ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திம...
`சஞ்சு சாம்சன் தன்னை சஞ்சு `சாம்பியன்' என நிரூபிக்க... டெல்லியிலும் `விசில்' போட்டிருக்கிறது சிஎஸ்கே
ஏப்ரலில் சென்னையில் வைத்து டெல்லியை வீழ்த்தியது சிஎஸ்கே. அந்தப் போட்டியில் சதம் அடித்து அதற்கான முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் இருந்தார். இந்தப் போட்டியிலும் சாம்சனின் அற்புதமான இன்னிங்க்ஸ்தான் வெற்றிக் கோட்டை சிஎஸ்கேவினைத் தொட வைத்துள்ளது.
நடப்பு சீசனில் ஏற்கனவே ரிசப் பண்ட் மற்றும் ரஹானேவின் கேப்டன்ஷிகள் சில சந்தர்ப்பங்களில் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸின் அணித்தலைவராக அக்ஸர் படேல் எடுக்கும் சில முடிவுகளும் அதே தட்டில் அவரை நிறுத்திப் பார்க்கின்றன.

களத்தை எதிரிக்குக் கடினமாக்கி தனது படைக்கு எளிதாக்கும்படியான முடிவுகளை எடுப்பதுதான் ஒரு படைத்தளபதி கற்றுக் கொள்ள வேண்டிய முதல் போர்த் தந்திரம். கிரிக்கெட்டிலும் அத்தகைய முடிவுகள்தான் முக்கியமானவை. அதை அப்படியே தலைகீழாகச் செய்திருந்தார் அக்ஸர். டாஸ் எனும் ஒற்றைச் சாளரம் எண்ணற்ற கதவுகளை திறக்க வல்லது என்பதால் அத்தருணத்தில் ஒரு கேப்டன் எடுக்கும் முடிவு மொத்த போட்டியின் போக்கையும் மாற்ற வல்லது.
அக்ஸர் அங்கேயே தனக்கான வாய்ப்பை தவற விட்டிருந்தார். களம் போகப் போக இன்னமும் பேட்டிங்கிற்கு சவால் விடுவதாக இருக்கும், எனவே பேட் செய்து இலக்கை நிர்ணயித்து விடுவதே தங்களை பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கும் என அக்ஸர் கருதினார்.
ஆனால் டி20 பிட்ச்களுக்குரிய வழக்கமான நடைமுறையிலிருந்து மாறி ஆரம்பத்தில் இருந்தே நான்காவது நாள் இந்திய டெஸ்ட் களம் போல பௌலிங்கிற்கு குறிப்பாக சுழல் பந்துவீச்சிற்கு ஆதரவுக்கரம் நீட்டுவதாக களம் அமைந்திருந்தது. விளைவு பவர்பிளேயின் ஆறு ஓவர்களில் மூன்று ஓவர்களை அகீல் ஹொசைனை கெய்க்வாட் வீச வைத்தார். வெறும் 37 ரன்கள் மட்டுமே வந்து சேர்ந்ததும் அதன் காரணமாகத்தான்.
பந்து நன்றாகவே டர்ன் ஆக அதனை மிகச் சிறப்பாக அகீலும் பயன்படுத்தியிருந்தார். புள்ளி வைத்து கோலம் போடுமளவு டாட் பால்களால் அந்த ஓவர்கள் நிரம்பியிருக்க, பௌலர்கள் வீசிய ஒரு சில மோசமான பந்துகள் மட்டும் பவுண்டரியை தாண்டி அதனை வண்ணமயமாக்கி இருந்தன. நடப்பு சீசனில் பேட்டிங்கில் மோசமான பவர்பளே ரெக்கார்டை டெல்லிதான் வைத்துள்ளது;
46.4 சதவிகித டாட் பால்கள், 8.35 எனும் ரன்ரேட் என எல்லா அளவீடுகளிலும் டெல்லி மோசமாகவே ஆடியுள்ளது. இந்தப் போட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல. அகீலின் ஸ்பெல்லுக்குப் பின் இரு ஓவர்கள் நூர் அஹ்மதுக்கு தரப்பட, அந்த இரண்டிலுமே கருண் நாயர் மற்றும் ராணாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியின் ஓட்டத்திற்கு மொத்தமாக நூர் அஹ்மத் தடைசெய்தார். அகீல் மற்றும் நூர் கூட்டாக ஏழு ஓவர்களை வீசி வெறும் 41 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தது சிஎஸ்கேவிற்கு சாதகமானது.

அக்ஸர் எடுத்ததில் இன்னொரு மோசமான முடிவு கம்பேக் கொடுப்பார் என கருண் நாயரை முன்னதாகக் களமிறக்கி, ஃபார்மில் உள்ள சமீர் ரிஸ்வியை இம்பேக்ட் பிளேயராக பின்வரிசையில் கொண்டு வந்தது தான். இதனால் மோசமான கட்டத்தில் சமீரை உள்ளே கொண்டு வர வேண்டிய சூழல் உருவானது மட்டுமல்ல, பௌலிங்கிற்கும் ஒரு கை டெல்லிக்கு குறைந்தது.
தொடர் முழுவதுமே சிறப்பான பங்களிப்பை அளித்துக் கொண்டுள்ள சமீரை முன்னதாகவே களமிறக்கி இருந்தால் விக்கெட் சரிவை ஒருவேளை கட்டுப்படுத்தி இருக்கலாம். டாப் 5 விக்கெட்டும் வீழ்த்தப்பட்டு 12 ஓவர்களில் வெறும் 73 ரன்கள் எடுக்கப்பட்டதற்கு சமீர் சப்ஸ்ட்யூட்டாக அமர்த்தப்பட்டதும் காரணமாக மாறி விட்டது. கேப்டனாக மட்டுமல்ல அக்ஸர் படேல் பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்கவில்லை.
நடப்பு சீசனில் ஆடியுள்ள 10 போட்டிகளில் வெறும் 33 ரன்களை மட்டுமே அக்ஸர் எடுத்துள்ளார். ஸ்டப்ஸ் மற்றும் சமீர் இணை 47 பந்துகளில் கொண்டு வந்த 65 ரன்கள் தான் ஓரளவேனும் சவால்விடும் படியிலான இலக்கை டெல்லியை நிர்ணயிக்க வைத்தது. உண்மையில் பேட்ஸ்மேனுக்கு இவ்வளவு சவால் விடும் களத்தில் இந்த ஸ்கோர் மோசமில்லை என்பதே உண்மை. இருப்பினும் இந்த இணை ஏற்படுத்திய தாக்கத்தில் ஒரு பாதியேனும் டாப் 5 வீரர்களால் ஏற்படுத்தப்பட்டு இருந்து, இன்னமும் 20 - 25 ரன்கள் வந்திருந்தால் கூட போட்டியின் முடிவே மொத்தமாக மாறியிருக்கும்.
டெல்லி கேப்பிடல்ஸின் இன்னிங்க்ஸின் இறுதியில் குறிப்பாக இறுதி மூன்று ஓவர்களிலேயே களம் சற்றே பேட்ஸ்மேன்களுக்கு கருணை காட்டுவதைப் பார்க்க முடிந்தது. எனவே சிஎஸ்கே அவசரமின்றி விக்கெட் விழாமல் நிதானமாக போட்டியை அணுகினாலே சேஸ் செய்து விடலாம் என்பது தான் நிலை. பவர்பிளேயின் முடிவில் 44/1 என்கின்ற ஸ்கோரும் சிஎஸ்கே சரியான தடத்தில் பயணிப்பதையே உறுதிப்படுத்தியது.

சிஎஸ்கேவிற்கு இத்தகைய சேஸிங் புதிதல்ல, கடினமும் அல்ல. ஆனால் ஓப்பனர் சஞ்சு சாம்சனைப் பொறுத்தவரை இந்த அணுகுமுறை அவரது ஆட்ட பாணிக்கு எதிரானது, எதிர் காற்றில் ஸ்லோ சைக்கிளிங் போவதைப் போன்றது, கிட்டத்தட்ட அவரால் செய்ய முடியாதது என்றே சொல்லலாம். அதிவேகமாக ஒரு கேமியோ இதனைவிட அவருக்கு சுலபமாக இருக்கும். இத்தகைய குறைந்த ஸ்கோரை பேட்டிங்கிற்கு பெரிய ஆதரவளிக்காத களத்தில் சேஸ் செய்யும் போது ராகுல் டிராவிட்டின் பொறுமையோடும் விவிஎஸ் லட்சுமணனின் நிதானத்தோடும் ரன்சேர்க்க வேண்டும். சாம்சன் இதனை மிக மிகச்சிறப்பாக கையாண்டார்.
வெகு மெதுவாக தொடங்கி பின் 11-வது ஓவருக்குப் பின் அணி வேர்பிடித்து காலூன்றிய பின் வேகம் பிடித்தது சாம்சனின் ஆட்டம். முதல் 22 பந்துகளில் வெறும் 22 ரன்கள் மட்டுமே சாம்சனின் பேட்டில் இருந்து வந்திருந்தன. ஆனால் அடுத்த பத்து பந்துகளிலேயே அரை சதத்தை தொட்டு விட்டார் என்பது தான் எவ்வளவு வேகமாக ஆட்டத்தின் கியரை சாம்சனின் பேட் மாற்றியது என்பதற்கான சாட்சி. அந்த சமயத்தில் கூட கண்மூடித்தனமாக பேட்டை சுழற்றாமல் `Calculated Risk' உடனே பேட் செய்திருந்தார்.
எங்கிடி மிகச் சிறப்பாக பந்து வீசிய 14-வது ஓவரில் எல்லாம் ஐந்து பந்துகளைச் சந்தித்து வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து சமாதான உடன்படிக்கையில் கையொப்பமிட்டிருந்தார். எங்கே தாக்க வேண்டும் எங்கே பதுங்க வேண்டும் என்பதை அறிந்து ஆடியது சாம்சனின் பேட். சாம்சனுக்கு துணையாக நின்று ஆடிய கார்திக் ஷர்மாவின் ஆட்டத்திலும் அதே பக்குவம் இருந்ததால்தான் விக்கெட் விழாமல் பதட்டமேயின்றி சிஎஸ்கேவினால் 17.3 ஓவர்களிலேயே இலக்கை எட்ட முடிந்தது.

சென்னையில் சாம்சன் அடித்த அதிவேத சதம் மிக மிகச் சிறப்பானது தான். ஆனாலும் அவர் தனது இயல்பில் இருந்து மாறி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களைக் குவித்த இந்த இன்னிங்க்ஸ் காலத்திற்கும் நின்று பேசக்கூடியது. இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் 40 ரன்களுக்கு மேல் எடுத்த எல்லாப் போட்டிகளிலும் சிஎஸ்கே வென்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவினை மேலே ஏற்றி விடா விட்டாலும் அவர்களது நம்பிக்கையை எகிறச் செய்திருக்கிறது. கடைசி நான்கு போட்டிகளில் மூன்றில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கும் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது.!

















