NEET -க்கு எதிராக 12 நாள் பட்டினி போராட்டம்... நம்ம புள்ளைகளுக்காகத்தான்! - வெற்...
திருச்சி: சமயபுரத்தில் தொடர் வாகனத் திருட்டு; 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! - 4 பேர் கைது
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சமயபுரம் ஈச்சம்பட்டி பிரிவு சாலையில், சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு நபர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில், அவர்கள் ஓட்டி வந்த நான்கு இருசக்கர வாகனங்களுக்கும் உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைச் சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சமயபுரம், துறையூர், விழுப்புரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இருங்களூர் அருகே உள்ள உப்பாறு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதன் மூலம், மொத்தம் 14 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. இந்தத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தாளக்குடி வாழக்கட்டை பகுதியைச் சேர்ந்த விஷால் (வயது: 19), கிரண் குமார் (வயது: 23), திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது: 28), மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி (வயது: 48) ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை வைத்து உண்மையான உரிமையாளர்களைக் கண்டறிந்து வாகனங்களை ஒப்படைக்க போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களை நிம்மதியடைய வைத்துள்ளது.















