறுத்தவரை 'நீ நாசமா போவ'னு யாரையாச்சும் சொன்னாதான் அது கெட்ட வார்த்தை. அந்த மாதிரியெல்லாம் நான் எப்பவும் யாரையும் பேசியதே இல்லை. அதுக்காக கெட்ட வார்த்தை பேசறதை நான் என்கரேஜ் செய்யலை. எல்லாருமே ஏதாவதொரு சூழல்ல கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தறவங்கதான்.
அதுவே ஒரு மெசேஜ்!
'இங்க இப்படியெல்லாம் பேசக் கூடாது'னு சொல்லி தண்டனை தந்திருக்கலாம். ஆனா வெளியில அனுப்பறதுக்கு இதையெல்லாம் காரணமா சொன்னதை நினைக்கிறப்பதான் சிரிப்பு வருது.
பாத்ரூமை திறந்து வச்சுக்கிட்டே பயன்படுத்தறார்னு ஒரு விஷயத்தைச் சொன்னாங்க. நான் குளிக்கறப்ப பாத்ரூம்ல பாடிப் பழக்கப்பட்டவன். உள்ள ஒருத்தன் பாடிட்டிருக்காங்கிறதே அடுத்தவனுக்கு 'உள்ள ஆள் இருக்கு'ங்கிற மெசேஜ்தானே.

இதையெல்லாம் நான் சொல்லலாம்தான். ஆனா திடீர்னு 'நீங்க இருந்தா எங்களுக்குப் பாதுகாப்பில்லை'னு சில பெண்கள் சொல்றாங்கன்னு சொன்னதும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது. என்ன ரியாக்ட் செய்யறதுனு தெரியலை.
தவிர, ஒருத்தன் மேல ஒரு புகார் வந்தா அவனையும் கூப்பிட்டு விளக்கம் கேட்டுதான் பிறகு முடிவெடுப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, எனக்கு என் தரப்பு பதிலைச் சொல்ல தேவையான அவகாசம் தரப்படலை. அதனால 'நடக்கறது நடக்கட்டும்'னு நடந்ததை ஏத்துகிட்டு வெளியில வந்துட்டேன்'' என்கிறார்.
''நீங்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்திருந்தால் டைட்டில் வாங்கியிருக்க முடியுமென நினைத்தீர்களா?
''நிச்சயமா. எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. 'டைட்டில் வாங்கிடுவானோ'னு பீதியான சிலர் கூட்டுச் சேர்ந்து என் மீது ஏன் புகார் தந்திருக்கக்கூடாதுனு கூட பின்னாடி யோசிச்சேன். ஆனா இப்ப இதையெல்லாம் பேசி என்ன பிரயோஜனம்? எனக்கு இப்படியொரு புகாரின் பேரில் வெளியில அனுப்பியதுல ரொம்பவே வருத்தம்தான். ஆனா அதையெல்லாம் மறந்துட்டேன். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, என் மீது புகார் சொன்ன சில போட்டியாளர்கள் கூட நிகழ்ச்சி முடிந்த பிறகு என் கூட பேசினாங்க. இப்பக்கூட தொடர்புல இருக்காங்க. ஏன் அடுத்த ரெண்டு சீசன்ல வைல்டு கார்டு என்ட்ரி யில பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே கூப்பிட்டாங்களே, 'போதும்டா சாமி'ன்னு கையெடுத்து கும்பிட்டு அனுப்பிட்டேன்''

''உங்க வீட்டில், நண்பர்கள் வட்டாரத்தில் என்ன சொன்னார்கள்?
'யாரும் எதுவும் சொல்லலை. அவங்களுக்கெல்லாம் என்னைப் பத்தித் தெரியும். ஒரு பொது தளத்துல பெண்கள் தொடர்பான புகாருக்கு ஆளாகி வெளியில வந்த பிறகுதான் எனக்கு கல்யாணமே நடந்துச்சுங்க.

சரி, இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க?
'கராத்தே பாபு' படத்துல வில்லனா நடிச்சிட்டு வர்றேன். சில புராஜெக்ட்டுகள்ல எழுத்தாளாரா ஒர்க் பண்றேன். டப்பிங் யூனியன்ல உறுப்பினரானது மூலமா டப்பிங் பேசறேன். கடவுள் ஆசிர்வாதத்துல ஏதோ போயிட்டிருக்கு''
வெளியில வந்த பிறகு பிக் பாஸ் பார்த்ததுண்டா? விஜய் சேதுபதி நடத்துகிற விதம் பிடிச்சிருக்கா? இந்த சீசன் பார்க்குறீங்களா?
முந்தின சீசன் அப்பப்ப பார்த்தேன். விஜய் சேதுபதி அவரு ஸ்டைல்ல பண்றார். கமல் சார் பண்ணியது அவருடைய ஸ்டைல். அதனால ரெண்டையும் ஒப்பிடத் தேவையில்லை. இந்த சீசன் ஆரம்பத்துல இருந்தே பார்க்கலைங்க. அப்பப்ப ரீல்ஸ்,, புரொமோ வேணும்னா பார்த்திருப்பேன்''
















