Vikatan Digital Awards 2025 UNCUT: "Vijay Varadharaj-ன் பாராட்டு ரொம்ப முக்கியமா...
திருப்பரங்குன்றம்: "6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால்" - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
டிசம்பர் 2ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, "இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம்" என்று தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பை இந்து அமைப்பினர், பாஜகவினர் வரவேற்றனர்.
"கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறார்கள் இந்து அமைப்பினர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அதுவும் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்றலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீபம் ஏற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்றாமல், மதநல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே உள்ள நில அளவை கல்லை இந்துத்துவா அமைப்புகள் தீபத்தூண் என்று கூறி அங்கே தீபம் ஏற்றுவாதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி" என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீட்டை நேற்றே தாக்கல் செய்திருந்தது.
இன்று கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் இன்று மதியம் முதல் இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடந்தது.
தற்போது இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து உரிய பாதுகாப்புடன் தீபம் ஏற்றும் கொப்பரை திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. சரியாக 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றபடவிருக்கிறது.
















