TVK: "மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால்..." - திமுக அரசு மீது விமர்...
ஏப்ரலில் வீட்டுவசதி கணக்கெடுப்பு; சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது? - மத்திய அரசு தகவல்
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2026 ஏப்ரல் மாதம் முதல் இரண்டு கட்டங்களாக தொடங்கும் என்று மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2, 2025) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார்.
அதன்படி, முதல் கட்டமான (Phase 1) வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்றும், இரண்டாம் கட்டமான (Phase 2) மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மார்ச் 1, 2027-ம் தேதி குறிப்புத் தேதியாக (Reference Date) இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் லடாக் ஆகிய பனிப்பொழிவு உள்ள பகுதிகள் செப்டம்பர் - அக்டோபர் 2026-ல் கணக்கெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, ராகுல் காந்தி ‘மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கேள்விகளின் வரைவை வெளியிட்டு, பொதுமக்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைப் பெற அரசு திட்டமிட்டுள்ளதா?’ என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராய், "2027-ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கேள்விகள் தொகுப்பை இறுதி செய்யும் பணியில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் இருக்கிறது" என்று பதிலளித்தார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "இந்த ஆண்டு (2025) ஏப்ரல் 30-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் முடிவின்படி, இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும்," என்று உறுதியளித்திருக்கிறார்.
மேலும் ஒரு பதிலில் அவர், "2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். இதில் தரவுகள் அனைத்தும் மொபைல் செயலிகள் மூலம் சேகரிக்கப்படும். அத்துடன், சுயமாகக் கணக்கெடுக்கும் வசதி (Self-enumeration) ஆன்லைன் மூலமாகவும் வழங்கப்படும்," என்றும் தெரிவித்துள்ளார்.















