Gold Rate: சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
நாடாளுமன்றம்: ``SIR குறித்து பேசலாம், ஆனால் ஒரு நிபந்தனை!'' - விவாதத்தைப் பின்னுக்குத் தள்ளிய பாஜக
மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணி நடந்து வருகிறது.
ஆரம்பம் முதலே இந்தப் பணிக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையமும் - பா.ஜ.க-வும் கூட்டு சேர்ந்து இயக்குகின்றன எனக் குற்றம்சாட்டியிருந்தன.
மேலும், சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகவும், தேர்தல் முறைகேடுக்கு இந்தப் பணி வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தன.
அதே நேரம், கடுமையான பணிச் சுமையால் SIR பணியில் ஈடுபடும் BLO-க்களின் தொடர் தற்கொலைகளும் சர்ச்சையானது.
இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி தொடங்கிய குளிர்காலக் கூட்டத்தொடர் மூன்றாம் நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இரண்டாம் நாளான நேற்று, SIR குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இரண்டாம் நாளும் அவை நடவடிக்கை முடங்கியதால், அனைத்துக் கட்சிகளின் அவைத் தலைவர்களும் சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தனர்.
அப்போது SIR குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்த நிலையில், SIR குறித்து விவாதம் நடத்தப் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு உரையில், "SIR குறித்து விவாதம் நடத்த ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொள்கிறோம். SIR விவாதத்துக்கு முன்பு வந்தே மாதரம் குறித்த விவாதத்தை நடத்த வேண்டும்.
SIR விவாதம் டிசம்பர் 9-ம் தேதியும், வந்தே மாதரம் தொடர்பான விவாதம் 8-ம் தேதியும் நடைபெறும். இரண்டு விவாதங்களுக்கும் தலா 10 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையேற்பட்டால் நேரத்தை நீட்டித்துக்கொள்ளலாம்" என்றார்.

இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "வந்தே மாதரம் நமது சுதந்திரப் போராட்டம் தொடர்பான விஷயம். தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விஷயங்களும் மிகவும் முக்கியமானவை. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அரசு விவாதம் மேற்கொள்ளத் தயாராக உள்ளது.
மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் SIR விவாதத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இன்னும் சொல்வதானால் வந்தே மாதரம் உங்களிடமிருந்து அல்ல, எங்களிடமிருந்து உருவானது" என்று கூறி அரசைக் கடுமையாகச் சாடினார்.
ஆளும் பா.ஜ.க.வின் கலாச்சார நிகழ்ச்சி நிரலின் அங்கமாக இந்தியாவின் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விவாதத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












