தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 442 ஆ...
தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 442 ஆக உயர்வு
தென்கிழக்கு ஆசியா முழுவதும் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில், இந்தோனேசியாதான் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சென்யார் புயல் பாதிப்பும், அதே நேரத்தில் சக்திவாய்ந்த டிட்வா புயல் இலங்கை - இந்தியாவையும் தாக்கியுள்ளது.
இந்தப் புயல், கனமழை காரணமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (BNPB) அளித்திருக்கும் தகவலின்படி, இந்தோனேசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் உணவு மற்றும் தண்ணீருக்காகத் தவித்து வருகின்றனர்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுமத்ரா தீவின் சில பகுதிகளுக்குச் சென்றடைவதில் பெரும் சிரமம் நீடிக்கிறது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் ஆச்சே ஆகிய மூன்று மாகாணங்களில் 400-க்கும் மேற்பட்ட மக்களைக் காணவில்லை.
வெள்ளம், நிலச்சரிவுகள், சேதமடைந்த சாலைகள், தகவல் தொடர்பு துண்டிப்பு போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
உதவிக்காக ஜகார்த்தாவிலிருந்து இரண்டு போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. சுமத்ரா தீவில் உள்ள மத்திய தபனுலி மற்றும் சிபோல்கா ஆகிய இரண்டு நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போதுவரை நம்பிக்கையற்ற சூழ்நிலையே நிலவுகிறது. சவாலான வானிலை மற்றும் போதிய உபகரணங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளன.














.jpg)
