செய்திகள் :

நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நம்மால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?

post image

’’ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைத் தவிர நாம் என்னென்ன சாப்பிடுகிறோம்? இந்தக் கேள்விக்கு டீ, காபி, பிஸ்கட், வடை, பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, குளிர்பானம்... என நீள்கிறது பதில் பட்டியல்.

இரண்டு வேளை உட்கொண்டு, காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தனர் நம் முன்னோர். இன்றோ, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை பார்த்தாலுமேகூட, ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நொறுக்குத் தீனி இல்லாமல் இருக்க முடிவது இல்லை. இதனால், உடல்பருமன், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு என ஏராளமான பிரச்னைகள் வரிசைக்கட்டி வருகின்றன’’ என்கிற சர்க்கரை நோய் சிறப்பு நிபுணட் ஜெயஸ்ரீ கோபால், நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நம்மால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது முதல் நொறுக்குத் தீனிகளால் வரக்கூடிய பிரச்னைகள் வரை விரிவாகப் பேசுகிறார்.

நொறுக்குத்தீனி
நொறுக்குத்தீனி

ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில், உடலுக்குக் கட்டாயம் உணவு தேவைப்படும்போது சத்தான ஸ்நாக்ஸ் எதையாவது சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், வலுக்கட்டாயமாக பிஸ்கட்டையோ, பஜ்ஜியையோ சாப்பிடுவது தவறு.

நாம் சமைக்கும் ஒவ்வோர் உணவுக்கும் குறிப்பிட்ட ஆயுட்காலம்தான் உண்டு. வீட்டில் தயாரித்து ஒரு வாரமோ, ஒரு மாதமோ பத்திரப்படுத்திச் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இந்த வகை நொறுக்குத் தீனிகளே.

வீட்டில் செய்த அதிரசம், லட்டு, ஜாங்கிரி, முறுக்கு, காராசேவு முதலானவை இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றைத் தேவையற்ற நேரங்களில் சாப்பிடும்போது, கார்போஹைட்ரேட் அதிகரிக்கும். இவை கொழுப்பாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படும். இதனால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.

நொறுக்குத்தீனி
நொறுக்குத்தீனி

இவற்றில், செயற்கை நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்பட்டிக்கும். இதனால்தான் ஒரு முறை வாங்கிச் சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் வாங்கிச் சாப்பிடத் தூண்டுகின்றன. இவை நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க, பதப்படுத்திகளைச் சேர்க்கின்றனர்.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் ஆபத்துகள் குறித்து, பல ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன.

பாக்கெட் உணவுகளில் வேதியல் பொருட்கள், உப்புகள், பதப்படுத்திகள், நிறமூட்டிகள் போன்றவை கலக்கப்பட்டிருப்பதால், இவற்றை உண்ணும்போது பல வகையான ஹார்மோன் பிரச்னைகள் வருகின்றன.

அதில் மிக முக்கியமானது சர்க்கரை நோய். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலருக்கும் ஹார்மோன் சமச்சீரின்மைப் பிரச்னை சமீபகாலங்களில் அதிகரிக்க, இந்த உணவுகள் முக்கியக் காரணி.

பீட்சாவும் பர்கரும் மட்டும் அல்ல, சமோசாவும் பஜ்ஜிகளும் ஜங்க் ஃபுட் தான். பலர் ‘பீட்சா சாப்பிடுவது தவறு’ எனச் சொல்லிக்கொண்டே, டீக்கடையில் சமோசா, பஜ்ஜிகளை வெளுத்துக் கட்டுவார்கள்.

பேக்கரிகளில் விற்கப்படும் உணவுகள், ஐஸ்க்ரீம், கேக் என கிட்டத்தட்ட அனைத்து நொறுக்குத்தீனிகளும் ‘ஜங் ஃபுட்’ என்ற வரையறைக்குள் அடங்கிவிடுபவை.

அதிக சர்க்கரை, அதிக உப்பு, அதிகக் கொழுப்பு உள்ள உணவுகள் அனைத்துமே ஜங்க் ஃபுட்தான். இதனால்உடல்பருமன் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கூடவே, சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

நொறுக்குத்தீனி
நொறுக்குத்தீனி

சிலர் ‘நொறுக்குத்தீனி சாப்பிடுவது தவறு எனத்தெரிகிறது. ஆனால், மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்பார்கள். அது உண்மைதான். ஏனெனில், காலம்காலமாக நமது முன்னோர்கள் சிறுதானியங்கள், கம்பு, சோளம் போன்றவற்றையே சாப்பிட்டுவந்தார்கள்.

அந்தக் காலத்தில் இனிப்புகள், அரிசி உணவுகள் போன்றவை கிடைப்பது அரிது என்பதால், அந்த உணவுகளை சாப்பிட ஏக்கம் இருக்கும். இனிப்பு, கார வகை முதலான நொறுக்குத்தீனிகளைப் பார்த்தாலே ஏன் நினைத்தாலேகூட எச்சில் ஊற ஆரம்பிக்கும்.

பரம்பரை பரம்பரையாக ஜீன்கள் வழியாக நமக்கும் அந்தப் பழக்கம் தொடர்கிறது. நொறுக்குத்தீனிகளைப் பார்த்தாலோ, முகர்ந்தாலோகூட உடனடியாக மூளையில் எண்டார்பின் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பித்துவிடும்.

இந்த ஹார்மோன் சுரக்கும் நேரங்களில் மகிழ்ச்சியான உணர்வு பெருகும். எனவேதான் இனிப்பு போன்ற நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடும்போது, மன நிறைவு கிடைக்கிறது.

நொறுக்குத்தீனி
நொறுக்குத்தீனி

மன அழுத்தம் உள்ளவர்கள் ஒரு குலோப்ஜாமூனையோ, ஐஸ்க்ரீமையோ சாப்பிட்டால்கூட நார்மலுக்குத் திரும்பிவிடுவார்கள்.

அதன் ரகசியம் இதுதான். எனவே, உணவைப் பார்த்தால் உடனே சுவைக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதைத் தவறு எனக் கருத வேண்டாம், ஆனால், அந்த உணர்வைக் கட்டுப்படுத்த முயல வேண்டும்.

கூடுமானவரை, ஸ்நாக்ஸ், பேக்கரி இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். நொறுக்குத்தீனிகளின் விளைவை கருத்தில் கொண்டு அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். யோகா மூலம் மனம் கட்டுப்பாடு அடைகிறது எனக் கருதுபவர்கள், யோகா போன்றவற்றை செய்து, மனதைக் கட்டுக்குள் வைக்கலாம்.

ஆரோக்கியமான சரிவிகித உணவு கலந்த உணவுப்பழக்கம், காலை உணவைக் கட்டாயம் சாப்பிடுவது, நேரத்துக்கு உணவை உண்பது போன்றவை நொறுக்குத்தீனிகளின் தேவையைக் குறைக்கும்.

• வாயில் எதையாவது அரைத்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், பொட்டுக்கடலை, பொரி, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.

• ஓர் உணவு வேளைக்கும், இன்னோர் உணவு வேளைக்கும் இடையில் பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதன் மூலம் நொறுக்குத்தீனி சாப்பிடும் உணர்வைக் குறைக்கலாம்.

• மாலை வேளைகளில் சுண்டல், பயறு வகைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

• தியேட்டர், பள்ளி வளாகங்கள், டீக்கடைகள் போன்றவற்றில் பாப்கார்ன், கோலா பானங்கள், பிரெஞ்ச் ஃபிரைஸ், சிப்ஸ் போன்றவற்றை விற்பதைத் தவிர்த்து, பொரி உருண்டை, வேர்க்கடலை, பொரி போன்றவற்றை விற்பதையும், அவற்றை வாங்கிச் சாப்பிடவும் ஊக்கப்படுத்தலாம்.

• கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவை நல்லவையே. எனினும், வெல்லம், எண்ணெய், கடலை, எள் போன்றவை ஒன்று சேரும்போது கலோரி அதிமாகிவிடும். எனவே, இவற்றையும் எப்போதாவது சாப்பிடுவதே சிறந்தது.

• பேரீச்சம்பழம், திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

• நொறுக்குத்தீனிக்குப் பதில் ஃபுரூட் சாலட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட்? - இவை உடலில் செய்யும் மாற்றங்கள் என்ன?

சாதம், பிரெட், காய்கறி, பழங்கள், குளிர்பானங்கள் என நாம் உட்கொள்ளும் எந்த ஓர் உணவிலும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கார்போஹைட்ரேட் என்றாலே உடலுக்குக் கெடுதி என்ற எண்ணம் மக்கள் மன... மேலும் பார்க்க

பீர்க்கங்காய் அடை முதல் வெங்காய துவையல் வரை; மறந்துபோன சில ஆரோக்கிய உணவுகள்!

ஆரோக்கியம் நம் உணவுப்பழக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. நாம் மறந்துபோன சில ஆரோக்கிய உணவுகளை, செய்முறையுடன் நினைவூட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர் பத்மா. இஞ்சி, பருப்பு துவையல்இஞ்சி, பரு... மேலும் பார்க்க

கிலோ ரூ.12,500: நோயை எதிர்த்து போராடும், அதிக விலையுள்ள அரிசி ஜப்பானில் அறிமுகம்!

ஆசியாவில் உள்ள நாடுகளில் பல்வேறு வகையான கலாச்சாரம், மொழி இருந்தாலும் சாப்பாட்டில் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பது அரிசி மட்டுமே. அதுவும் தெற்கு ஆசியாவில் சாப்பாட்டிற்கு அரிசி மட்டுமே பிரத... மேலும் பார்க்க