BB TAMIL 9: DAY 46: சாம்பார் அணியில் சாண்ட்ரா, பாருவின் அலப்பறைகள் - சகிக்க முடி...
``திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் சட்ட நடவடிக்கை'' - நிர்வாகம் எச்சரிக்கை
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். ஆண்டு முழுவதும் தொடர் திருவிழாக்கள் நடைபெறும்.
தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, விசேச, திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.
குறிப்பாக தமிழ் மாதப் பிறப்பு, மாதாந்திர கார்த்திகை நட்சத்திர நாட்கள், சஷ்டி, திதி, அமாவாசை, பெளர்ணமி, வாராந்திர செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

கடந்த ஜூலை7-ம் தேதி நடந்த குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து திருக்கோயிலின் தோற்றமே அழகிய கடற்கரைக்கு அழகு சேர்க்கும் விதமாக மாறியதுடன் வண்ண விளக்குகளால் இரவில் ஜொலிக்கிறது.
இதனை காணவே இரவில் கூட பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, அழகுத்தோற்றம் ஆகியவை பக்தர்களை மட்டுமின்றி சமூக வலைதள விரும்பிகளையும் திரும்பி பார்க்கை வைத்துள்ளது.
சமீப காலமாக திருச்செந்தூர் கோயில் பிரகாரம், கடற்கரை பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்துள்ளது.
ஆன்மிகத் தலத்தில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் மோகமா? அதனை பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. இதனையறிந்த பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. இது குறித்த செய்திகளும் பரவியது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் கடற்கரையில் சினிமா பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அதிகம் கூடும் இடமான திருக்கோயிலின் முன்புள்ள சண்முக விலாச மண்டபம், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், வசந்த மண்டபம், பக்தர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் வரிசை, அன்னதானக்கூடம் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
அந்த எச்சரிக்கை பதாகையில், “இத்திருக்கோயில் வளாகத்தில் திரைப்படப்பாடல்களை பாடி நடனம் ஆடுவது, அதை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுதல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம். தவறும்பட்சத்தில், காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
















