"எங்க அம்மா கொடுத்த அந்த பிளாஸ்டிக் வாட்ச்.!" - நெகிழும் தனுஷ்
BB TAMIL 9: DAY 46: சாம்பார் அணியில் சாண்ட்ரா, பாருவின் அலப்பறைகள் - சகிக்க முடியாமல் வெளியேறிய கனி!
‘FUN TASKக்கா பண்ணுங்க’ என்று பிக் பாஸ் தலையால் அடித்துக் கொண்டாலும் ‘சோறு - சோப்பு - மாப்பு டாஸ்க்கில் நமக்கு கிடைத்தது என்னமோ ஆப்புதான். எண்டர்டெயின்மென்ட்க்கு பதிலாக வன்மம்தான் தெரிந்தது. அதிலும் பாருவும் சாண்ட்ராவும் ஒருவருக்கு ஒருவருக்கு சளைக்காத வன்ம குடோனாகவே திகழ்கிறார்கள். இந்த டாஸ்க் நாசமாகப் போனதற்கு இந்த இருவர்தான் முக்கிய காரணம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 46
நள்ளிரவைத் தாண்டியும் சாம்பார் அணி கூடி அமர்ந்து சதியாலோசனை செய்து கொண்டிருந்தது. சதி என்னும் போதே அதற்கு பாருதான் தலைமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். “நாமளும் மூணு வேளைதான் வடிச்சுக் கொட்டறோம். ஆனா இவிய்ங்க பாயிண்டே தரமாட்றாங்க.. நாளைக்கு இவிய்ங்களுக்கு சோறு கிடையாது. வெறும் கஞ்சிதான்” என்று பாரு சொன்ன ஐடியாவை சாண்டரா வழிமொழிய அணி ஏற்றுக் கொண்டது.
இது அன்றாட வேலைகள் கூடவே எண்டர்டெயின்ட்மென்ட்டும் இணைத்து செய்யும் டாஸ்க். ஆகவே சமைப்பது என்பது அவர்களின் வழக்கமான பணி. ஆனால் சாம்பார் அணியில் எண்டர்டெயின்மென்ட் இருக்கிறதா, என்றால் இல்லை. வெறும் வன்மம்தான் தெரிகிறது. இவர்களிடம் கிரியேட்டிவிட்டியும் இல்லை. எனில் எப்படி பாயிண்ட் கிடைக்கும்?
சாம்பார் டீமில் சாண்ட்ரா யூனிபார்ம் அணியாமல் இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டிய பிக் பாஸ், ‘இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா?” என்று மற்ற அணியினரை கேட்டு சண்டைக்கான விதையை நட்டு வைத்தார் “யூனிபார்ம் போடலையா.. பிக் பாஸ் கேட்கச் சொல்றாரு” என்று சாண்ட்ராவிடம் விக்ரம் கேட்க “சரி கேளுங்க” என்று திமிராக சொல்லி விட்டுச் சென்றார் சாண்ட்ரா.
“அப்படின்னா நாங்களும் க்ளீன் பண்ண மாட்டோம். சாப்பிட மாட்டோம்” என்று க்ளீனிங் அணி முரண்டு பிடித்தது. தன் அணியில் இருப்பவரே அழிச்சாட்டியம் செய்வதைப் பொறுக்க முடியாத கனி, ‘சாண்ட்ரா.. யூனிபார்ம் போடுங்களேன். இதனால அவங்களும் வேலை செய்ய மாட்றாங்க” என்று சொல்ல “அதெல்லாம் போடுவோம்.. போடுவோம்” என்று விட்டேற்றியாக பதில் சாென்னார் சாண்ட்ரா.
வெறும் ரவா கஞ்சிதான் செய்ய வேண்டும் என்பது நள்ளிரவில் சாம்பார் அணி கூடி எடுத்த முடிவு. ஆனால் அதையும் மீறி கனி சமையல் செய்வதால், சாண்ட்ராவும் திவ்யாவும் கூடி புறணி பேசினார்கள். “நேத்து நைட் ஒத்துக்கற மாதிரி ஒத்துக்கிட்டு இப்ப அவங்க தனியா ஸ்கோர் பண்ணனும்னு சமையல் செய்யறாங்க” என்பது இவர்களின் புகார்.

“நம்ம டீம் பெஸ்ட்டா வரணும்ன்னுதான் உங்களை லீடரா ஏத்துக்கிட்டேன். சொல்றதுக்கு எல்லாம் மண்டையை ஆட்டினேன். ஆனா நீங்க பண்ற அலப்பறைல நமக்கு பாயிண்ட்டே கிடைக்க மாட்டேங்குது” என்று சாண்ட்ராவிடம் எரிச்சலாக புகார் சொனார் கனி. பாவம் தவறான அணியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்.
க்ளீனிங் டீமிற்கு செக் மேட் வைப்பதற்காக சாம்பார் டீம் சதி வேலை செய்தது. “வாங்க பூண்டு உரிக்கலாம்” என்று சாண்ட்ரா அழைக்க, பக்கத்து வீட்டில் வம்பு பேசும் பாட்டி மாதிரி பாருவும் இழுவையான ஸ்லாங்கில் இணைந்து கொள்ள பூண்டு தோலை உறித்து வீடெங்கும் பறக்க விட்டார்கள். க்ளீனிங் டீமை வெறுப்பேற்றுகிறார்களாம்.
“மக்களே.. கெஸ்ட் வர்றாங்க. தயாரா இருங்க” என்று பிக் பாஸ் அறிவிக்க, வேறு வழியில்லாமல் சுத்தம் செய்ய ஆரம்பித்தது. ஆனால் கிச்சன் டீம் தொடர்ந்து அலப்பறை செய்ததால் விக்ரம் காண்டாகி “நிறுத்துங்கடா போதும்” என்று தன் அணியிடம் எரிச்சலுடன் சொன்னார். ‘கண்மணி அன்போடு பாடலை’ கிச்சன் டீம் பாடி பதிலுக்கு வெறுப்பேற்றியது.
வந்த கெஸ்ட், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் பூர்ணிமா ரவி. ‘யெல்லோ’ என்று அவர் நடிக்கும் திரைப்படத்திற்கான பிரமோஷன். “இந்த சீசன் நல்லா போயிட்டிருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு” என்று வந்தவுடனே பச்சையாக பொய் சொன்னார் பூர்ணி. “கம்மு உங்க ஸ்மைல் நல்லாயிருக்கு” என்று பாராட்டு கிடைக்க வெட்கப்பட்டார் கம்மு. (மனுஷன் வாழறான்யா!)

“நீ செமயா பண்ணேன்னு ஃ.பார்மலா பாராட்டற நண்பர்களுக்கு மத்தியில் ‘நீ சொதப்பிட்டேன்னு உண்மையை சொல்ற நண்பன் அபூர்வம். அப்படியொரு யெல்லோ நண்பன் எனக்கு மாயா. அப்படி உங்களுக்கு யாரு யெல்லோ பிரெண்ட்?” என்று பூர்ணிமா டாஸ்க் கொடுத்தார்.
“எனக்கு கம்ருதான் பெஸ்ட் பிரெண்ட். அவன் தூரமா நின்னு வாழ்ந்தாலும் போதும். அதைப் பார்த்துக்கிட்டே நானும் வாழ்வேன்” என்பது மாதிரி அசடு வழிந்தார் பாரு. (பாவம் அரோராவிடமிருந்து கம்ருவைப் பிடுங்குவதற்கு படாதபாடு பாடுகிறார்). எஃப்ஜே மற்றும் விக்ரமை தனது ‘யெல்லோ’ நண்பராக கனி சொல்ல, துஷாரையும் கம்முவையும் சொன்னார் அரோரா.
யெல்லோ திரைப்படத்தின் டிரைய்லர் ஒளிபரப்பாகி முடிந்ததும், வீட்டார் நடந்து கொண்ட முறையைப் பார்த்து பூர்ணிமா பாயிண்ட் தர வேண்டிய நேரம். “வீடு சுத்தமாவே இல்ல. க்ளீனிங் டீம் எண்டர்டெயின் பண்ணீங்க..ஓகே.. ஆனா உங்க வேலையைப் பண்ணலையே?” என்று பூர்ணி சொல்ல ‘சாம்பார் அணி’ செய்யும் அலப்பறைகளைப் பற்றி மற்ற அணிகள் கோரஸாக புகார் சொன்னார்கள். “அது எனக்குத் தெரியல. நான் பார்க்கும் போது கிச்சன் டீம் சின்சியரா சமைச்சாங்க” என்று அவர்களுக்கு மூன்று காயின்களை தந்து விட்டு புறப்பட்டார் பூர்ணிமா.
தங்கள் அணிக்கு அதிசயமாக பாயிண்ட் கிடைத்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக ‘வெற்றிக் கொடி கட்டு’ என்கிற பாடலை பாடிய படியே உள்ளே பறந்து வந்தது கிச்சன் அணி. “டேய்.. உனக்கு பவுலிங்கும் போட வரலை. பேட்டிங்கும் சரியா ஆட மாட்டேன்ற. சொன்னாலும் உனக்குப் புரிய மாட்டேங்குது’ மோமெண்ட்டாக அது இருந்தது.
“நீங்க பாயிண்ட் கொடுத்திருந்தா.. நாங்க சாப்பாடு கொடுத்திருப்போம்” என்று சகிக்க முடியாத ரைமிங்கில் பாட்டுப்பாடி விக்ரமை வெறுப்பேற்ற முயன்றார் பாரு.

கனியை மையமாக வைத்து விக்ரம் ஃபொ்பார்மனஸ் செய்ய ஆரம்பிக்க, வழக்கம் போல் சாம்பார் சாண்ட்ராவும் பாருவும் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தார்கள். கூடவே திவ்யாவும் வியானாவும். “ஒரு வீட்ல இருக்கிற மூணு பேய் கிட்ட கனி மாட்டிக்கறாங்க. அப்புறம் அவங்களே தைரியமா வெளியே வராங்க” என்கிற மாதிரி விக்ரம் சொன்ன கதையை “நம்மளத்தான் பேய்ன்னு சொல்லி மாக் பண்றாங்க.” என்று சாண்ட்ராவும் பாருவும் காண்டாகினார்கள்.
“அக்கா. நம்மள கிண்டல் பண்றாங்க. அவங்க கூட போய் ஃபொ்பார்ம் பண்றீங்க.” என்று கனியை எரிச்சலுடன் அழைத்தார் திவ்யா.
“அந்த டாஸ்க் பர்சனல் மாதிரி இல்ல. நம்மள பேய்ன்னு சொல்லல. அவங்கதான் பேய். நான்தான் அங்க போய் மாட்டிக்கறேன்னு மாதிரி டிராக்” என்று கனி சொன்னாலும் சாம்பார் அணி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன இருந்தாலும் உங்க ஃபேவரைட் ஆளுங்கள விட்டுத் தருவீங்களா?” என்று ஒழுங்கு காட்டி கனியை வெறுப்பேற்றியது.
சாம்பார் அணி செய்யும் அலப்பறை காரணமாக ‘நாங்க சாப்பிட மாட்டோம்” என்று மற்ற அணிகள் புறக்கணித்தன. “மார்க் வேணுமின்னுதான் உங்க கூட சேர்ந்தேன். இப்ப பாருங்க. அவங்க சாப்பிட மாட்டாங்களாம்” என்று கனி புலம்ப “அதெல்லாம் வருவாங்க. நம்ம வேலையை செஞ்சுட்டோம். சாப்பிடாட்டி நமக்கு என்ன?” என்று அலட்சியமாகச் சொன்னார் சாண்ட்ரா.

“வீடு ஃபுல்லா குப்பையா இருக்கு. மாப் டீம் கூப்பிட்டா வர மாட்றாங்க” என்று வியானா புகார் சொல்ல “எங்களை ரொம்ப கேவலமா பேசறாங்க. அப்ப எங்க போயிருந்தீங்க.. சரி. என்ன வேணும் சொல்லுங்க… இல்லாட்டி போங்க” என்று விக்ரம் கோபமாக பதில் சொன்னதற்கு மனம் புண்பட்டு தனிமையில் சென்று அழுதார் வியானா. ஓரளவிற்கு நியாயமாக நடந்து கொள்ளும் வியானாவிற்கு சாம்பார் சாண்ட்ராவும் பாருவும் செய்யும் அலப்பறைகள் தெரியும்தானே?!
தயார் செய்து வைத்திருந்த உணவை உடனே தராமல் காலம் தாழ்த்தி தருவதாக சாம்பார் அணி பிளான் செய்திருந்தது போல. அப்போது ஒப்புக் கொண்டாலும் மக்கள் பசியோடு தட்டை நீட்டி வரும் போது காலம் தாழ்த்த கனிக்கு மனம் ஒப்பவில்லை. எனவே “நான் இங்க இருக்க மாட்டேன். போறேன்.. பசியோட இருக்கறவங்க கிட்ட லேட் பண்ணி தர்றது சரியில்லை” என்று கோபித்துக் கொண்டு கனி விலக “பிளான் போடற போது ஒத்துக்குவாங்களாம்.. ஆனா அப்புறம் இவங்களே தனியா ஸ்கோர் பண்ணுவாங்களாம்.. அதாவது இவிய்ங்க நல்லவங்களாம்” என்று பழிப்பு காட்டினார் பாரு.

ஒருவழியாக இந்த ‘ஆப்பு’ டாஸ்க் இறுதிக் கட்டத்திற்கு வந்தது. பாயிண்ட்ஸ் தர வேண்டிய நேரம். இதிலும் சாம்பார் அணியின் அலப்பறை தொடர்ந்தது. முந்தைய இரண்டு நாட்களிலும் மற்ற அணிகள் முதலில் சென்று பாயிண்ட்ஸ் தந்தன. இன்று சாம்பார் அணி செல்ல வேண்டிய முறை.
ஆனால் சாம்பார் அணி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆர்டரை மீறி “நாங்க போக மாட்டோம்.. வேணுமின்னா சாபூத்ரீ போடலாம்’ என்று அழிச்சாட்டியம் செய்தது. மற்ற அணிகள் என்ன பாயிண்ட் தருகிறார்கள் என்று பார்த்து விட்டு அதற்கேற்ப தங்களின் முடிவை தீர்மானம் செய்யலாம் என்று சாம்பார் அணி பிளான் செய்கிறது. அதாவது ஒரு அணியின் திறமையைப் பார்த்து உண்மையாக பாயிண்ட்ஸ் தருவதை விடவும், ‘பழிக்குப் பழி, புளிக்குப் புளி’ என்கிற சிறுபிள்ளைத்தனமான பழிவாங்கலைதை்தான் சாண்ட்ரா பின்பற்றுகிறார்.
‘யார் முதலில் செல்வது என்கிற சண்டை தொடர ‘என்னப்பா இன்னமும் ஆரம்பிக்கலையா?” என்று சலித்துக் கொண்டார் பிக் பாஸ். “இப்ப நான் தலயா உள்ளே போறேன்” என்று யூனிபார்மை கழற்றி விட்டுச் சென்றார் எஃப்ஜே. (வில்லனுடன் மோதப் போகும் போலீஸ் ஹீரோ தனது யூனிபார்மை கழற்றி வைக்கும் லாஜிக்!)
“மூணு டீமோட கேப்டன்களும் வாங்க. பேசலாம்” என்று தல எஃப்ஜே கூப்பிட உரையாடல் நடந்தது. ஆனால் பாரு சும்மா இருக்காமல் “ம் சொல்றியா மாமா.. ம்கூம் சொல்றியா.. மாமா..’ என்கிற பாடல் மாதிரி ரிப்பீட் மோடில் பேசிக் கொண்டேயிருக்க எரிச்சலான எஃப்ஜே “இவங்கதானே.. கேப்டன்… இல்ல ஒப்புக்கு சப்பாணியா வெச்சிருக்கீங்களா.. உங்க ஆளுங்களே உங்க பேச்சை மதிக்க மாட்றாங்க.. நீங்க போங்க” என்று சாண்ட்ராவை அனுப்பி வைத்தார்.

“பாரு முதல்ல பேசினா.. ஆனா ரெண்டாவது முறை சொன்னவுடன் சைலண்ட் ஆகிட்டா” என்று சாண்ட்ரா அபாண்டமாக புளுக “அப்படியா.. மனச்சாட்சியோட சொல்லுங்க.. வீக்கெண்ட்ல திட்டு வாங்கினாலும் பரவாயில்ல. தலயா இருக்கறதுக்குள்ள போதும்ன்னு இருக்கு” என்று எரிச்சலுடன் சென்று அமர்ந்தார் எஃப்ஜே.
‘சந்தைக்குப் போகணும். ஆத்தா வையும். காசு கொடு’ சப்பாணியாக ‘டாஸ்க் எப்பப்பா ஆரம்பிப்பீங்க?” என்று மறுபடியும் பிக் பாஸ் கேட்க “என்னை கேப்டன் இல்லைன்னு சொல்லிட்டீங்கள்ல.. நாங்க போக மாட்டோம்” என்று பிடிவாதம் பிடித்தார் சாண்ட்ரா.
‘நான் மாது வந்திருக்கேன். சோறு போடுங்க” என்கிற எதிர்நீச்சல் திரைப்படத்தின் காட்சி மாதிரி “நான் தலயா கேட்கறேன்.. நீங்க போறீங்களா?” என்று ஒவ்வொரு அணியிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தார் எஃப்ஜே. பிறகு தொடர்ந்த டாஸ்க்கில் மற்ற அணிகளுக்கு ஜீரோ பாயிண்ட் கொடுத்து வன்மத்தைக் கொட்டியது சாம்பார் அணி. எனவே மற்ற அணிகளும் அதையே பின்பற்றி சாம்பார் அணிக்கு பாயிண்ட்ஸ் தரவில்லை.
இறுதியில் ‘மாப் மாயாவிஸ்’ சிறந்த அணியாக தேர்வு பெற்றது. ‘மோசமான அணி’ என்கிற டைட்டில் சாம்பார் அணிக்கு கிடைத்தது நல்ல பொருத்தம். ‘இத்துடன் டாஸ்க் முடிந்து தொலைத்தது’ என்று எரிச்சலுடன் வீட்டுக்குச் சென்றார் பிக் பாஸ். “எனக்கு இது சரியாப்படல. பாயிண்ட்ஸ் கிடைக்கணும்ன்னுதான் டீம் லீடர் சொல்றதுக்கு தலையாட்டினேன். இப்ப மோசமான டீம்ன்னு பேரு கெடச்சதுக்கு சாண்ட்ராதான் காரணம்” என்று வெளிப்படையாகவே புகாரை வைத்தார் கனி.

“என்னை எஃப்ஜே.. ரெண்டு வார்த்தை சொன்னான்.. ரெண்டு வார்த்தை.. சொன்னான்..” என்று கில்லி பிரகாஷ்ராஜ் மாதிரி சாண்ட்ரா கோபத்தில் உலவ “ஒப்புக்கு சப்பாணின்னு சொன்னான்” என்று எடுத்துக் கொடுத்தார் பிரஜின். பொறுப்பான கணவர்.
“இதையெல்லாம் நீங்க தட்டிக் கேட்கணும் பிக் பாஸ். இல்லாட்டி தொறந்து வெச்சிருக்கீங்கள்ல கண்ணை.. அடுத்த சீசன்ல மூடி வெச்சுக்கங்க” என்று கோபத்தில் பிக் பாஸ் மீதே வன்மத்தைக் கொட்டினார் சாண்ட்ரா.
கிச்சன் அதிகாரத்தை வைத்துக் கொண்டு இந்த வாரத்தில் மோசமாக நடந்து கொண்ட சாண்ட்ராவும் பாருவும், வீக்கெண்ட் பஞ்சாயத்தில் சிறப்பாக ரோஸ்ட் செய்யப்படுவார்கள் என்று நம்புவோம்.!

















