சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ர...
தேர்வு அறையில் செல்போன்; விடைத்தாளை `ஸ்டேட்டஸ்’ வைத்த மாணவர்! - புதுச்சேரி பல்கலைக்கழக அவலம்
காரைக்கால், மாஹே, அந்தமான்–நிக்கோபார், லக்ஷதீப் என நான்கு கிளைகளுடன் புதுச்சேரி கலாபட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தியாவின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இந்தப் பல்கலைக்கழகம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சமீபத்தில் இதன் காரைக்கால் கிளையின் தலைவராக இருந்த பேராசிரியர் மாதவய்யா தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அங்கு படிக்கும் மாணவி ஒருவர் பேசிய ஆடியோ பதற்றத்தை ஏற்படுத்தியது.
அதையடுத்து புவி அறிவியல் துறை பேராசிரியர் சைலேந்திர சிங், பெண்கள் கல்வி பிரிவு பேராசிரியர் சின்சூன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் விஜய் ஆனந்த் உள்ளிட்டவர்கள்மீது பாலியல் புகார்கள் குவிந்தன.

அதையடுத்து பேராசிரியர் மாதவய்யாவை அந்தமான் கிளைக்கு மாற்றிய பல்கலைக்கழக நிர்வாகம், மற்ற மூன்று பேராசிரியர்களையும் சஸ்பெண்டு செய்தது.
இதற்கிடையில், பாலியல் புகார்களுக்குள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை கொடூரமாக தாக்கிய போலீஸார், மாணவிகள் உள்ளிட்ட 24 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில்தான் இந்த வினாத்தாள் விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு அறைகளில் செல்போன்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விடைத்தாளை செல்போனில் புகைப்படம் எடுத்து தன்னுடைய `ஸ்னாப்சாட்' பக்கத்தில் ஸ்டேட்டஸாகப் போட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரியைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் South Asia Department மாணவர் ஒருவர் தேர்வு அறைக்குள் செல்போனை பயன்படுத்தி தேர்வு முடித்துவிட்டதாக ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

Proctorial Board-இல் `பொங்கு பொங்கு' என்று பொங்கிய டாக்டர் எஸ்.ஐ. ஹுமாயுன் இப்படித்தான் தெற்காசியத் துறை மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துகிறாரா? நேர்மையான முறையில் படித்து வந்து எழுதிய மற்ற மாணவர்களை இது புண்படுத்தும் செயல் அல்லவா?
இப்படிப்பட்ட செயலை செய்த அந்த மாணவரும், அவர் உட்பட்ட அந்த துறையின் துறைத்தலைவரும் பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தெற்காசியத் துறையைப் பார்த்து ஒட்டுமொத்த புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்,” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சூர்யமூர்த்தியிடம் பேசினோம். “மாணவர்களுக்கு கல்வியுடன் வாழ்க்கை நெறிகளை கற்றுக்கொடுக்க வேண்டிய பேராசிரியர்கள், அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி எதிரெதிராக நிற்க வைக்கிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக பேசும் மாணவர்களுக்காக, அனைத்து சமரசங்களையும் செய்து கொள்கிறார்கள் -தேர்வு அறைகள் உட்பட. அப்படித்தான் இந்த மாணவருக்கு தேர்வு அறையில் செல்போன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் அந்த மாணவரைவிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது, தேர்வு அறையில் இருந்த அந்த பேராசிரியர் மீதுதான்,” என்றார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க தெற்காசியத் துறையின் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.ஐ. ஹுமாயுனை தொடர்பு கொண்டபோது, “நானும் அந்த பதிவைப் பார்த்தேன். அந்த மாணவர் என்னுடைய துறையைச் சேர்ந்தவர்தான். ஆனால் அன்றைய தினம் அந்தத் தேர்வு என்னுடைய துறையில் நடக்கவில்லை. அந்த மாணவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னுடைய துறையில் நடக்காத தேர்வுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” என்றார்.

அதையடுத்து பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளரும் மக்கள் தொடர்பு அதிகாரியுமான மகேஷை தொடர்பு கொண்டபோது, “அதுகுறித்து விசாரித்துவிட்டு உங்களை மீண்டும் அழைக்கிறேன்” என்றார்.
மீண்டும் நம் இணைப்பில் வந்த அவர், “இந்த மாணவர் எம்.ஏ. தெற்காசியத் துறையைச் சேர்ந்தவர். கடந்த 26-ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் ‘மல்டிமீடியா டூல்ஸ்’ என்ற தேர்வை முழுமையாக எழுதி முடித்துவிட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பேனாவை அங்கு மறந்துவிட்டார்.
அதை எடுத்துக்கொள்ளத்தான் மீண்டும் தேர்வு அறைக்குச் சென்றிருக்கிறார். அப்போதுதான் தன்னுடைய விடைத்தாளை புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். அதனால் தேர்வு அறைக்குள் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. புதுவைப் பல்கலைக்கழகத்தில் தேர்வு அறைக்குள் செல்போன்களுக்கு அனுமதி இல்லை” என்றார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த விடைத்தாளுக்குக் கீழே வினாத்தாளும் இருப்பதால், பல்கலைக்கழகத்தின் விளக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதேபோல், "தேர்வை முடித்துவிட்டு சென்ற ஒரு மாணவரை மீண்டும் செல்போனுடன் தேர்வு அறைக்குள் அனுமதிப்பதும், அவரது கைக்கு விடைத்தாளை வழங்குவதும் சரியான அணுகுமுறையா எனும் கேள்விக்கு பதிலளித்து, பல்கலைக்கழகம் தன்னுடைய நம்பகத்தன்மையை நிரூபித்துக்கொள்ள வேண்டும்" என்ற கோரிக்கையும் மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.















