"கொலை முயற்சி தாக்குதல்; அன்புமணி தான் காரணம்" - பாமக எம்.எல்.ஏ அருள்
தென்காசி: "நான் பாட்டு கேட்கும் ரேடியோவை திருடிட்டாங்க" - ஆட்சியரிடம் 95 வயதான மூதாட்டி புகார்
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி.
இவர் தனிமையில் வசித்து வருவதால் பொழுதை போக்குகின்ற வகையில் ரூபாய் 700 கொடுத்து ரேடியோ ஒன்று வாங்கி அதன் மூலம் எப்எம் வைத்து பாட்டு கேட்டு பொழுதைக் கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டிலிருந்த ரேடியோ பெட்டியைக் கடந்த ஒரு வருடத்திற்கு முன் மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இது குறித்து புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மூதாட்டிக்கு ரேடியோவைக் கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று புளியங்குடி காவல் நிலையத்திற்குச் சென்ற மூதாட்டி ஆதி லட்சுமியை காவலர்கள் கிழவி என்று கூறியதால் ஆத்திரத்துடன் காவலர்களிடம் தகராறு செய்து விட்டு, மூதாட்டி வெளியேறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி தனது ரேடியோ பெட்டியைக் கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனக்கு ரேடியோ பெட்டியில் பாட்டு கேட்காமல் ஏதோ இழந்தது போன்று இருப்பதாகத் தெரிவித்தார் மூதாட்டி.





















