செய்திகள் :

கோபுரங்கள் சாய்வதில்லை! - ஒரு தாயின் பாடம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் /விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

வீட்டுக்குள் நுழையும் போதே பார்வதியின் சத்தம் உரத்துக் கேட்டது. வாசலில் கிடந்த சின்னக் காலணிகளைப் பார்த்ததும் மகிழ்ச்சி பொங்கியது.

ஓ, லாவண்யா வந்திருக்கிறாள். அவள்குழந்தை ஹரியின் விளையாட்டு விஷமம் இரண்டுமேஅதிகம்தான் இரண்டு வயதுக்கு என்று நினைத்தபடியே உள்ளே வந்தவள் திகைத்து நின்றாள்.

லாவண்யா கோபமாக எதையோ பேசிக் கொண்டிருந்தாள்.‌பார்வதியின் சீற்றமும் அந்த சூழலும் தூக்கி வாரிப் போட அப்படியே நின்றாள் சுந்தரி.

"என்னோட விஷயத்திலே யாரும் தலையிட வேண்டாம் .‌நான் முடிவெடுத்தால் முடிவெடுத்ததுதான்". கத்திவிட்டு லாவண்யா உள்ளே செல்ல சுந்தரி பார்வதியின் அருகில் சென்றாள்.

"என்ன ஆச்சு?"

"இன்னும் என்ன ஆகணும்! எதற்கெடுத்தாலும் அவசரம் ஆத்திரம் தான். பிரபுவை விட்டு பிரிந்து வரப் போகிறாளாம்".

'என்னது ?'

அதிர்ந்து போனாள் சுந்தரி.

காதலித்தவனைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று எவ்வளவு பிடிவாதம் பிடித்தாள்.

அப்போது பார்வதியும் பிரகாஷும் எவ்வளவு தூரம் கெஞ்சினார்கள்! அதையெல்லாம் சட்டை செய்யாமல் தான் நினைத்தது தான் சரி என்று போராடி திருமணம் செய்து கொண்டவள் மூன்றே வருடங்களில் இப்படி ஒரு முடிவு எடுக்கிறாள் என்றால் என்ன நடந்திருக்கக்கூடும்!

எதிர்பார்த்ததை விட பிரபு அமைதியானவனாக நல்லவனாக இருந்தான்.

குழந்தையும் பிறந்து நன்றாகத்தானே இருந்தார்கள்.

"என்ன விஷயம்"

"நானே சொல்கிறேன். எனக்கு அவரோட குடும்பத்தை பிடிக்கலை .தம்பி தங்கை அப்பா அம்மா என்று மாற்றி மாற்றி வந்துவிடுகிறார்கள்.எனக்கு அது சரிப்படாது".

உள்ளேயிருந்து வந்து லாவண்யா பேசியதைக் கேட்டு திகைத்துப் போனாள் சுந்தரி.

"இதெல்லாம் ஒரு விஷயமா? எதற்காக இவ்வளவு அவசரமும் ஆவேசமும்!"

"நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். அம்மாவோட ஃப்ரெண்ட் அப்படிங்கிற லெவலோட நில்லுங்க ப்ளீஸ்."

எத்தனை வருடம் பழக்கம்! இவள் குழந்தையாக இருக்கும் போதிலிருந்து தொடர்ந்த அன்பின் இணைப்பை சட்டென்று

தூக்கி எறிந்த லாவண்யாவின் குரலில் அவள் மனமும் பேதப்பட்டிருப்பது தெளிவாகியது.

இப்போது எதுவும் பேசவேண்டாம் என்ற முடிவுடன் திரும்பிய சுந்தரியை பாய்ந்து வந்து கட்டிக் கொண்டாள் பார்வதி.எதிர்பாராத ஒரு பிரளயத்தை எதிர் கொள்ள முடியாது தளர்ந்து போயிருந்தாள் அவள்.


ஆயிரம் காலத்துப்பயிர் என்று கொண்டாடப்படும் ஒரு உறவு, பெற்றோர் உற்றோர் கூடி அமைத்துக் கொடுக்கும் ஒரு அழகான உறவு ,சின்ன சின்ன பிரச்சினைகளில் நீர்க்குமிழி போல உடைவது என்பது யாராலும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று.

பார்வதியின் முகமும் கண்களும் அவள் மிகவும்  நொந்து போயிருப்பதை தெளிவாக்கின.

நிமிடத்தில் தன்னை மாற்றிக் கொண்ட சுந்தரி லாவண்யாவை  தீர்க்கமாக நோக்கினாள்.

"உன்னோட முடிவு சரிங்கிறபோது உனக்கு ஏன் கோபம் வருகிறது? நியாயமான காரணங்கள் என்றால் உனக்கு சப்போர்ட்தானே செய்வோம்".

"யார்! நீங்கள்!"

அலட்சியமாக உதட்டை பிதுக்கினாள் அவள்.

"முதுகெலும்போ , மூளையோ இல்லாத ஒரு தலைமுறை உங்களுடையது.உங்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும் !"

அதிர்ந்து போனாள் சுந்தரி.

"என்ன பேசுகிறாய் என்று யோசித்து பேசு!"

கடிந்துகொண்ட பார்வதியை  ஏளனத்துடன் வெறித்துப்பார்த்தாள் லாவண்யா.

"கொஞ்சம் இரு, நான் பேசுகிறேன்.

உன் கணிப்புப்படி நாங்க முட்டாளாவே இருந்துட்டு போறோம். நீ பேசுவது சரியா என்று  மட்டும் யோசி."

"எனக்குப் பிடிக்கவில்லை."

ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள் அவள்.

இன்றைய தலைமுறைக்கு எல்லாவற்றிலும் அவசரமும் ஆத்திரமும் தான் முன் நிற்கிறது.

ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பது மாதிரி வாழ்க்கையையும்  நினைக்கிறார்கள். 

வேலை மாறுவது மாதிரி திருமணங்களை மாற்ற முடியும் என்று நினைக்கிறார்கள்.

ஒரு வேலை மாற்றத்துக்கே எத்தனையோ யோசிக்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கை அப்படியில்லையே!

"இவளை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லையே! "வாய்விட்டு புலம்பினாள் பார்வதி.

"பிரபுவிடம் என்ன குறை கண்டுபிடித்தாள் என்று  தெரியவில்லை. நல்ல  மாதிரி யாகத்தான் நடந்து கொண்டிருந்தான்".

"அதுதான் அவள் சொன்னாளே! அவன் வீட்டு ஆட்களைத்தான் பிடிக்கவில்லை என்று.

சந்தோஷமாக இருக்கவேண்டிய  சூழலை  சங்கடமாக மாற்றிக் கொள்கிறார்கள்".

"நீங்க என்ன பேசினாலும் சொன்னாலும் நான் என்முடிவைமாற்றிக்கொள்ளப்போவதில்லை".

சரணைத் தூக்கிக்கொண்டு வெளிவந்த லாவண்யா எரிச்சலுடன் சொன்னாள்.

"ஒரு நிமிஷம் லாவண்யா.உன்கிட்டே கொஞ்சம் பேசணும்."

"நீங்க என்ன பேசினாலும் நான் திரும்பிப் போகப் போவதில்லை."

"அப்படியே இரு! ",என்ற பார்வதி மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு நிதானமாக அவளை ஏறிட்டுப் பார்த்தாள்.

"நீ எங்களை முதுகெலும்பு இல்லாதவங்க அப்படின்னு சொன்னே! உண்மைதான். பல இடங்களில் நாங்கள் எங்களுடைய அடிப்படை சௌகரியங்களைக்கூட   விட்டு கொடுத்திருக்கிறோம். சமுதாயத்தில் பாதுகாப்பு வேண்டும் என்றுதான்.

அன்றைக்கு கூட தனி மனுஷியாக உடல் உழைப்பால் சாதித்தவர்கள், குடும்பத்தை முன்னேற்றியவர்கள் உண்டு.அது வேறு வழியில்லாமல் போன போது.புருஷன் குடிகாரனாக அல்லது வேறு சமாளிக்க முடியாத ஏதாவது பிரச்சினை வரும்போது தான்.வீட்டு வேலை பார்த்து இட்லி வடை சுட்டு என்று எப்படியெல்லாமோ பிழைப்பை நடத்தியவர்கள் உண்டு".

ஒரு நிமிஷம் நிறுத்தி நிதானித்தவள் மேலும் தொடர்ந்தாள்.

"ஆனால்அன்றைக்கு சமுதாயம் அவர்களை கண்ணியமாக நடத்தியது.

ஆனால்இன்றைக்கு அதே சமுதாயம் எப்படி மாறியிருக்கிறது தெரியுமா? 

எங்கே பார்த்தாலும் பாலினக் குற்றங்கள், கொலை , கடத்தல் என்று மாறியிருக்கிறது.

பெண்கள்  எல்லோரும் மிகவும் படித்து நல்ல வேலையிலும் இருக்கிறீர்கள். ஆனாலும் ஏன் இந்த சமுதாயம் இப்படி இருக்கிறது தெரியுமா?உங்களைப்போன்றவர்களால்தான். உங்களைப்பற்றி மட்டுமே நீங்கள் கவலைப்படுகிறீர்கள். உங்கள் குழந்தைகள் கூட இரண்டாம் பட்சம் தான்.

எங்கள் காலத்தில் தாத்தா பாட்டி அத்தை மாமா என்று எல்லா உறவுகளுடனும் வளர்ந்த குழந்தைகள் இன்றைக்கு தன்னந்தனியே அதுவும் அப்பா அல்லது அம்மா என்று யாராவது ஒருவர் மட்டுமே.

இந்த குழந்தைகள் வளர்ந்து பெரிய வர்களாகும்போது அவர்கள் அனுபவித்த வலி வேதனை எல்லாம் சமுதாயத்தின் மேல்தான் வரும். 

அறிவாளியாக, மிக சிறந்தவனாக  வளர்க்க வளர அவர்களுக்கும் சில அடிப்படை தேவைகள், கவனிப்பு தேவைப்படும்இல்லையா?"

"நான் நன்றாக வளர்ப்பேன்", லாவண்யா  சொன்னதை கேட்டு உரத்து சிரித்தாள் பார்வதி. 

"என்னதான் சித்திரமாக வளர்த்தாலும் அப்பா என்ற உறவு அந்த குழந்தைக்கு வேண்டாமா? அதை நீ எப்படி முடிவு செய்யமுடியும்!

ஒரு குழந்தையோட அரவணைப்புக்கு அப்பா அம்மா இரண்டு பேருமே தேவை. அந்தக் குழந்தை மனது எதற்கு ஏங்குகிறது என்று உனக்கு தெரியுமா?கணவன் மனைவியாக பிரிவதை விட தாய் தகப்பனாக பிரிவது மிகவும் வேதனையானது".

"இரண்டு கைகளில் ஒரு கையை விட்டு விட்டு, அல்லது இரண்டு கண்களில் ஒன்றை மூடிவிட்டு என்பது மாதிரிதான் ".

அவள் ஒன்றும் பேசாமல் மௌனம் சாதித்தாள்.

சின்ன சிவப்பு பொம்மை காருடன் விளையாடிக் கொண்டிருந்த சரண் மழலையாக பேசிக் கொண்டிருந்தது மட்டுமே அங்கு எதிரொலித்தது.

அவர்கள் மூவருமே அவனுடைய விளையாட்டை ரசித்தனர். 

ஒரு நிமிடம் தாமதித்த பார்வதி மீண்டும் தொடர்ந்தாள்.

" கவலையே இல்லாத உலகம் இந்த குழந்தையோடது.அதை யோசித்துப் பார்.நாளை ஒரு நல்ல மனிதனாக, சிறந்த பண்புள்ளவனாக  இவனுடைய எதிர்காலம் இருக்க வேண்டாமா? "

"தவிரவும்  எந்த ஒருநல்ல ஒரு மாலுமியும் கடலில் மிதக்கும்கப்பலை கரை சேர்க்காமல் போக மாட்டான் எந்த ஒரு சூழலிலும். தான் தப்பித்தால் போதும் என்று அவனால் ஒரு நாளும் நினைக்க முடியாது".

சுந்தரியின் பக்கம் திரும்பியவள், "ஒரு அம்மாவாக நான் என்ன சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் அவள் இஷ்டம்". 

இருவரும் அவளையே பார்த்திருக்க மேலும் தொடர்ந்தாள்.

"ஆனா ஒண்ணு, இவள் இங்கே தான் இருப்பாள் என்றால் வேறு வழியில்லாமல் இந்தக் குழந்தைக்காக, இந்த குட்டி சரணுக்காக நான் ஒத்துப் போவேன். ஆனா எப்பவும் இல்லாமல் இப்போதான் நான் முதுகெலும்பில்லாத முட்டாளாக தெரிகிறேன்", என்றவள் தன்னை மீறி அழுது கொண்டே உள்ளே சென்றுவிட்டாள்.

அதிர்ந்து போய் நின்றிருந்தவளைப் பார்த்து சுந்தரி சொன்னாள்.

"இப்போ புரியுதா! உன்னோட முடிவு உனக்கு மட்டும் இல்லாமல் எத்தனை பேருக்கு மன உளைச்சலைக் கொடுக்கிறது என்று.ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் என்பது மாதிரி எந்த ஒரு பிரச்னைக்குமே  நிறைய தீர்வுகள் இருக்கக்கூடும்.. யோசித்துப் பார் ".

பளார் பளார் என்று  அம்மா அறைந்திருந்தால் கூட இப்படி வலித்திருக்காது. 

பாதுகாப்பாக நல்ல கவனத்துடன் பச்சைப் பசேல் என்று வளர்க்க வேண்டிய ஒரு இளம் செடியை கட்டாந்தரையில் தூக்கி எறிவது என்ன நியாயம் என்று அவள் மனமே குற்றம் சாட்டியது. 

'அவசரப்பட்டு விட்டாய் லாவண்யா' என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவள் மெதுவாக விளையாடிக்கொண்டிருந்த சரணின் அருகில் போய் அமர்ந்து அவனை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டாள்.

-Kanthimathi Ulaganathan 

தேர்தல்

அறிவுத் தூதுவர்களுக்கு ஒரு சல்யூட்! : உன்னதமான மனிதர்களை கெளரவிக்கும் புதுக்கோட்டை வாசகர் பேரவை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திருநெல்வேலி: கல்லூரி மாணவரால் கண்டெடுக்கப்பட்ட பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்!

திருநெல்வேலியில் உள்ள மானூரில் மன்னர் காலக் கல்வெட்டுகள் பலவும் கிடைக்கின்றன. இதனால் ஆய்வாளர்கள் அங்கு அடிக்கடி சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் மேற்கு செழியநல்லூரில் 450 ஆண்டுகள் பழைமைய... மேலும் பார்க்க

டெல்லி: திருச்சி இளைஞரின் கவிதை புத்தகம் வெளியீடு - மத்திய அமைச்சர்கள், நடிகை ஹூமா குரேஷி பங்கேற்பு!

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் எழுதிய சுய முன்னேற்றம் குறித்த கவிதை புத்தகம் கோலாகலமாக வெளியிடப்பட்டது.புத்தகத்தின் பெயர்: என்கிரேட்ட... மேலும் பார்க்க

"நினைத்ததையெல்லாம் எழுதி விட்டேன்; இப்போது காலன் வந்தாலும் தயார்"- தெ.ஞானசுந்தரத்திற்கு அரசு மரியாதை

கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்தின் உடல் இன்று சென்னையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.பேச்சாளர், எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்த முன... மேலும் பார்க்க

மலையாளத்தில் பறம்பின் குரல்: `வீரயுக நாயகன் வேள்பாரி' - நூலை பெற்றுக்கொண்ட சு.வெங்கடேசன்!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம் `வீரய... மேலும் பார்க்க