செய்திகள் :

``அம்மாவும் ஓவியமும் இருக்க எனக்கென்ன குறைச்சல்'' - அரியலூர் மாணவரின் தன்னம்பிக்கை கதை!

post image

உடல் உறுப்புகள் எல்லாம் இயல்பாக இருந்தும், 'என் கிட்ட என்ன இருக்கு ஜெயிக்க' என்று தன்னம்பிக்கை இல்லாமல் பலபேர் நடமாடிக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், வாய் மற்றும் செவி சவால் கொண்ட பாலமுருகனின் கதை அத்தனை தன்னம்பிக்கை தருகிறது நமக்கு. வாருங்கள், அவருடன் உரையாடுவோம்.

குடும்பத்தினருடன் பாலமுருகன்
குடும்பத்தினருடன் பாலமுருகன்

''பிறந்தது அரியலூர் மாவட்டத்துல இருக்கிற பெரிய திருக்கோணம் கிராமத்துல. அப்பா, பாண்டியன். அம்மா, மாலா. ஒரு தங்கச்சி இருக்காங்க. பேரு கிருஷ்ணவேணி. எனக்குப் பிறக்கும்போதே காது கேட்காது. வாயும் பேச வராது. என் தங்கச்சியும் என்னைப்போலவே தான். எங்க ஊர் ஸ்கூல்ல பத்தாவது வரைக்கும் படிச்சேன். பிளஸ் ஒன், பிளஸ் டூ சென்னையில படிச்சேன். அதுக்கப்புறம் என்ன படிக்கிறதுங்கிற ஐடியா எதுவுமே இல்ல எனக்கு.

சின்ன வயசுல இருந்தே படம் வரைவேன். நான் வரையுறது நல்லா இருக்குன்னு நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. அதனால, ஓவியம் வரையுறதுக்கு கத்துக்கொடுக்கிற காலேஜ் இருக்கான்னு நானும் எங்கம்மாவும் தேட ஆரம்பிச்சோம்.

'படம் வரைஞ்சா வேலை கிடைக்குமா; அது சோறு போடுமா; அதெல்லாம் ஒண்ணும் வேணா; இவனை வேற ஏதாவது படிக்க வையுங்க'ன்னு நிறைய பேர் எங்கம்மா கிட்ட சொன்னாங்க. ஆனா, எங்கம்மா அதையெல்லாம் பெருசா எடுத்துக்கல. என்னை கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில சேர்த்தாங்க.

முதல்வரிடம் விருது பெறுகிறார் பாலமுருகன்
முதல்வரிடம் விருது பெறுகிறார் பாலமுருகன்

ஆரம்பத்துல, கூட படிக்கிறவங்க பேசுறதும், ஆசிரியர்கள் சொல்லித்தர்றதும் ஒண்ணுமே புரியாது. நான் ஏதாவது சைகை மொழியில கேட்டாலும், சொன்னாலும் அவங்களுக்கும் புரியாது. ஒரு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டேன்.

இந்த நேரத்துல என்னைப்போலவே இன்னொருத்தரும் எங்க காலேஜ்ல சேர்ந்தார். கொஞ்சம் தைரியம் வந்துச்சு. அதுக்கப்புறம், எங்களோட சைகை பாஷை மத்தவங்களுக்கும் மெள்ள மெள்ள புரிய ஆரம்பிச்சிது. ஆசிரியர்களோட கவனமும் அரவணைப்பும் கிடைச்சிது'' என்றவரிடம், 'பள்ளிக்கூடத்தில் வரைந்ததும் இங்கு வரைவதும் ஒன்றா' என்றோம்.

''ஆரம்பத்துல நான்கூட அப்படித்தாண்ணே நினைச்சேன். ஆனா, அப்படி கிடையாது. எங்க காலேஜ்ல வண்ணக்கலை, சிற்பக்கலை, காட்சித்தொடர்பு கலைன்னு 3 பிரிவுகள் இருக்கு. எல்லாத்துக்கும் அடிப்படை ஓவியம். நான் இதுல சிற்பக்கலை படிச்சிட்டிருக்கேன்'' என்கிற பாலமுருகன், தற்போது சிற்பக்கலையில் மாஸ்டர் டிகிரி படித்துக்கொண்டிருக்கிறார்.

தன் திறமைக்காக பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார் பாலமுருகன்.

பாலமுருகன்
பாலமுருகன்

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் சென்னை கலை பண்பாட்டு துறையில் இவருடைய சிற்பம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக தமிழக முதல்வர் கையால் பரிசு வாங்கியிருக்கிறார்.

அதேபோல, இராஜரஜ சோழரின் பிறந்தநாளை ஒட்டி வருடாவருடம் நடத்தப்படும் போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளதாக சொல்கிறார். தான் வடித்த செம்பியன் மாதேவியின் சிற்பம் சென்னையில் நடத்தப்பட்ட கண்காட்சியில் வைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது என்கிறார் மகிழ்ச்சி முகமாக.

''எனக்கும் என் தங்கச்சிக்கும் நம்பிக்கை கொடுத்து வளர்த்ததுல அம்மாவுக்கு முக்கியமான பங்கிருக்கு. அவ இப்போ பி.ஏ படிக்கிறா. எங்க ரெண்டு பேருக்கும் எது சரியோ, எது தேவையோ அவற்றையெல்லாம் பார்த்து பார்த்து செஞ்சது, நான் இந்தளவுக்கு வளர்ந்ததுக்கு என எல்லாத்துக்கும் காரணம் எங்கம்மா தான்.

எங்கம்மாவும் ஓவியமும் இருக்க எனக்கென்ன குறைச்சல்... என்னோட நண்பர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் என் வாழ்க்கையோட ஒவ்வொரு ஸ்டேஜ்லேயும் நாங்க உன்கூடவே தான் இருக்கோம்னு தைரியம் கொடுத்திருக்காங்க.

எங்கப்பா எனக்குக் கொடுத்தது உண்மையான கலப்படமில்லாத நம்பிக்கைன்னு சொல்வேன். '' என்று பாலமுருகன் தனக்கே உரிய சைகை மொழியில் நம்மிடம் பேச பேச, அவருடைய மகிழ்ச்சி நமக்கும் தொற்றிக்கொண்டது.

வாழ்த்துகள் பாலமுருகன்.

’’வானத்துல இருந்து பூமியைப் பார்த்தோம்’’ - மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர்!

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், சில தினங்களுக்கு முன்னால் தன்னுடைய மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார். மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர்நம் ந... மேலும் பார்க்க

Saalumarada Thimmakka: `மரங்களின் தாய்' பத்மஶ்ரீ திம்மக்கா காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்

புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா (114), சில காலமாக உடல்நிலை சரியில்லாமல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். யார்... மேலும் பார்க்க

மகள் திருமணத்திற்கு முந்தைய நாள் தந்தை மரணம்; மறைத்து திருமணம் நடத்திய அண்ணன்; துரை வைகோ உருக்கம்

மறுநாள் சகோதரியின் திருமணம் நடைபெற இருந்த நிலையில் முதல்நாள் மாரடைப்பில் தந்தை மறைந்துவிட அந்தத் தகவலை மறைத்து சகோதரிக்கு இளைஞர் ஒருவர் திருமண விழாவை நடத்தியதாக, திருச்சி எம்.பி துரை வைகோ உருக்கமாகப் ... மேலும் பார்க்க

`பிள்ளைய கட்டுவிரியன் கடிச்சதே தெரியல; கடவுள் போல அரசு மருத்துவர்கள் மீட்டாங்க!' - நெகிழும் பெற்றோர்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள குளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர், கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதியினரின் ஆறு வயது மகள் மதுஸ்ரீ. கடந்த... மேலும் பார்க்க

``நம்ம வீடு இருட்டா இருந்தா, அப்படியே விடுவோமா?'' - சொந்த செலவில் ஊரை வெளிச்சமாக்கிய காவலர் தம்பதி

60 அடி உயர ஹைமாஸ் லைட்கடலூர் மாவட்டம், பண்ருட்டி கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த காவலர் அருண்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படையில் பணியாற்றி வருகிறார். அருண்குமார் மனைவி, க... மேலும் பார்க்க