Vikatan Digital Awards 2025 UNCUT: "Vijay Varadharaj-ன் பாராட்டு ரொம்ப முக்கியமா...
தீவிரமாகும் பொதுக்குழு ஏற்பாடு; டெல்லியில் ஓ.பி.எஸ்... அதிமுகவில் கிளைமேட் சேஞ்ச் நடக்குமா?
2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் அனலைக் கிளப்பியது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல், வரலாற்றுச் சிறப்பு பொதுக்குழு என்ற பெயரெடுத்த அதிமுக பொதுக்குழு வரை வெடித்தது. 2022 ஜூலை மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்ட அதேநேரத்தில், பொருளாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ்.

அதைத்தொடர்ந்து தர்மயுத்தம் 2.0 நடத்திய ஓ.பி.எஸ், தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டநிலையில், வரும் டிசம்பர் 10-ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டியிருக்கிறார் எடப்பாடி. அதேநேரத்தில், டிசம்பர் 15-ம் தேதி முக்கியமான ஓர் முடிவை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், ஆடிட்டர் குருமூர்த்தியுடன் டெல்லியில் ஓ.பி.எஸ் முகாமிட்டிருப்பதால், அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பாக ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலரிடம் பேசும்போது, " அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் நீக்கப்பட்ட பிறகு, அவருடன் பயணித்த ஜெ.சி.டி பிரபாகரன், புகழேந்தி உள்ளிட்ட பலரும் பிரிந்து சென்று முன்னாள் எம்.பி-யான கே.சி. பழனிசாமியுடன் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற நடத்தி வருகின்றனர். ஓ.பி.எஸ்ஸுக்கு மிக பக்கப்பலமாக இருந்த மனோஜ் பாண்டியனும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். அதிமுகவில் இணைப்பை ஏற்படுத்தலாமென்று வண்டியில் ஏறிய செங்கோட்டையனும், த.வெ.க-வில் இறங்கிவிட்டார்.

இதனால், இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக தொ.உ.மீ.கு இருக்கிறது. அதன்படி, சமீபத்தில் நடந்த உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், குழுவைக் கழகமாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்மூலம், தி.மு.க, த.வெ.க என யாருடன்வேண்டுமென்றாலும் கூட்டணி வைக்கலாம் என்பதுதான் திட்டம். ஆனால், இதனை ஓ.பி.எஸ் முழு மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான், இறுதிக்கட்டமாக டெல்லி பாஜக தலைவர்களை ஒருமுறை சந்தித்துப் பேச முடிவெடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ். அதன்படியே, டெல்லிக்கு தனது மகன் ரவீந்தர்நாத் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பயணப்பட்டிருக்கிறார்.
முதற்கட்டமாக, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். அடுத்தப்படியாக பிரதமர் மோடியைச் சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது, ஓ.பி.எஸ்ஸையும் தினகரனையும் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு டெல்லி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல, ரவீந்தர்நாத்தின் எதிர்காலம் குறித்தும் அவரை பாஜகவில் இணைக்கலாமா என்பது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு பேசப்பட்டது குறித்து முழு விவரம் இன்னும் முழுமையாக எங்களுக்கே தெரியவில்லை. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்தபிறகுதான் அதுகுறித்து முழுவிவரம் தெரிய வரும்" என்றனர் சுருக்கமாக.

" என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில், தினகரனையும் ஓ.பி.எஸ்ஸையும் உள்ளே கொண்டுவர டெல்லி காய்நகர்த்தி வருகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் முக்கியத் தலைவரான அருண்குமார் கடந்த மாதம் எடப்பாடியை சென்னையில் வைத்து சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது, தினகரனையும் ஓபிஎஸ்ஸையும் அதிமுகவில் இணைக்கவே முடியாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்திருக்கிறார். ஆனால், அவர்களை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி எந்தத் தடையுமே விதிக்கவில்லை. அதன்படி, தினகரனைப்போல ஓ.பி.எஸ்ஸும் புது கட்சியைத் தொடங்கினால், என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என்பது டெல்லி தலைவர்களின் கணக்காக உள்ளது. அப்படி செய்தால், அதிமுகவுக்கு ஓ.பி.எஸ் எப்போதுமே உரிமை கொண்டாட முடியாது. இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடியின் கைகளுக்கு முழுமையாகச் சென்றுவிடும். இது த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று ஆசையிலிருக்கும் எடப்பாடிக்குச் சாதகமாகிவிடும். இந்த ரிஸ்கை எடுக்கலாமா என்பது உள்ளிட்ட ஆலோசனைகளைதான் டெல்லி தலைவர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாகதான், ஓ.பி.எஸ் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்." என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.
டிசம்பர் 10-ம் தேதி பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் இந்தச் சூழலில், டெல்லியில் ஓ.பி.எஸ் முகாமிட்டிருப்பது அதிமுகவின் நிலைமையை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

















