எது காதல்? Rameshwaram School Girl Murd*r Case | Advocate Sumathi Interview
திமுக, அதிமுக-வுக்கு பிடிகொடுக்காத பிரேமலதா - தேமுதிக-வின் அடுத்த அரசியல் நகர்வு என்ன?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற்றிருந்தது. விருதுநகரில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனப் பெரிதும் நம்பிய பிரேமலதாவுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அ.தி.மு.க உதவியுடன் சகோதரர் சுதீஷை ராஜ்யசபா எம்.பி-யாக்கிவிடலாம், 2026 சட்டப்பேரவை தேர்தலையும் அ.தி.மு.க-வுடன் இணைந்து சந்திக்கலாமெனக் கணக்குப் போட்டிருந்தார்.

ஆனால் இதையெல்லாம், 'தே.மு.தி.க-வுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை' எனக்கூறி தவிடுபொடியாக்கினார், எடப்பாடி. அதுவரை அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதாகப் பேசிவந்த பிரேமலதா, "தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இப்போதே கூட்டணிபற்றி ஜோசியம் கூற முடியாது" என அப்போது அறிவித்தார். பிறகு தி.மு.க ஆதரவு ரூட்டில் பயணிக்கத் தொடங்கினார், அவர்.
தி.மு.க-வின் கச்சிதமான நகர்வு!
அ.தி.மு.க, தே.மு.தி.க இடையிலான அதிருப்தியை கச்சிதமாகத் தி.மு.க-வும் பயன்படுத்தியது. அதாவது அப்போது நடந்த தி.மு.க் பொதுக்குழுவில் விஜயகாந்த்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாகப் பிரேமலதாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார், முதலவர் ஸ்டாலின். பிறகு நடந்த மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தையில், 'தே.மு.தி.க-வுக்கு 5 சீட்டுதான்' என்றது அறிவாலயம். இதில் மீண்டும் கடுப்பானவர் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் என கட்சிக்குள் அதிரடி காட்டினார். அதன் ஒருபகுதியாகத் தமிழகம் முழுவதும் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் மைக் பிடிக்கும் பிரேமலதா, 'விரைவில் கடலூரில் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த இருக்கிறோம். அதில்தான் கூட்டணிகுறித்து அறிவிக்கப்படும். நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம். அடுத்த ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்' எனப் பேசி வருகிறார்.
இதற்கிடையில் மதுரையில் கடந்த 17-ம் தேதி நடந்த தே.மு.தி.க வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த விஷயங்கள்தான் தே.மு.தி.க-வை மீண்டும் லைம்லைட்டுக்கு கொண்டுவந்திருக்கிறது. அன்றையதினம் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரேமலதாவும் மதுரைக்கு வந்திருந்தார். அவரை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் உதயகுமார் சந்தித்து பேசினார்.
காக்கவைக்கப்பட்ட உதயகுமார்!
பிரேலதாவை சந்திக்கும் முன்பாக, தே.மு.தி.கக்கூட்டம் நடந்த மண்டபத்தின் ஓர் அறையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக உதயகுமார் காக்கவைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தை முடித்துவிட்டு வந்து அவரைச் சந்தித்த பிரேமலதா, உதயகுமாரை உட்காரவைத்துக் கூடப் பேசாமல் நிற்க வைத்தே சுமார் 5 நிமிடங்கள் பேசிவிட்டு வழியனுப்பி வைத்தாராம்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், "தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே எங்களுக்குத் தோழமைக் கட்சிகள்தான். அவர்கள் எல்லோருமே தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் மாவட்டச் செயலாளர்களையும், நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி மக்கள் மனநிலையையும் ஆராய்ந்து நாங்கள் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்போம். இவங்க கூடதான் கூட்டணி... அவங்ககூட தான் கூட்டணி என்று நாங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. எங்கம்மாவின் மறைவுக்கு அனைத்து தலைவர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். அந்த அடிப்படையில் தான் உதயகுமாரும் இன்று என்னைச் சந்தித்து துக்கம் விசாரித்தார்” என்றார் அதிரடியாக.
ஆனால் இந்தச் சந்திப்புக்கு முன்னதாக உதயகுமார், "பிரேமலதாவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கும்படி இ.பி.எஸ்தான் தன்னை அனுப்பி வைத்தார்" எனக் கூறியிருந்தார். ஆனாலும் பிரேமலதா பிடி கொடுக்கவில்லை.
ஏற்கெனவே தி.மு.க-வுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையும் ஒர்கவுட் ஆகாத சூழலில் அ.தி.மு.க-வுக்கும் பிரேமலதா பிடிகொடுக்கவில்லை. இதையடுத்து அவரது திட்டம்தான் என்ன என விசாரித்தோம்?

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவால் அனுதாப அலையில் எப்படியும் விஜயபிரபாகரன் வெற்றிபெற்றுவிடுவாரெனப் பிரேமலதா பெரிதும் நம்பினார். அது நடக்காததால் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என உறுதியாக இருந்தார். ஆனால் கடைசிநேரத்தில் அ.தி.மு.க கையைவிரித்துவிட்டது. இதில் பிரேமலதாவுக்கு ஏக மன வருத்தம். இதையடுத்துதான் தி.மு.க பக்கம் நகரத் தொடங்கினார். அமைச்சர் ஒருவர் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில், 'வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள். நல்ல எண்ணிக்கையில் உங்களுக்குச் சீட் தருகிறோம். தேர்தல் செலவையும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டதாம்.
பிரேமலதாவின் டிமாண்ட் என்ன?
ஆனால் தே.மு.தி.க தரப்பில் பேசியவர்கள், 'தி.மு.க எங்களுக்கு 15 சீட், 2 ராஜ்யசபா சீட், தேர்தல் செலவு' என டிமாண்ட் வைத்ததாக தகவல். ஆனால் இதற்குத் தி.மு.க-விலிருந்து கிரீன் சிக்னல் வரவில்லை. எனவேதான் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகவும் பிரேமலதா அறிவிக்கவில்லை.
அதேநேரத்தில் 'அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற வேண்டும் என்றால் ஏற்கெனவே சொன்னதுபோல் ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும். அதைப் பொதுவெளியில் முன்னதாகவே அறிவிக்க வேண்டும். கூடவே 20 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' எனத் தே.மு.தி.க தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அ.தி.மு.க-வும் ஓகே சொல்லவில்லை.
தே.ஜ கூட்டணிக்குப் பா.ம.க-வை கொண்டுசெல்ல பா.ஜ.கத்தீவிரமாக முயற்சி செய்கிறது. எனவே தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இருந்தால் வட மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைப் பெற முடியும் எனத் தி.மு.க கணக்கு போடுகிறது. அதேநேரத்தில் 5 முதல் 8 தொகுதிகள்வரை மட்டுமே தே.மு.தி.க-வுக்கு கொடுக்கத் தி.மு.க ரெடியாக இருக்கிறது. இதனால்தான் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக இருக்கிறது. மறுபக்கம் தே.மு.தி.க-வின் அனைத்து கோரிக்கையும் ஏற்பதற்கு அ.தி.மு.க-வும் தயாராக இல்லை.
அதேநேரத்தில் தே.மு.தி.க-வை இழப்பதற்கும் அவர்கள் தயாராக இல்லை. ஏனெனில் ஏற்கெனவே அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் எக்கச்சக்க பஞ்சயத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் தே.மு.தி.க-வை இழக்க வேண்டாமென அ.தி.மு.க தலைமையும் நினைக்கிறது. மேலும் பிரேமலதாவுடன் தங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவே உதயகுமார் மூலமாகச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டது.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்!
ஏனெனில் மதுரையில் பிரேமலதா தங்கியிருந்தபோது யாருக்கும் தெரியாமல் உதயகுமார் சந்தித்திருக்கலாம். ஆனால் பிற கட்சிகளிடத்தில் அ.தி.மு.க, தே.மு.தி.க இடையே நல்ல உறவு இருக்கிறது எனக் காட்டிக்கொளவதற்குத்தான் வெளிப்படையாக உதயகுமார் சந்திக்க சென்றிருந்தார். முன்னதாகக் கடந்த மக்களவை தேர்தலில் அவர் விஜயபிரபாகரனுக்காகப் பணியாற்றியிருந்தார். எனவேதான் எடப்பாடி அவரை அனுப்பி வைத்திருந்தார்.
ஆனால் அ.தி.மு.க-வின் இந்த அரசியல் பிரேமலதாவும் நன்கு தெரியும். அவர் அ.தி.மு.க-வுடன் சுமுகமான உறவில் இல்லை. தி.மு.க-வுடனும் கூட்டணிக்குத் தயாராக இருக்கிறோம் என்பதை வெளியில் காட்டும் விதமாகச் சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு உதயகுமாரை அனுப்பி வைத்துவிட்டார். இதன் மூலம் அ.தி.மு.க தங்களது தயவை தேடுகிறது என வெளியில் தெரியவைத்துவிட்டார்.
மேலும் பலத்தை காட்டும் விதமாகக் கடலூரில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த பிரேமலதா தயாராகி வருகிறார். அவரது டிமாண்டை பூர்த்தி செய்யும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்பார். இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்" என்றனர்.

இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காகத் தே.மு.தி.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதியை பல வழிகளில் தொடர்பு கொண்டும் அவர் பதில் அளிக்கவில்லை. அவர் தனது கருத்தை தெரிவிக்கும் பட்சத்தில் அது உரிய பரிசீலனைக்கு பிறகு பிரசுரிக்கப்படும்!















