Career: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் வேலை; லட்சங்களில் சம்பளம்; எப்படி...
Telangana: `இந்து கடவுள்களை அவமதித்தாரா ரேவந்த் ரெட்டி?' - நடந்தது என்ன? முழுத் தகவல்!
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நேற்று கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் இறுதியில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக முதல்வர் ரேவந்த் ரெட்டி உரையாற்றினார்.
அப்போது, ``நான் நேற்று கால்பந்து ஆடப் போனேன். ஒருவர் 'எனக்குக் கால் வலிக்கிறது, அதனால் வெளியே உட்கார்ந்திருக்கிறேன்' என்றார். அதற்கு நான், 'நீ நன்றாக நடக்கிறாயே! கால்பந்தை காலால்தானே ஆடுவார்கள்? அதுதானே விதி' என்றேன்.
அரசியலிலும் அப்படித்தான். யாரோ ஒருவர் உங்களை முன்னேறவிடாமல் உங்கள் காலில் தடை ஏற்படுத்துவார்கள். அது இந்த விளையாட்டின் (அரசியலின்) இயல்பு. அந்தத் தடையை உதறித்தள்ளிவிட்டு நீங்கள் முன்னேற முயன்றால், மீண்டும் வேறொருவர் உங்கள் காலில் தடை ஏற்படுத்துவார்.
நீங்கள் கீழே விழுவீர்கள். நான் விழுந்துவிட்டேன் என்றால் யாராவது ஒருவர் என்னைத் தூக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. நானே எழுந்து மீண்டும் விளையாட வேண்டும்.
எனவே, எப்போதும் யாராவது ஒருவர் உங்களுக்கு எதிராக இருப்பார்கள். இதை பெரிய பிரச்னையாகப் பார்க்க வேண்டாம். எல்லோருக்கும் இந்தப் பிரச்னை உண்டு. ராகுல் காந்திக்கே G23 தலைவர்கள் அடங்கியக் குழு சதி செய்தது. செய்து கொண்டிருக்கிறது.
நாட்டுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த காந்தி குடும்பத்தின் மீதே விமர்சனம் செய்யும் அளவுக்கு நம் கட்சியில் சுதந்திரம் உள்ளது. இதனால்தான் 140 ஆண்டுகளாக காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளது. சுதந்திரம் இல்லாவிட்டால், மற்ற கட்சிகள் போலவும், ஜனதா கட்சி போலவும் எப்போதோ முடிந்து மூடப்பட்டிருக்கும்.
நம் கட்சியில் எல்லா விதமான மனநிலைகள் உள்ளவர்களும் இருப்பார்கள். நம் இந்து கடவுள்களை எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை கடவுள்கள் இருக்கின்றன. மூன்று கோடிக்கும் மேலான கடவுள்கள் இருக்கின்றன.
திருமணம் செய்துகொள்ளாதவர்களுக்கு அனுமன், இரண்டு திருமணங்கள் செய்துகொள்பவர்களுக்கு இன்னொரு கடவுள், மது அருந்துபவர்களுக்கு ஒரு கடவுள், எல்லம்மா, போஸம்மா, மகேசம்மா, ஆட்டை பலிகொடுக்க, கோழியைப் பலிகொடுக்க என தனித் தனிக் கடவுள், பருப்பு சாதம் சாப்பிடுபவர்களுக்கு கூட கடவுள் இருக்கிறார்.
ஆம். எல்லா விதமான கடவுள்களும் உள்ளனர். ஒருவர் "வெங்கடேஸ்வர சுவாமியை வணங்குகிறேன்" என்று சொல்கிறார். ஒருவர் "ஆஞ்சநேய சுவாமியை வணங்குகிறேன்" என்று சொல்கிறார்.
இன்னொருவன் "இல்லை இல்லை, நான் அய்யப்ப மாலை அணிவேன்" என்று சொல்கிறான். இன்னொருவன் "இல்லை, நான் சிவ மாலை அணிவேன்" என்கிறார்.
இவையெல்லாம் நாம் பார்க்கிறோம் அல்லவா காங்கிரஸ் கட்சியும் எல்லா விதமான மனநிலைகள் உள்ள, எல்லா விதமான மனிதர்களையும் உள்ளடக்கிக் கொண்டு போகும் கட்சி.
கடவுள்கள் விஷயத்திலேயே நமக்கு ஒருமித்த கருத்தை கொண்டுவர முடியாதபோது, அரசியல் தலைவர்கள் விஷயத்தில், மாவட்டத் தலைவர்கள் விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் நல்ல நோக்கம் இருக்க வேண்டும். நல்ல நோக்கம் இல்லாவிட்டால் இது நமக்குப் பயன் இருக்காது. தயவுசெய்து நேற்று வரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று நான் கேட்க விரும்பவில்லை. பல ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில் சிலர் பிடிக்கும், சிலர் பிடிக்காது.
இவை சிறிய சிறிய விஷயங்கள். இவற்றை நீங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு விட்டுவிட வேண்டும்.
நானும் முதலமைச்சராக ஆகாதபோது எனக்கு பலர் மீது கோபம் இருந்தது. அறையை மூடிக்கொண்டு, அவர்களை அழைத்துக்கொண்டு போய் அடிக்க வேண்டும் என்றுக்கூட யோசித்திருக்கிறேன்.
அடிக்கும் வாய்ப்பு வந்தபோதுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். நம் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்? நம் சக்தியை ஏன் வீணாக்கிக்கொள்ள வேண்டும்? எனவே மக்களுக்குப் பணி செய்தால் போதும். இனி அதுவே நம் இலக்கு என முடிவு செய்தேன்" என உரையாற்றினார்.
இந்த நீண்ட உரையில் தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கடவுள்கள் குறித்துப் பேசிய பகுதி மட்டும் வெட்டி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலானது.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் மத்திய அமைச்சரும் முன்னாள் தெலுங்கானா பா.ஜ.க தலைவருமான பண்டி சஞ்சய் குமார் தன் எக்ஸ் பக்கத்தில், ``முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்துக்கள் மற்றும் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் கூறிய கருத்துகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காங்கிரஸ் எப்போதும் AIMIM-க்கு வளைந்து கொடுக்கும் கட்சியாக இருந்து வருகிறது.
காங்கிரஸ் ஒரு முஸ்லிம் கட்சி என்று ரேவந்த் ரெட்டியே கூறினார். அந்த அறிக்கை மட்டுமே அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் இந்துக்கள் மீது ஆழமான வேரூன்றிய வெறுப்பைக் கொண்டுள்ளது. இதனால்தான் ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலின் போது காங்கிரஸ் அல்லது பி.ஆர்.எஸ் தற்செயலாக வெற்றி பெற்றால்கூட, இந்துக்கள் கண்ணியமாக வாழ முடியாது என்று எச்சரித்தோம்.
முதலமைச்சரின் சமீபத்திய இந்தக் கருத்துகள் பா.ஜ.க சொன்னது சரி என்பதை நிரூபிக்கின்றன. இந்துக்களுக்கும் இந்து கடவுள்களுக்கும் எதிராக காங்கிரஸ் வைத்திருக்கும் வெறுப்பு இப்போது அம்பலமாகியுள்ளது.
Strongly condemn the comments made by Chief Minister Revanth Reddy insulting Hindus and Hindu deities. The Congress has always been a party that bends before the AIMIM. Revanth Reddy himself said Congress is a Muslim party - that statement alone exposes their mindset. Congress… pic.twitter.com/E1yhVrNBy3
— Bandi Sanjay Kumar (@bandisanjay_bjp) December 2, 2025
இந்து சமூகம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் பிரிந்து அவமானங்களைத் தொடர்ந்து சகித்துக்கொள்வீர்களா, அல்லது ஒன்றிணைந்து உங்கள் பலத்தை நிலைநாட்டுவீர்களா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தெலங்கானா பா.ஜ.க மாநிலத் தலைவர் ஜி. ராமச்சந்திர ராவ், முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும். முதல்வர், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
















