`2,800 ஆமை குஞ்சுகள்' சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தல் - சுங்கத்துறை தீவ...
ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்: சிம்ம முகத்துடன் தாயார், கருடன்; ஒரே தலத்தில் 9 நரசிம்மர்
பெருமாள் ஸ்ரீநரசிம்மராக எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் பல தமிழகம் முழுவதும் உள்ளன. அவற்றுள் சில தலங்கள் தனித்துவம் வாய்ந்தவை. பொதுவாக நரசிம்மம் என்றால் பெருமாள் சிங்க முகத்தோடு காட்சிகொடுப்பார் அல்லவா... ஆனால் ஒரு தலத்தில் பெருமாள் மட்டுமல்ல கருடாழ்வார், தாயார் ஆகியோரும் சிம்ம முகத்தோடு காட்சி அருள்கின்றனர்.
மேலும் இங்கே ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் அருள்பாலிப்பது சிறப்பு. அதனாலேயே இதை தட்சிண அஹோபிலம் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் திவ்ய தேசங்களுக்கு இணையான மகிமையும் பெருமையும் வாய்ந்த அந்தத் தலத்தை தரிசிப்போம்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ளது ஆவணியாபுரம். இங்குள்ள சிறுமலையில்தான் ஒன்பது நரசிம்மர்கள் கோயில் கொண்டிருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.

வரவேற்பு வளைவில் காட்சிகொடுக்கும் தாயாரையும் பெருமாளையும் வணங்கிப் படியேற ஆரம்பிக்க வேண்டும். 30 படிகளைக் கடந்ததும் லட்சுமி நரசிம்மர் சந்நிதியை அடைந்துவிடுவோம்.
மலை இடுக்கில் அமைந்திருக்கும் கருவறையில் அற்புதமாய்க் காட்சி தருகிறார் லட்சுமி நரசிம்மர். அவருடைய மடியில் அமர்ந்து அருளும் லட்சுமிப் பிராட்டியும், சிம்ம முகத்துடன் காட்சி தருகிறார்.
பெருமாளும் தாயாரும் அருளும் இந்த சேவை மனதை நிறைக்கிறது. அதேபோன்று மனத்தில் பாரங்கள் இருந்தாலும் போக்கிவிடுகிறது. தரிசனம் செய்யும்போதே பல பக்தர்கள் உடல் சிலிர்ப்பதை இங்கே உணர்கிறார்கள்.
இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தபிறகு அந்த உக்கிரத்தோடு இந்த மலைமீது வந்து அமர்ந்தாராம். அதன்காரணமாக இங்கே சுயம்பு மூர்த்தி ஒன்று தோன்றிற்று. அவரே தற்போதும் சேவை சாதிக்கும் மூலவர்.
இவரின் உக்கிரத்தைத் தணிக்க பிரம்மன் யாகம் ஒன்றைச் செய்தார். அதன் முடிவில் தாயாரும் சிம்ம முகம் ஏற்க கருடரும் தானும் இங்கே சிம்ம முகத்தோடு அருள்பாலிக்க விரும்புவதைத் தெரிவித்தார். அவ்வண்ணமே இந்தக் கோயிலில் மூர்த்திகளாக எழுந்தருளி சேவை சாதித்து வருகின்றனர்.
மூலவர் சந்நிதியிலேயே நரசிம்மரின் இரண்டு உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஒருவர் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி சமேதராக அருள்பாலிக்க, மற்றொருவர் சிம்மமுகப் பிராட்டியை மடியில் இருத்தியபடி அருள்கிறார்.
தனிச் சந்நிதியில் இங்கே அலர்மேல் மங்கைத் தாயார் அருள்கிறார். தாயார் சந்நிதிக்கு அடுத்தாற்போல் ஒரே சந்நிதியில் வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்ம மூர்த்திகள் தெற்கு நோக்கி அருள்கின்றனர்.
அவர்களுக்கு அருகில் இரண்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களை வழிபட்டால் ராகு, கேது தோஷம் விலகும் என்பது ஐதிகம்.

இங்கே தரிசனம் முடிந்து மேலும் படிகள் ஏறினால், மலை உச்சியில் திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசிக்கலாம். அவரை வலம் வரும்போது, வெளிச்சுற்றில் சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள், அமிர்தவல்லித் தாயார் ஆகியோர் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.
ஹிரண்யனை அழித்து தங்களைக் காத்த சிம்ம விஷ்ணுவை இங்கே தேவர்கள் வேதம் சொல்லி வழிபட்டார்கள். இன்றும் அவர்கள் வெப்பாலை மரங்களாக உருமாறி இந்த மலையில் நின்று வழிபட்டுவருகிறார்கள் என்கின்றன ஞானநூல்கள்.
மலையின் மத்தியில் லட்சுமி நரசிம்மர் சந்நிதியில் மூன்று நரசிம்மர்கள், அவரை வலம் வரும் பாதையில் ஐந்து நரசிம்மர்கள், மலைக்கு மேலே யோக நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர்கள் இங்கே அருள்கிறார்கள்.
இங்கே சுற்றியிருக்கும் கிராம மக்கள் பலரும் இந்த நரசிம்மரையே தங்களின் காவல் தெய்வமாக நினைத்து வழிபடுகிறார்கள். நரசிம்மரின் அருளால் விவசாயம் செழிக்க, அவற்றில் சிறு பகுதியைக் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்; திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம்.

















