Golden Toilet: ``101 கிலோ தங்கத்தில் டாய்லெட்'' - ரூ.100 கோடிக்கு வாங்கியவர் என்...
நீலகிரியில் இருந்து நெல்லை வனப்பகுதியில் விடப்பட்ட ராதாகிருஷ்ணன் யானை உயிரிழந்தது எப்படி?
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ராதாகிருஷ்ணன் என்ற 30 வயது யானை அட்டகாசம் செய்து வந்தது.
தனியார் தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தும் பொதுமக்களை அச்சுறுத்தியது. அப்பகுதியில் 12 பேரை பலி வாங்கியது.

இதனையடுத்து வன உயிரின முதன்மை பாதுகாவலர் டோக்ரா உத்தரவின்படி ராதாகிருஷ்ணன் யானை பிடிக்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பக முகாமிற்கு கடந்த செப்டம்பர் 23-ம் தேதி கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் கடந்த அக்டோபர் 26-ம் தேதி நெல்லை மாவட்டம், களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை அடர்ந்த வனப்பகுதியில் ஜி.பி.எஸ் கருவியுடன் காலர் ஐ.டி பொருத்தப்பட்டு விடப்பட்டது.
இடமாற்றத்திற்குப் பிறகு யானை உடல் ஆரோக்கியமாக இருந்தது. நன்கு உணவு தேடியதுடன், வனப்பகுதியில் சுறுசுறுப்புடன் சுற்றித் திரிந்தது.
கடந்த 16-ம் தேதி மாலை 3.30 மணி வரை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையால் சிக்னல் பெறப்பட்டது.
இந்த நிலையில், மேல் கோதையாறு பகுதியில் ராதாகிருஷ்ணன் யானை, இறந்து கிடந்தது கடந்த 18-ம் தேதி காலை 9 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு நெல்லை கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் குமார், உதவிப் பேராசிரியர் முத்துகிருஷ்ணன் மற்றும் களக்காடு முண்டந்துறை வனத்துறையினர் முன்னிலையில் யானையின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சுமார் 20 அடி உயரமுள்ள செங்குத்தான சாலையோரச் சரிவுக்குக் கீழே உயிரிழந்து கிடந்த யானை, தனது முன்னங்காலை ஒரு பெரிய பாறையின் மீது வைத்த போது சறுக்கியிருக்கலாம்.
இதில் நிலை தடுமாறிய அந்த நொடியில் அதன் இடது முன்னங்கால் எதிர்பாராத விதமாக கல் ஒன்றின் மீது பட்டதில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது.
அந்தப்பகுதியின் தார்ச்சாலையில் விழுந்ததில் யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டு அதன் வலது தந்தம் சிதறியிருந்தது.

தும்பிக்கை மற்றும் வாயில் இருந்து அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. யானையின், உடல் வீங்கிய நிலையில் இருந்தது. மின்சாரம் தாக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
பிரேதப் பரிசோதனையில் அதன் மண்டை ஓட்டில் பல கூட்டு முறிவுகள் ஏற்பட்டிருந்ததும், கடுமையான உள் ரத்தப்போக்கு இருந்ததும், யானை கீழே விழுந்த உடனேயே உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது.













