'கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது, திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது' - நயினார...
சபரிமலை: `கூட்டத்திற்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங்' -தேவசம்போர்டு முடிவு; பக்தர்களுக்கு கைகொடுக்குமா?
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலக்கால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பக்தர்களும் ஸ்பாட் புக்கிங்க்மூலம் 20,000 பக்தர்கள் என மொத்தம் 90,000 பக்தர்களை தினமும் அனுமதிக்க முதலில் முடிவுசெய்யப்பட்டது.
ஆனால் மண்டல பூஜைகள் தொடங்கப்பட்ட கடந்த 18-ம் தேதி, கடுமையான பக்தர்கள கூட்டத்தால் சபரிமலை சிக்கி திணறியது.
குழந்தைகளும் முதியவர்களும் குடிக்க தண்ணீர் மற்றும் உணவுக்கிடைக்காமல் தவித்தனர். டாய்லெட் வசதியின்மையும் ஏற்பட்டது.

கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் அளித்த தகவலின் அடிப்படையில், கேரள ஐகோர்ட் விசாரணை நடத்தி, தினமும் 20,000 ஸ்பாட் புக்கிங்கை 5,000 ஆக குறைத்தது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரை அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவித்தது. இதையடுத்து, தினமும் 75,000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியிருந்தது.
இதற்கிடையில், கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் தலைமையில் பம்பாவில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், சபரிமலையில் தினசரி வருகைதரும் பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஐகோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது.
அதுபோல, ஒவ்வொரு நாளும் சன்னிதானத்தில் அனைத்து துறையினரின் கூட்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பம்பா மற்றும் நிலக்கல்லில் முக்கிய துறைகளின் அதிகாரிகள் தலைமையில் இதே போன்ற கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தற்போது, பதினெட்டாம் படியில் நிமிடத்திற்கு சராசரியாக 70 பேர் ஏறிச் செல்கின்றனர். அது 85 ஆக அதிகரிக்கப்படும். அதற்காக அனுபவம் வாய்ந்த போலீசாரும் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.
பார்க்கிங், கழிப்பறைகளை சுத்தம் செய்தல், குடிநீர் விநியோகம், டோலி பிரச்னை போன்ற விஷயங்களையும் அமைச்சர் வாசவன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இப்போது சபரிமலையில் மிதமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. ஐகோர்ட் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை குறைத்ததற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.
சபரிமலைக்கு வருகைதந்த அனைத்து பக்தர்களுக்கும் ஸ்பாட் புக்கிங் வழங்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

அதே சமயம், ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்துக்கு வருகைதராமல் இருப்பதும் கருத்தில் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ஸ்பாட் புக்கிங் அதிகரிக்கப்படும்.
இதன்மூலம் கூட்டமும் கட்டுப்படுத்தப்பட்டு, பிற பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பதே தேவசம்போர்டின் திட்டமாக உள்ளது. இது பக்தர்களுக்கு அனுகூலமான முடிவு என்றாலும், மீண்டும் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்காமல் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எண்ணமாக உள்ளது.
















