நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கி...
சென்னையில் விதைக்கப்பட்ட மருத்துவக் கனவு! – மேரி ஷார்லீப்பின் தியாக வரலாறு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பெண்களுக்கான மருத்துவக் கல்விக்கும் மருத்துவச் சேவைக்கும் புதிய பாதையை உருவாக்கிய முன்னோடிகளில் முக்கியமானவர் மேரி ஆன் டேகோம் ஷார்லீப். தமிழக மருத்துவ வரலாற்றில் தனித்துவமான இடம்பெற்ற மேரி ஆன் டேகோம் ஷார்லீப் தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்ல என்றாலும், அவரது மருத்துவ வாழ்க்கையின் தொடக்கமும் வளர்ச்சியும் சென்னை நகரத்துடன் தொடர்புடையவை.

மேரி ஆன் டகோம்ப் ஷார்லீப் 1845ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் நாள், இங்கிலாந்தின் இலண்டன் நகரிலுள்ள பெத்னல் கிரீன் பகுதியில் பிறந்தார். அவரது தந்தை வில்லியம் சான்ட்லர் பேர்ட் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் செய்து வந்தார். தாயார் மேரி டகோம்ப். மேரி பிறந்த பத்து நாட்களிலேயே அவரது தாயார் உயிரிழந்தார். பெற்றோருக்கு ஒரே மகளாகப் பிறந்த மேரி, தாயை இழந்த பின்னர் தனது பாட்டியின் பராமரிப்பில் பாட்டியின் தீவிர கிறிஸ்தவ சுவிசேஷ குடும்பச் சூழலில் வளர்ந்தார். வளர்ந்தார். ஐந்து வயதாக இருந்தபோது தந்தை மறுமணம் செய்து கொண்ட பிறகு வளர்ப்புத் தாயின் பராமரிப்பில் வளர்ந்தார்.
மேரி ஷார்லீப் தனது தொடக்கக் கல்வியை இலண்டனில் உள்ள நியூவிங்டன் கிரீன் பகுதியில் செயல்பட்ட தனியார் பள்ளியில் பயின்றார். பின்னர், இலண்டனின் கிளாபம் பகுதியில் திருமதி.அட்கின்ஸ் நடத்தி வந்த பள்ளியில் தொடர்ந்து கல்வி கற்றார். மேரி ஷார்லீப் தனது பத்தொன்பதாவது வயதில் வழக்கறிஞராகப் பணியாற்றிய வில்லியம் மேசன் ஷார்லீப்பைச் சந்தித்தார். அவர் மேரியைவிட வயதில் மூத்தவராக இருந்ததுடன், திருமணத்திற்குப் பின்னர் இந்தியாவுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், இத்திருமணத்திற்கு மேரியின் குடும்பத்தினர் தொடக்கத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேரியின் உறுதியான விருப்பத்தின் காரணமாக 1865-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, 1866-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்தம்பதியினர் கப்பல் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
சென்னையில் எழும்பூரிலுள்ள ஸ்பர்டாங்க் சாலையில் வசித்தனர். வழக்கறிஞராகப் பணியாற்றிய கணவருக்கு உதவியாக, அவர் நடத்தி வந்த சட்ட இதழின் தொகுப்புப் பணிகளிலும் மேரி ஈடுபட்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உட்பட மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
சென்னையில் இந்து,இசுலாமியப் பெண்களில் பலர் சமூக மற்றும் மரபுக் கட்டுப்பாடுகளின் காரணமாக ஆண் மருத்துவர்களிடம் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவும், மகப்பேற்றின்போது மருத்துவ உதவி பெறவும் தயங்கினர். பெண் மருத்துவர்கள் இல்லாததால், பல பெண்கள் மகப்பேற்றின்போது முறையான மருத்துவ உதவியின்றி பெரும் துன்பங்களுக்கு உள்ளாவதை மேரி நேரில் கண்ட மூன்று குழந்தைகளுக்குத் தாயான மேரி, பெண்களின் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தாம் மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வந்தார். இதன் விளைவாக, தனது முப்பதாவது வயதில் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயிலத் தொடங்கினார்.

மெட்ராஸ் (சென்னை) மருத்துவக் கல்லூரியில் முதன்முறையாக பெண்கள் மருத்துவக் கல்வி பயில அனுமதி வழங்கப்பட்ட 1875-ஆம் ஆண்டு நான்கு பெண்களில் ஒருவராக சேர்ந்து, 1878-ஆம் ஆண்டு தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று இலண்டன் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்த மேரி 1882-ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.
தடய அறிவியல் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் சிறந்து விளங்கி தங்கப் பதக்கங்களையும் பெற்றார். வியன்னாவுக்குச் சென்று மகப்பேறு மற்றும் அறுவைமுறை மகப்பேறு மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். 1888-ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ முதுகலைப் பட்டம் (M.D.) பெற்று, இந்த பட்டத்தைப் பெற்ற முதல் பெண் என்ற வரலாற்றுச் சிறப்பையும் மேரி பெற்றார்..
1883–1887ஆம் ஆண்டுகளில் சென்னையில் பணியாற்றிய அவர், சமூகக் கட்டுப்பாடுகளால் ஆண் மருத்துவர்களை அணுக முடியாத பெண்களுக்காக 1884-ஆம் ஆண்டு ராயல் விக்டோரியா பெண்கள் மருத்துவமனையை நிறுவி, அதன் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். இந்த மருத்துவமனைதான் இன்று எழும்பூரில் உள்ள புகழ்பெற்ற கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறை விரிவுரையாளராகவும், மெட்ராஸ் பல்கலைக்கழக மருத்துவத் துறைத் தேர்வாளராகவும் பணியாற்றினார்.

உடல்நலக் காரணங்களால் 1887-ஆம் ஆண்டு லண்டன் திரும்பிய அவர், பெண்களுக்கான புதிய மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நிபுணராகவும், பின்னர் மூத்த அறுவைச் சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றினார். 1902-ஆம் ஆண்டு ராயல் ஃப்ரீ மருத்துவமனையின் தலைமை மகளிர் மருத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து மருத்துவமனையில் இத்தகைய உயர்ந்த பொறுப்பைப் பெற்ற முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். தடய அறிவியல், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறைகளில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
பொதுச் சுகாதாரத் துறையிலும் பங்களித்த மேரி ஷார்லீப், அரசின் பல முக்கியக் குழுக்களில் உறுப்பினராக இருந்ததுடன், பெண்களின் உடல்நலம், மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்து நூல்களையும் எழுதினார். அவரது நீண்டகால மருத்துவச் சேவையைப் பாராட்டி, 1917-ஆம் ஆண்டு பிரித்தானியப் பேரரசின் ஆணையர் (C.B.E.–Commander of the Order of the British Empire) கௌரவமும், 1926-ஆம் ஆண்டு பிரித்தானியப் பேரரசின் ஆணையர் நிலை பெண் கௌரவப் பட்டம்-டேம் (D.B.E.–Dame Commander of the Order of the British Empire) பட்டமும் வழங்கப்பட்டன.

மேரி ஷார்லீப் பெண்களின் உடல்நலம், மகப்பேறு, குழந்தை வளர்ப்பு, பாலியல் கல்வி மற்றும் சமூக நலன் குறித்து பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில், பெண்களுக்கான ஒரு பெண்ணின் அறிவுரை (A Woman’s Words to Women), பெண் வாழ்க்கையின் ஏழு பருவங்கள் (The Seven Ages of Woman), எதிர்காலத்தின் நம்பிக்கை (The Hope of the Future), மறைந்திருக்கும் பேராபத்து (The Hidden Scourge), பெண்களுக்கான நேரடியான அறிவுரை (Straight Talks to Women) உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். தனது வாழ்க்கை அனுபவங்களையும் மருத்துவப் பணியின் தொடக்ககாலச் சவால்களையும் பதிவு செய்த ஒரு முன்னோடியின் வாழ்க்கை நினைவுகள் (Reminiscences of a Pioneer) அவரது சுயசரிதை நூல்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ



















