செய்திகள் :

`திமுக-வினரை சந்திக்கக் கூடாது’ காங்கிரஸ் தடை டு `சீட்டே வேண்டாம்' - `பூ’ நடிகை டென்சன் | கழுகார்

post image

அண்மையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்டத் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களில், ஏற்கெனவே மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்களில் மூன்று பேருக்கு மட்டுமே மீண்டும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களெல்லாம் புதியவர்கள். சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் மேலிடக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலும், மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கரின் பரிந்துரையிலும் இந்த மாவட்டத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறதாம்.

காங்கிரஸ்

கடந்த ஜன. 20-ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழுவுக்கு முன்பாக, அனைத்து மாவட்டத் தலைவர்களுக்கும் மெசேஜ் அனுப்பிய ஜோடங்கர், 'காங்கிரஸ் தலைவர்களைத் தவிர, வேறு எந்தக் கட்சிப் பிரமுகரையும் சென்று சந்திக்கக் கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். உள்ளடி வேலைகளில் ஈடுபட்டால், கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என்று எச்சரித்தாராம். செயற்குழுவிலும் அதையே சொல்லியிருக்கிறார்.

''மாவட்டத் தலைவர் பதவி கிடைத்தவுடன், லோக்கலில் இருக்கும் அமைச்சர்களைச் சந்தித்து வாழ்த்து பெற சிலர் முடிவெடுத்திருந்தனர். அதைத் தெரிந்துகொண்டுதான் யாரையுமே சந்திக்கக் கூடாது என்று தடைபோட்டுவிட்டார் ஜோடங்கர்'' என்கிறார்கள் கதர்கள்.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் நீடிக்கும் நிலையில், ஜோடங்கரின் தடை உத்தரவு கதர்களிடம் பேசுபொருளாகியிருக்கிறது.

தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்தின் 'விவேகமான' எஸ்.பி., தன் மாவட்டத்துக்குள் பெரிய அளவில் குற்றங்கள் நிகழ்ந்தாலும்கூட, சம்பவ இடத்துக்குச் செல்வது கிடையாதாம். கடந்த பொங்கல் தினத்தன்று அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரியாவில் கஞ்சா போதையில் இரட்டைக்கொலைச் சம்பவம் நடந்தது. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகப் பொங்கிக்கொண்டிருந்த நிலையிலும், விசாரணை செய்யக்கூட, சம்பவ இடத்துக்குச் செல்லவில்லையாம் அந்த அதிகாரி. தகவலறிந்து, டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து எஸ்.பி-க்குக் கடும் டோஸ் விழுந்திருக்கிறது.

டி.ஜி.பி. அலுவலகம்

அந்தக் கோபத்தில், 'ஒழுங்கா வேலை பாரு... இல்லைன்னா சஸ்பெண்ட் ஆர்டர் வரும்' என்று தனக்குக்கீழ் பணிபுரிபவர்களை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்துவிட்டாராம் 'விவேகமான' அதிகாரி. 'அவரு வேலை பார்க்காததுக்கு எங்களைத் திட்டுறது எந்த வகையில நியாயம்..?' என்று புலம்பித் தீர்க்கிறார்கள் மாவட்ட காக்கிகள். 'விவேகமான' அதிகாரிமீது 'கறார்' வடமண்டல உச்ச அதிகாரியும் மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பதால், விரைவில் ஆக்‌ஷன் பாயலாம்’ என்கிறார்கள்.

சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரளாவைச் சேர்ந்த சி.எம்.சி மருத்துவமனை மருத்துவர் பிளிங்கின் என்பவரின் அறையைச் சோதனை செய்தனர். சோதனையில், அவருடைய அறையிலிருந்து 33 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்திருக்கிறார்கள். அதை எடுத்துக்கொண்டு, வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்குப் புகாரளிக்க அமலாக்கத்துறை டீம் சென்றபோது, போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவில் புகாரளிக்கச் சொல்லி அனுப்பிவிட்டார்களாம் காவல் நிலையத்தில் இருந்தவர்கள்.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவினரோ, '``மூன்று கிலோவுக்கு மேல் கஞ்சா இருந்தால்தான் நாங்கள் வழக்கை எடுத்துக்கொள்வோம். நீங்கள் வடக்கு காவல் நிலையத்துக்கே சென்று புகார் சொல்லுங்கள்...’’ என்று வந்த இடத்துக்கே திருப்பி அனுப்பி, சுற்றலில் விட்டிருக்கிறார்கள்ள். மீண்டும் வடக்கு காவல் நிலையத்துக்கு வந்த அமலாக்கத்துறை டீம், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவுசெய்ய வைத்திருக்கிறது. அங்கும் இங்குமாகத் தங்களை அலையவிட்ட வேலூர் காக்கிகள்மீது, பயங்கர கடுப்பில் இருக்கிறதாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பு.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணிகளைச் சத்தமில்லாமல் செய்ய ஆரம்பித்திருக்கிறதாம் மலர்க் கட்சி. தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் தொகுதிக்கு `பாடி பில்டிங்’ நடிகர், சாத்தூரில் மாநிலத் தலைவர், செங்கல்பட்டில் `பாகவதர்’ என்று இப்போதே பட்டியல் தயாராகிவருகிறதாம். அந்த வரிசையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை `பூ’ நடிகைக்குக் கொடுத்துவிட கட்சிக்குள் சிலர் பேசியிருக்கிறார்கள்.

விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் டென்ஷனான `பூ’ நடிகை, '``சின்னவர்கூட மோதவிட்டு என்னைய காலி செய்யலாம்னு பிளான் பண்றாங்க. ஜெயிக்கிற தொகுதியா குடுத்தா போட்டியிடுறேன். இல்லைன்னா, எனக்கு சீட்டே வேண்டாம்...’’ என்று டெல்லியிலுள்ள சீனியர்கள் சிலரிடம் கொதித்துவிட்டாராம்.

`இன்னும் லிஸ்ட் முடிவாகவில்லை. அதற்குள்ளாக ஏன் அவசரப்படுகிறீர்கள்?’ என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள் அந்த சீனியர்கள். மலர்க் கட்சிக்குள் வந்ததிலிருந்து பெரிதாக அங்கீகாரம் ஏதுமில்லாத வருத்தத்தில் இருக்கும் `பூ’ நடிகைக்கு, இந்த சேப்பாக்கம் தொகுதி விவகாரம் மேலும் அதிருப்தியைக் கூட்டியிருக்கிறதாம்.

கோட்டை மாவட்டத்தின் சூரியக் கட்சி மாவட்டச் செயலாளர், தன் எல்லைக்கு உட்பட்ட `மலை’ தொகுதியில் போட்டியிடத் தயாராகிக்கொண்டிருந்தார். அதற்காக சர்வேக்களையும் எடுத்திருந்தார். அதில், தொகுதியிலுள்ள இலைக் கட்சியின் `குட்கா மாஜி’க்கு செல்வாக்கு மலைபோல இருப்பதாகவும், `உங்களுக்கு வெற்றி வாய்ப்பு ரொம்பவே குறைவு’ என்றும் ரிசல்ட் வந்ததாம். அரண்டுபோன மாவட்டச் செயலாளர், `மலை’ தொகுதியை விட்டுவிட்டு `கோட்டை’ தொகுதிக்கு அடிபோட்டிருக்கிறார்.

தன் விருப்பத்தைத் தலைமையிடம் தெரிவிக்கவும், `மாவட்டச் செயலாளராக இருக்குற உங்களாலயே அந்தத் தொகுதியில ஜெயிக்க முடியாதுன்னு சொல்றதுக்கு வெட்கமா இல்லையா... அந்த அளவுக்குத்தான் கட்சியை வளர்த்து வெச்சிருக்கீங்களா..?' என்று கடுகடுத்துவிட்டதாம் தலைமை. அதை எதிர்பார்க்காத மாவட்டச் செயலாளர், `குட்கா மாஜியை எதிர்த்தே களமாடலாமா... இல்லை வேறு ஏதாவது ரூட்டைப் பிடித்து `கோட்டை தொகுதிக்கு முயற்சி செய்யலாமா?' என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறாராம்.

மேயர் பதவி: ராஜ்தாக்கரே, சரத் பவாருடன் ஷிண்டே கூட்டணி - மகாராஷ்டிராவில் மாறும் கூட்டணி எல்லைகள்!

மகாராஷ்டிராவில் நடந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கு பிறகு நகராட்சி துணைத்தலைவர், மேயர் பதவியை பிடிக்க பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் மற்ற கட்சிகளின் கவுன்சிலர்களின் ஆதரவை பெறுவதில் தீவிரம் ... மேலும் பார்க்க

``உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்" - கொதிக்கும் பியூஷ் கோயல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று காலை அ.தி.மு.க பொதுச... மேலும் பார்க்க

``இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள்" - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக செல்வப்பெருந்தகை!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது.அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசியி... மேலும் பார்க்க