பகவத் கீதை: "மில்லியன் மக்களுக்கு உத்வேகமளிக்கும் நூல்" - ரஷ்யப் பிரதமர் புதினுக...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, எங்கே தவறு… என்ன செய்ய வேண்டும்?
‘சாண் ஏறினால் முழம் சறுக்கும்’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போது, இந்தியாவின் பொருளாதார நிலை கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது.
‘உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் நாடு’, ‘சீனாவுக்கு மாற்றாக உலகின் உற்பத்தி மையமாகவும், முதலீட்டு மையமாகவும் மாறும் நாடு’, ‘விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும்’ என்றெல்லாம் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி பாசிட்டிவான செய்திகள் வந்தவண்ணம் இருந்த நிலையில், அதிருப்தியான ஓர் அணுகுண்டு வந்து விழுந்திருக்கிறது.
கடந்த வாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சிகண்டு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 85-ஐ தாண்டிய போதே, ‘‘தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்துவருவது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல” என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தார்கள். ஆனாலும், தொடர்ந்து சரிந்துவந்த ரூபாய் மதிப்பு கடந்த வியாழன் அன்று இன்னும் சரிந்து 90.43 ஆகப் பதிவானது. “இந்தியாவிலிருந்து தொடர்ந்து வெளியேறிவரும் வெளிநாட்டு முதலீடுகளும், இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரி விதிப்புகளும்தான் இதற்கு முக்கியக் காரணம்” என்கிறார்கள், நிபுணர்கள்.
இத்துடன், “ஏற்றுமதியைவிட, இறக்குமதியை அதிகமாகச் செய்துவரும் நாடாகவே இந்தியா இருப்பதும் பெருங்காரணம். கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், தங்கம், எலெக்ட்ரானிக் பொருள்கள் என எல்லாவற்றையும் அதிகமாக இறக்குமதி செய்துதான் பயன்படுத்தி வருகிறோம். எனவே, ரூபாய் மதிப்பு சரிவு தொடர்ந்தால் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகள் வரும்” என்று எச்சரிக்கும் நிபுணர்கள், “ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைச் சமாளிக்க, அதிகபட்சம் ரிசர்வ் வங்கியால் இருப்பில் இருக்கும் டாலர்களை விற்க மட்டுமே முடியும். அது, தற்காலிகத் தீர்வு மட்டுமே. இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறை இல்லாத நாடாகவும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் நாடாகவும், அந்நியச் செலாவணியை அதிகமாக ஈர்க்கும் நாடாகவும் இந்தியாவை மாற்றுவதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு” என்று வழிகாட்டுகிறார்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கண்ணாடி போல் பிரதிபலிப்பது அதன் நாணய மதிப்பு என்று சொல்லலாம். உலகின் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவின் நாணயமான டாலர்தான், இன்றளவும் உலக நாடுகளின் நாணயங்களுக்கெல்லாம் தலைவராக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் நாணயமான ரூபாய் தொடர்ந்து சரிந்து வருவது, வளர்ந்துவரும் நம் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து அரசும், ஆட்சியாளர்களும் செயல்பட வேண்டும். இல்லையென்றால், ‘5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்கிற கனவு, கனவாகவேதான் நீளும்.
- ஆசிரியர்
















