``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது...
``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது"- தமிழருவி மணியன்
காந்திய மக்கள் இயக்கமாக இருந்து பிறகு காமராஜர் மக்கள் கட்சியாக மாறிய தமிழருவி மணியனின் கட்சி ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைந்திருக்கிறது. மணியன், ஜி.கே. வாசன் இருவரும் இதை முறைப்படி அறிவித்துவிட்ட நிலையில் வரும் 20-ம் தேதி ஈரோட்டில் இணைப்பு விழா நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குகிற சூழலில் ஏன் இப்படியொரு முடிவு? எழுத்து, பேச்சு, தமிழ் என பொதுத் தளத்தில் அரை நூறாண்டு கடந்து இயங்கி வரும் தமிழருவி மணியனிடம் பேசினோம்.

திமுக அதைச் செய்யாமல் விட்டால்தான் ஆச்சரியம்!
’தமிழ் நாட்டை மட்டுமல்ல பிரபஞ்சத்தையே உலுக்கிய இரு அரசியல் கட்சிகளின் இணைப்பு’ என சமூக வலைதளங்களில் மீம் கார்டு பார்த்தீர்கள்தானே? அங்கிருந்தே தொடங்குகிறேன். தூய்மையான அரசியலை விரும்புகிற என்னுடைய கேள்விகளுக்கு பதில் இல்லாதவர்களிடம் இருந்துதான் இது போன்ற கேலி, கிண்டல்கள். நேரடியாகவே விவகாரத்துக்குள் வந்துவிடுகிறேன். என்னை இப்படி கிண்டல் செய்தால் சன்மானம் உண்டு என யாராவது சொன்னால், அதற்கு நான்கு பேர் காது கொடுப்பார்கள்தானே?
ஆளுங்கட்சியினர் நடத்தும் தொலைக்காட்சியில் இப்படி கிண்டல் செய்திருந்ததை பார்த்தேன். திமுகவின் வரலாறு தெரிந்தவன் நான். எனவே நான் கேட்கிற கேள்விகளுக்கு நியாயமான பதிலை அவரக்ளால் தர முடியாது. எனவே வன்மத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் அப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சரியம்.
காட்டிவிட்டுப் போகட்டும். யுகத்தில் இது கலிகாலம். இப்போது என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். அரசியல் களம் மட்டும் விதிவிலக்காகுமா? செந்தில் பாலாஜியும் சேகர் பாபுக்களும் சூழ்ந்த அரசியல் உலகில் என்னைப் போன்றவர்கள் என்ன மாற்றத்தை எப்படிக்கொண்டு வந்து விட முடியும். கோயில் கும்பாபிஷேகம் என்றால் முன் நின்று நடத்துவதே சேகர் பாபுதான். இதனால் இப்போதெல்லாம் எனக்கு கடவுளை வணங்குவதையே விட்டு விடலாமென தோன்றுகிறது’’ என்றவரிடம் தொடர்ந்து கேள்விகளை வைத்தோம்.

விரக்தியில் எடுக்கப்பட்ட முடிவா இது?
காந்திய மக்கள் இயக்கம் தொடங்கியபோதே தேர்தல் அரசியல் என்கிற பாதை வேண்டாமென்றே நினைத்தேன். கட்சியின் தம்பிமார்கள் தேர்தல் அரசியலுக்குள் சென்றால்தான் ஏதாவது செய்ய முடியுமென வலியுறுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். அவர்களின் கருத்தைப் புறக்கணிக்க முடியவில்லை. பிறகு ஒருகட்டத்தில் ’காந்தி’ என்பது வட இந்தியப் பெயராக இருக்கிறது; காமராஜர் என மாற்றலாமென்றார்கள். ’காமராஜரே காந்தியைத் தலைவராக ஏற்றவர்தானே’ என வாதாடிப் பார்த்தேன். ஆனால் பெயர் மாற்றிப் பார்க்கலாமென உறுதியாக இருந்தார்கள் அவர்கள். தன் கைக்காசைப் போட்டு அரசியல் செய்து வருகிற அவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதால் அதற்கும் சம்மதித்தேன். அதன் பிறகும் இன்றைய அரசியல் களத்துக்குத் தேவையான தகுதிகளை வளர்க்க விரும்பாததால் இப்படியொரு முடிவு எடுக்க வேண்டிய சூழல். என்னைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசித்து இப்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில் சரியெனப் பட்டவர்களுடன் இணைந்து செயல்படலாமென்றுதான் இந்த முடிவு.
திமுக அதிமுக வேண்டாமென்றுதான் ரஜினி வர வேண்டுமென்றீர்கள். இப்போது புதியதொரு கட்சி திமுக அதிமுகவை எதிர்த்து அரசியலுக்கு வந்திருக்கிறதே. அவர்களை ஆதரிக்கும் எண்ணம் வரவில்லையா?
‘’ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் எல்லாம் இருக்கிறார்களே, அந்தக் கட்சியைச் சொல்கிறீர்களா? இவர்கள் இருவரும் எங்கிருந்து வந்தார்கள்? ஜெயலலிதா ஊழல் செய்தார் என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அவரையும் புதிதாக வந்தக் கட்சியின் கொள்கைத் தலைவர்களோடு சேர்த்துக் கொண்டார் செங்கோட்டையன். இவர்களிடம் நான் எப்படிச் செல்ல முடியும்? ரஜினி முதல்வராக வர வேண்டுமென்றதன் பின்னணி வேறு. அதை இதனோடு ஒப்பிட முடியாது.

அரசு கொடுத்த விட்டில் இருந்து கொண்டே அரசை விமர்சிக்கிறீர்கள் என உங்கள் மீது குற்றம் சாட்டினார்களே?
இந்த இடத்தில் அதற்கான முழு விளக்கத்தைத் தருகிறேன். திட்டக்குழு உறுப்பினராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டபோது சென்னை கீழ்ப்பாகத்தில் இருக்கும் அந்த அரசு வீடு எனக்கு ஒதுக்கப்பட்டது. அந்தப் பதவி வகிப்பவருக்கு அரசு சார்பில் இலவசமாகவே வீடு தரலாமெனச் சொன்னார்கள். நான் தான் அப்படி வேண்டாம்; குறைவான வாடகையாவது தருகிறேன் என்றேன். மாதம் ரூபாய் 4000 நிர்ணயிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக வாடகை உயர்ந்து கடைசியில் 26000 என வந்து நின்றது.
ஓய்வுக்காலத்தில் எனக்கு அது பெரிய தொகையாகத் தெரிந்ததால், வெளியில் குறைவான வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்துக் கிளம்பலாமென முடிவு செய்தேன். அந்த நேரத்தில் நண்பரான நடிகர் சிவகுமார் வீட்டுக்கு வந்தார். ‘ஏன் இப்படிப் பண்றீங்க’ என்றவர், என்னிடம் தெரிவிக்காமலே இந்த விஷயத்தை முதல்வர் ஸ்டாலினிடம் கொண்டு போயிருக்கிறார். மறுநாள் உதயச்சந்திரன் ஐஏஎஸ் பேசி ’நீங்கள் இருக்கும் வரை 4000 ரூபாய் வாடகையிலேயே இருக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர்’ என்றார். சிவகுமாரிடம் பேசி கோபித்துக் கொண்டேன். ஆனால் அவருமே நட்புக்காகவே அதைச் செய்தார்.
இருந்த போதும் எனக்கு மனம் ஒப்பவில்லை. இந்தச் சலுகை நாளை ஒருவேளை இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறபோது குறுக்கே வந்தால்? எனவே முதல்வர் உத்தரவுபோட்ட 15வது நாளில் அவருக்குக் கடிதம் எழுதினேன்.
‘என்னுடைய பொருளாதரச் சூழல் அறிந்து தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மிக்க நன்றி. இருந்தாலும் என்னால் இதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடியாததால் வீட்டை அரசிடமே ஒப்படைத்து விடுகிறேன்’ என கடிதம் அனுப்பி விட்டு வீட்டைக் காலி செய்து விட்டேன்.
தற்போது வேறு ஒரு பகுதியில் என்னால் கொடுக்க முடிந்த வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்து வசித்து வருகிறேன். இது தெரியாத சிலர் இன்னும் பழைய சேற்றையே வாரி இறைத்து வருகின்றனர், பாவம், அவர்களது அறியாமையை என்ன சொல்வது?














