செய்திகள் :

தகர்த்த செந்தில் பாலாஜி; கொடியேற்றிய விஜய்... `கோட்டை'யில் கோட்டைவிட்ட அதிமுக!

post image

“கோவை என்றைக்கும் அண்ணா தி.மு.க கோட்டை. எனவே, கோவையில் அனைத்து தொகுதிகளிலும் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று தேர்தலுக்கு முன்பு நம்பிக்கையோடு சொல்லி வந்த எஸ்.பி.வேலுமணியைத் தவிர, வேறு யாரும் கோவை தேர்தலில் சோபிக்கவில்லை. அ.தி.மு.க-வின் கோட்டையாகப் பார்க்கப்படும் கோவையில் தொடர் தோல்விகளால் இரத்தத்தின் இரத்தங்கள் துவண்டுள்ளனர்!

1974-ம் ஆண்டு கோவை மேற்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, அ.தி.மு.க-வின் முதல் சட்டமன்ற உறுப்பினராக வரலாறு படைத்தார் செ.அரங்கநாயகம். அன்று முதல் அ.தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் கோவை மாவட்டத்தில், 1996 சட்டமன்றத் தேர்தல் தவிர்த்து மற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க-வே பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி வந்தது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கோவை மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்துள்ளது!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அ.தி.மு.க

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றியது அ.தி.மு.க. ஆனால், தி.மு.க-வில் செந்தில் பாலாஜியின் வருகைக்குப் பிறகு கோவையில் கட்சி தடுமாறத் தொடங்கியது. 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது அக்கட்சி. குறிப்பாக, கோவை மக்களவைத் தொகுதியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் மொத்தமுள்ள 10 தொகுதிகளில், 9 இடங்களை த.வெ.க மற்றும் தி.மு.க-விடம் பறிகொடுத்துள்ளது அ.தி.மு.க. அதாவது, த.வெ.க 6 தொகுதிகளிலும், தி.மு.க கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற, அ.தி.மு.க தரப்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் ஒவ்வொரு தேர்தலிலும் அவரது வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

சூலூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்த அ.தி.மு.க., கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, வால்பாறை என 5 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதேபோல கோவை வடக்குத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க-வும் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அ.தி.மு.க-வின் வலுவான வேட்பாளர்களாக கருதப்பட்ட முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்
செ.தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், ஒ.கே.சின்ராஜ் ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.

விஜய்
விஜய்

‘அதீத நம்பிக்கையா... அலட்சியமா?’

இதுகுறித்து அ.தி.மு.க முக்கியப்புள்ளிகளிடம் கேட்டபோது, “கடந்த உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பணம், பரிசுப்பொருட்களை வாரியிறைத்துதான் தி.மு.க வெற்றி பெற்றது. கிராமப்புறங்களில் அ.தி.மு.க-விற்கு உள்ள பலம், தி.மு.க-விற்குக்கூட கிடையாது. இந்தத் தேர்தலில் புதிய கட்சியான த.வெ.க நகர்ப்புறங்களில் ஓரளவு வாக்குகள் பெற்றிருந்தாலும், கிராமப்புறங்கள் வழக்கம்போல எங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இல்லை. இதற்கு தேர்தலில் வீசிய விஜய் அலைதான் முக்கிய காரணம். த.வெ.க வேட்பாளர் யார் என்றே தெரியாமல்கூட அக்கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். எங்களைவிட அதிக பணம், பரிசுப்பொருட்களைத் தந்த தி.மு.க-விற்கும் கூட மக்கள் ஆதரவு அளிக்கவில்லை.

அதேசமயம் ஜெயலலிதா இருந்த வரை யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும், எப்போது பதவி போகும் என தெரியாத நிலை இருந்தது. அதனால் அனைத்து நிர்வாகிகளும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டுவார்கள். தற்போது, அந்த நிலை மாறியிருக்கிறது. இப்போது எஸ்.பி வேலுமணி மட்டுமே அனைத்து முடிவுகளையும் கோவை மாவட்ட கட்சிக்குள் எடுப்பவராக உள்ளார். தேர்தல்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது மற்றவர்களிடையே சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செ.ம.வேலுசாமி போன்ற சீனியர்களுக்குக்கூட கட்சிக்குள் உரிய முக்கியத்துவம் அளிக்காத நிலையை ஏற்படுத்தி உள்ளார் வேலுமணி. தான் போட்டியிட்டு தொடர்ந்து வெல்லும் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்த எஸ்.பி.வேலுமணி, மற்ற தொகுதிகளில் உரிய கவனம் செலுத்தவில்லை.

அம்மன் அர்ச்சுணன்
அம்மன் அர்ச்சுணன்

கடந்த 5 ஆண்டுகளில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க-விற்கு எதிராக, கோவையில் எதிர்க்கட்சியாக அ.தி.மு.க சரிவர செயல்படவில்லை.கோவையில் அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு அதுதான் காரணம்” என்றனர் குமுறலாக.

‘சினிமா மோகமே காரணம்!’

இது தொடர்பாக விளக்கம் கேட்க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து கோவை மாநகர மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுனனிடம் கேட்டோம். “கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை. கோவையில் தி.மு.க-விற்கு எதிராக அ.தி.மு.க-தான் சரியாக செயல்பட்டது. த.வெ.க வெற்றிக்கு சினிமா மோகமே காரணம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் அண்ணாமலை போட்டியிட்டதாலும், இந்தத் தேர்தலில் விஜய் தாக்கத்தாலும்தான் அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்குச் சென்றது. இருப்பினும் கடந்த முறையைவிட அ.தி.மு.க கூடுதல் வாக்குகளை வாங்கியுள்ளது” என்றார்.

'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளி... மேலும் பார்க்க

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்... மேலும் பார்க்க

'திமுக அமைச்சர்களின் பணியாளர்களை வேறு வேறு இடங்களுக்கு மாற்றுங்கள்.!' - முதல்வர் அலுவலகம் கறார்?

தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று கோட்டைக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் திமுக சார்பு பணியாளர்களையும் அதிகாரிகளையும் உடனடியாக வேறு வேறு இடங்களுக்கு மாற்றுமாறு முதல்வர் அலு... மேலும் பார்க்க

``தலித் ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை" - திருமாவளவன் விளக்கம்

விசிக மீதான விமர்சனம் குறித்து, விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசிய சில கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமாவளவன் தன் எக்ஸ... மேலும் பார்க்க

"பழையபடி +2 மதிப்பெண்களின்படி, MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்" - முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வினாத்தாள் கசிந்ததால், கடந்த 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக த... மேலும் பார்க்க