திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்த...
திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்!
சிவபெருமான் நடராஜ மூர்த்தியாகத் திருநடம் புரிந்த தலங்கள் பல. சிதம்பரத்தில் தவம் செய்த பதஞ்சலிக்கும் வியாக்ர பாதருக்கும் காட்சி அருளினார் ஈசன். அது பொன் சபை எனப்பட்டது.
பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அதன்பின் பல்வேறு தலங்களுக்கும் சென்று ஈசனை தரிசனம் செய்தனர். அவ்வாறு அவர்கள் விரும்பியபோதெல்லாம் ஈசனும் திருநடனக் காட்சி அருளினார். அவ்வாறு பதஞ்சலிக்கு ஈசன் திருநடனக் காட்சி அருளிய ஒரு தலம் தான் விளமர். அதையே திருவிளமர் என்று போற்றுகிறார்கள்.
திருவாரூரின் பகுதியாகவே திகழ்கிற தலம் இது. திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் அமைந்துள்ளது. ஓடம்போக்கி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பழைமையும் பெருமையும் வாய்ந்தது.

திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்தபோது இத்தலம் விளாமரங்கள் அடர்ந்த காடாக விளங்கியது. எனவே இதை விளமர் என்று அழைத்தனர். இதை ஒட்டி அமைந்திருக்கும் நகர்ப்பகுதிக்கு வளநகர் விளமர் என்று பெயர். அதையே திருஞான சம்பந்தரும் `மத்தக மணி பெற' என்று தொடங்கும் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
இத்தலம் பதஞ்சலிக்குக் காட்சி அருளிய தலம் என்பதால் இங்கு ஈசனுக்கு 'பதஞ்சலி மனோகரர்' என்றே திருநாமம்.
கிழக்கு நோக்கிய திருக்கோயில் இது. கோயிலுக்கு எதிரிலேயே திருக்குளம். இதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயர். மிகவும் சக்தி வாய்ந்தது. புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மையடைய விரும்புவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அன்னம் சாத்தி வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முகப்பின் ஒரு பக்கத்தில் விநாயகர். மறு பக்கத்தில் முருகர்; மயில் மீது அமர்ந்தவராக, கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டபடி காட்சி தருகிறார். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்தால், வெளிப் பிராகாரம். இந்தப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை; தெற்குப் பகுதியில் மாத்திரம் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது.
உள்வாயிலுக்குச் செல்லும் பாதையில் பலிபீடம்; நந்தி. இந்தப் பாதைக்கு மேலே கூரை வேயப்பட்டுள்ளது. ஒற்றைமாட கோபுரம் கொண்டிருக்கும் உள் வாயிலைக் கடந்து சென்றால், உள்பிராகாரத்தை அடைந்து விடலாம்.
பிராகாரம் மிக அழகு. தென்மேற்கு மூலையில், சித்தி விநாயகர் சந்நிதி. மூலவர் கருவறைக்கு நேர் பின்புறம் ஸ்ரீமகாலட்சுமி சந்நிதி. வடமேற்கு மூலையில் வள்ளி - தெய்வானை சமேத மயிலேறு சுப்பிரமணியர் சந்நிதி. இவர் நான்கு திருக்கரங்களுடன் அபயமும் ஊரு ஹஸ்தமும் தாங்கியவராக தரிசனம் தருகிறார். வடக்குத் திருச்சுற்றில் கிணறு. இந்தச் சுற்றில் வலம் வரும்போது, அம்பாள் சந்நிதியையும் சேர்த்து வலம் வந்துவிடலாம்.

வடக்குச் சுற்றில் வந்து, மீண்டும் கிழக்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில், தனிக் கோயிலாக அருள்மிகு பைரவர் சந்நிதி. தெற்கே பார்த்த பைரவர்; நாய் வாகனத்துடனும் சாந்தமான திருவதனத்துடனும், அளவில் பெரியவராக நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.
கருவறையில் மூலவரைப் பார்த்தபடி, ஒரு பக்கத்தில் பதஞ்சலி முனிவர்; இன்னொரு பக்கத்தில், சூரியன், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோர் அருள்கின்றனர்.
பதஞ்சலி இருந்தால், பக்கத்திலேயே வியாக்ரபாதரும் இருப்பார் எனும் வகையில், மண்டபத்தில் வியாக்ர பாதர் உருவம் உள்ளது. முகப்பு மண்டபத்தில் நின்று ஒருசேர சுவாமியையும் அம்பாளையும் தொழலாம். அம்பாள் சந்நிதிக்கு அருகில் நடராஜ சபை.
மகா மண்டப வாயிலில் நிற்கிறோம். சிறிய நந்தி; பலி பீடம். ஒரு பக்கம் உற்ஸவ மூர்த்தங்களுக்கான மேடை; இன்னொரு புறம் வாகனம் வைக்கப் பட்டிருக்கிறது. அர்த்தமண்டபம் தாண்டி பார்வையைச் செலுத்தினால்... ஆஹா, அருள்மிகு பதஞ்சலி மனோகரர்.
அலங்காரமாக தரிசனம் தருகிறார் ஈசன். இந்த ஈசனை நமசிவாய நாமம் சொல்லித் தொழும்போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நம்மால் தவிர்க்கவே முடியாது. அப்படிப்பட்ட அழகே உருவான திருமேனியர் இந்த ஈசன். இவரை தரிசித்தாலே மனப்பிணிகள் நீங்கிவிடும். ஞானமும் செல்வமும் சேரும்.
அடுத்து அம்பாள் சந்நிதியை தரிசனம் செய்யலாம். இங்கே அம்பிகைக்கு மதுரபாஷிணி என்பது திருநாமம். தமிழில் அதை யாழினும் மென்மொழி அம்மை என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். பக்தர்கள் தம் குறையைச் சொல்லி நின்றால் அவர்கள் மனத்துள் இனிய மொழியில் ஆறுதல் கூறி வழிநடத்துவாள் என்பது நம்பிக்கை.
நின்ற திருக்கோலத்தில் அபயமும் வரமும் தாங்கியபடி கருணை காட்டுகிறாள்.

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு (நின்ற கோலத்தில் சங்கு - சக்ரதாரியாக அருள் தருகிறார்), பிரம்மா (இவரும் நின்ற கோலமே), ஸ்ரீதுர்கை. தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர்.
முகப்பு மண்டப நுழைவாயிலின் மேல் பகுதியில், கயிலாசத் திருக் கோலத்தில் பார்வதி- பரமேஸ்வரர் காட்சி தர, பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நிற்கிற சிற்பம் கண்ணையும் கருத்தையும் கவரும். திருவிளமர் தலத்தில், ஈசன் திருநடனம் புரிந்தார் என்பதால் இங்கே மார்கழி - ஆருத்ரா தரிசனம் விசேஷம். ஆருத்ரா (திருவாதிரை) திருநாளன்று, தியாகேசப் பெருமான், வியாக்ரபாதருக்கும் பதஞ்சலிக்கும் தம் இடது பாதத்தைக் காட்டியருளுவார். பிற நாட்களில்,
இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விளமர் திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் எல்லா நலனும் கிடைக்கும்.



















