வடகொரியா: அதிகாரத்தின் அடுத்த வாரிசு; தலைமைப் பொறுப்புக்கு மகளை முன்னிறுத்தும் ...
சூரியனுக்கு காப்புரிமை இல்லை: மனிதகுலத்தை காப்பாற்றிய போலியோ தடுப்பூசி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
கிட்டத்தட்ட உலக அளவில் போலியோ ஒழிக்கப்பட்ட நிலையில் 70 ஆண்டுகளுக்கு முன்பு மனிதகுலத்தைக் காக்க போலியோவிற்கு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்கை உலகம் மறந்துவிட்டது என்றே கூறலாம். தான் கண்டறிந்த போலியோ தடுப்பூசிக்கு காப்புரிமை வேண்டாம் என ஜோனாஸ் சால்க் மறுத்ததால் மட்டுமே உலக அளவில் போலியோவிற்கு எதிரான நோய்த் தடுப்பு சாத்தியமானது.
கண்ணுக்குத் தெரியாத போலியோ தீநுண்மி சிறு குழந்தைகளை ஊன்றுகோல்களுடன் வலம் வரச் செய்தது. முடமாக்கி சக்கர நாற்காலிகளில் அமரச் செய்தது. இரும்பு நுரையீரல் என்று அழைக்கப்பட்ட காற்றோட்டி (வென்டிலேட்டர்) இயந்திரம் மூலம் சுவாசிக்க செய்தது.
அச்சம் காரணமாக ஒவ்வொரு கோடைக்காலத்திலும் பொது நீச்சல் குளங்களும் திரையரங்குகளும் மூடப்பட்டன.
தங்கள் குழந்தை அடுத்த பலியாகிவிடுமோ என்ற பயத்தில் பெற்றோர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களை கூட ரத்து செய்தனர். தடுப்பூசிகள் வருவதற்கு முன்பு போலியோ ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை முடமாக்கி கொன்றது, அச்சத்தைப் பரப்பியது.

போலியோவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மற்றும் அவரது வழக்கறிஞர் பேசில் ஓ'கானர் ஆகியோரால் நிறுவப்பட்ட லாப நோக்கற்ற தேசிய இளம்பிள்ளை வாத அறக்கட்டளைக்கு நிதி வழங்க அமெரிக்கர்கள் வெள்ளை மாளிகைக்கு தலா 10 சென்ட் நாணயங்களை அனுப்பி வைக்க பணிக்கப்பட்டனர்.
லூசில் பால் முதல் எல்விஸ் வரையிலான பிரபலங்கள் இந்த "மார்ச் ஆஃப் டைம்ஸ்" (10 சென்ட் நாணயங்களின் அணிவகுப்பு) திட்டத்தை ஊக்குவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர், குழந்தைகளைப் பெற்ற இந்த கொடிய நோயை வெல்வதற்காக நிதி திரட்ட வீடு வீடாகச் சென்றனர்.
திரட்டப்பட்ட நிதியின் ஒரு பகுதி 33 வயதான பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோனாஸ் சால்க் மற்றும் அவரது குழுவினருக்குச் சென்றது. ஆராய்ச்சி நிதி எளிதாக கிடைத்த காரணத்தால் இன்ஃப்ளூயன்சா நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்பிய ஜோனாஸ் சால்க் போலியோ நோய் பற்றி ஆராய்ச்சி செய்தார்.
மருத்துவ மரபுகளுக்கு எதிராக செயலிழந்த வைரஸைக் கொண்டு சால்க் உருவாக்கிய தடுப்பூசி முதலில் ஆய்வகத்தில் உள்ள செல்களிலும் அதன்பின் குரங்குகளிலும் போலியோவால் பாதிக்கப்பட்ட இளம் வயதினரிடமும் பரிசோதிக்கப்பட்டது. சவக்கிடங்குக்கும் இருட்டறைக்கும் இடையில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இக்குழுவினர் உலகின் முதல் வெற்றிகரமான போலியோ தடுப்பூசியை உருவாக்கினர்.

1953-ல், ஆரோக்கியமான குழந்தைகளிடம் தடுப்பூசியைச் சோதிக்க சால்க்கிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர் தனது மூன்று மகன்களிடமிருந்து அதைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பிட்ஸ்பர்க் பள்ளி மாணவர்களுக்கும் அதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள 1.8 மில்லியன் குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பரிசோதனையே மருத்துவ வரலாற்றின் மிகப்பெரிய களசோதனையாக கருதப்பட்டது.
ஏப்ரல் 12, 1955 அன்று, சால்க் குழுவினர் தயாரித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று அறிவிக்கப்பட்டபோது தேவாலய மணிகள் ஒலித்தன, குழந்தைகள் எங்கும் போய்வர அனுமதிக்கப்பட்டனர், உலகம் முழுவதும் உள்ள செய்தித்தாள்கள் போலியோ மீதான இந்த வெற்றியை கொண்டாடி தீர்த்தன.
வெற்றி கொண்டாட்டத்தின் போது தடுப்பூசிக்கு காப்புரிமை பெறப் போகிறீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் ஜோனாஸ் சால்கிடம் கேட்டபோது தடுப்பூசி மக்களுக்குச் சொந்தமானது என்றும், அதற்கு காப்புரிமை பெறுவது "சூரியனுக்கு காப்புரிமை பெறுவது" போன்றது என்றும் கூறினார்.

காப்புரிமை தடை இல்லாத காரணத்தால் பல முன்னணி மருந்து உற்பத்தியாளர்களும் இந்த தடுப்பூசியை பெரும் அளவு உற்பத்தி செய்து அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் செய்தனர். 1955 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளுக்கிடையில் 400 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் விநியோகிக்கப்பட்டு 90% போலியோ நோய் பாதிப்பு குறைக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் போலியோ பற்றிய அச்சம் நீங்கியது.
போலியோ தடுப்பூசி உருவாக்க கூட்டு முயற்சியில் சால்குடன் பணியாற்றியவர்கள் தொடங்கி சோதனை தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்கள் கைகளை நீட்டிய தன்னார்வலர்கள் வரை பலரின் பங்கும் இருந்தது.
பிட்ஸ்பர்க் வருவதற்கு முன்பு பெரும் அழிவைக் கொண்டுவந்த அணு குண்டு மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்றியவர் மூத்த விஞ்ஞானி ஜூலியஸ் யங்னர். மனித திசுக்களில் யுரேனியம் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்த அறிவியல் சாதனையிலும் நோயின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றிய நற்செயலிலும் ஈடுபட்டவர் யங்னர்
இளம் மருத்துவர் சிட்னி புசிஸ் குழந்தைகளின் உயிர் காக்க செயற்கை சுவாசத்திற்காக இரண்டு வயது குழந்தைகளுக்கு கூட மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சைகளைச் செய்தார். இரவில் சிட்னி புசிஸ் வீட்டிற்கு வரும்போது அவரால் அவரின் இரு குழந்தைகளுக்கு போலியோ நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக அவரது மனைவி சில்வியா அஞ்சினார்.
சால்க்கின் ஆய்வகத்தில் பணிபுரிந்த எத்தில் "மிக்கி" பெய்லி என்ற முதுகலை மாணவி உறிஞ்சுக் குழல் (பிப்பெட்) மூலம் வாயால் கொடிய போலியோ தீநுண்மியை உறிஞ்சிப் பிரித்தெடுத்தார்.

போலியோ புனர்வாழ்வு துறையில் நிபுணத்துவம் பெற்ற புனர்வாழ்வு மைய நிர்வாகி டாக்டர் ஜெஸ்ஸி ரைட், முதன் முதலில் தடுப்பூசி சோதிக்கப்பட்ட ஊனமுற்ற குழந்தைகளுக்கான இல்லத்தின் மருத்துவ இயக்குனர் டி.டி. வாட்சன், மருத்துவ கூடத்தை நிர்வகித்த தங்களுக்கு எவ்வித பலனும் இல்லை என தெரிந்தும் தடுப்பூசிக்காக தங்களை சோதனை எலிகளாக மாற்றிக்கொள்ள முன்வந்த ஜிம்மி சார்க்கெட் மற்றும் ரான் ஃப்ளின் போன்ற போலியோ நோயாளிகள் போன்றோரின் பங்கு போலியோ ஒழிப்பில் குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 24, 2025 அன்று, சாக் தடுப்பூசிக்கு 70 வயதானபோது, நியூயார்க் நகரத்தில் உள்ள ரூஸ்வெல்ட் தீவில் மனிதகுலத்தால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பெரியம்மை நோய்க்கான மருத்துவமனையின் இடிபாடுகளுக்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் நடைபெற்ற உலக போலியோ தின நிகழ்ச்சி நடைபெற்றது.
தற்போது இரண்டு நாடுகளில் மட்டுமே காணப்படும் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்படும் போது அந்த அசாதாரண சாதனையை உலகம் அங்கீகரிக்க தவறிவிடுமோ என்பதே இத்துறை சார்ந்த வல்லுநர்களின் மிகப்பெரிய அச்சம்.



















