BB Tamil 9: "இது ரொம்ப Cheap-ஆ இருக்கு" - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜ...
நம்ப வைத்து கைவிட்ட திமுக; போராட்டமயமாகும் தமிழகம் – வெற்று பாராட்டு விழாக்கள் தேவைதானா முதல்வரே?
கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வெல்லும் பெண்கள், Vibe with MKS என தன்னுடைய ஆட்சிக்கு தானே பாராட்டு விழாக்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி புலகாங்கிதம் அடைந்து ரொம்பவே ஜாலியாக இந்த ஆட்சியின் கடைசி நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். ஆனால், அவரளவுக்கு தமிழகம் மகிழ்ச்சியாக இல்லை. தமிழக மக்களும் மகிழ்ச்சியாக இல்லை என்றே நடக்கும் போராட்டங்களும் அதை முடக்க நினைக்கும் அரசு இயந்திரங்களும் நமக்கு காட்டுகின்றன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என மக்களுக்கு சேவைபுரியும் அத்தனை துறையினரும் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பாக அள்ளிவிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகளும் அமைச்சர்கள். வாக்குறுதிகளை நம்பி நியாயமான கோரிக்கைகளை எழுப்பி தெருவுக்கு வரும் மக்களை குண்டுக்கட்டாக கைது செய்துகொண்டிருக்கிறது காவல்துறை. நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்ட விரக்தியில் பெருஞ்சினத்தோடு மூர்க்கமான அடுத்தக்கட்டப் போராட்டங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது தமிழகம்.
சாலைக்கு சாலை போராட்டங்கள்!
சென்னையில் மட்டும் நேற்று 4 முக்கிய போராட்டங்கள். இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக நான்காவது நாளாக போராடியிருக்கின்றனர். கடற்கரை சாலையில் இறங்கிய போராடியவர்களை பலவந்தமாக கைது செய்தது காவல்துறை. 31.05.2009 அன்று வரை பணியமர்த்தப்பட்டவர்களுக்கு ஒரு சம்பளம். 01.06.2009 முதல் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு ஒரு சம்பளம். ஒரே வேலையை செய்யும் இருதரப்பினருக்கு வெவ்வேறு சம்பளம்.

இரண்டுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை களைந்து சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதுதான் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை. இதை வலியுறுத்திதான் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் வைப்பது புதிய கோரிக்கை அல்ல. நீண்டகால கோரிக்கை. அரசுக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாமல் இல்லை. தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதி புத்தகத்தில் வாக்குறுதி எண் 311 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது சம்பந்தமானது. கொடுத்த வாக்குறுதியை மறந்தே விட்டார்கள். நான்கரை ஆண்டுகள் ஓடிவிட்டது. இதோ இப்போது போராட்டத்தில் இறங்கியிருக்கும் ஆசிரியர்களை புழுதியில் புரட்டியெடுத்து கை கால்களை பேருந்துகளில் அள்ளிப் போட்டு கைது செய்துகொண்டிருக்கின்றனர்.
பகுதி நேர ஆசிரியர்கள் என ஒரு தரப்பினர் போராடிக் கொண்டிருக்கின்றனர். மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி போன்ற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள் இவர்கள். மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். 2012 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களை ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என கருணாநிதியும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். 2016 இல் ஆட்சிக்கு வரவில்லை.

யாரும் கேள்வி கேட்கவில்லை. 2021 தேர்தலுக்கு முன்பும் திமுக, இவர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்கிறது. வாக்குறுதி எண் 181 இல் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதியாக கூறியிருந்தனர். ஆனால், இன்றைக்கு வரைக்கும் சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லை. இவர்களின் போராட்டத்தில் ராகிணி என்ற பெண்ணை சந்தித்தேன். ராகிணியின் கணவர் திருவண்ணாமலையில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிபவர். கடந்த ஜுலையில் பணி நிரந்தரம் வேண்டிய போராட்டத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
கண்ணீர் மல்க தன்னுடைய இரண்டு குழந்தைகளோடு போராட்டத்துக்கு வந்து நிற்கிறார் ராகிணி. 'இந்த வேலையினால எங்க வீட்ல அவ்வளவு பிரச்னை. 12500 ரூபாய்தான் சம்பளம். அதை வச்சுக்கிட்டு ஒரு குடும்பத்தை எப்படி ஓட்ட முடியும் சொல்லுங்க? எதாச்சு நல்ல ப்ரைவேட் ஸ்கூலுக்கு போங்க அல்லது வேற வேலையாச்சு பாருங்கன்னு எவ்வளவோ சொன்னேன், கேட்கல. அரசாங்கம் நல்லது பண்ணுவாங்க. வேலை நிரந்தரமாகும்ணு நம்பிக்கையா சொல்லுவாரு.

அதுக்காக போராட போயிதான் உயிரையும் விட்டாரு. ஆனா, அந்த உயிருக்கு கூட ஒரு மதிப்பு இல்ல. அரசு தரப்புல இருந்து எந்த உதவியும் இல்ல. ரெண்டு பிள்ளைங்களை வச்சுக்கிட்டு நிர்கதியா நிக்குறேன். எங்க குடும்பம் மாதிரி இங்க எத்தனையோ குடும்பம் இருக்கு. அவங்களுக்காகதான் வந்து நிக்குறேன். இருக்குன்னா இருக்குன்னு சொல்லுங்க. இல்லன்னா இல்ல சொல்லுங்க. எல்லாரும் வேற எதாச்சு வேலையையாச்சும் பார்த்துட்டு போயிடுவாங்க' என பேசும் போதே ஆற்றாமையிலும் விரக்தியிலும் அருகிலிருந்த மகளை கட்டிப்பிடித்து அழுகிறார் ராகிணி.
தமிழகத்தில் சமீபமாக பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதையும் அவர்கள் வீதியில் இறங்கி போராடுவதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இருப்போர் பெரும்பாலானோர் பெண்கள்தான். அவர்களை வீதிக்கு வர வைத்தது வாக்குறுதி எண் 285. தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வுதியம் சம்பந்தமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என அத்தனை கருணையாக ஒரு வாக்குறுதியை கொடுத்தது திமுக. தனியாரின் கீழ் வேலை செய்யமாட்டோம்.

மாநகராட்சி பணியில்தான் தொடர்வோம் என்பது தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை மட்டுமல்ல. இப்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தனியார்மயத்தை எதிர்த்து மாநகராட்சிக்கு கடிதமெல்லாம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை கையில் பிடித்துக் கொண்டுதான் கிட்டத்தட்ட 1000 பெண் தூய்மைப் பணியாளர்கள் 150 நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசுத் தரப்பில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. வாய் திறக்க வேண்டிய மேயர் பிரியா தலையாட்டி பொம்மையாக நிற்கிறார். துறைக்கு சம்பந்தமே இல்லாத அறநிலையத்துறை அமைச்சர் இறங்கி அடாவடி காட்டுகிறார். துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் நேரு கோரிக்கைகளை கடிதமாக பெற்றுக் கொண்டதோடு சரி, அந்தப் பக்கம் தலைவைத்தே படுக்கவில்லை.

போராடுவது ஒரு தரப்பு தூய்மைப் பணியாளர்கள். ஆனால், இன்னொரு தரப்பை அழைத்து தேநீர் அருந்தி விருந்து கொடுத்து பொதுமக்களை குழப்பும் வேலையை மட்டுமே முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.
கொரோனா காலத்தில் செவிலியர்களை தேவதூதர்கள் புனிதப்படுத்தியது அரசு. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது தங்களை கடவுள் போல வணங்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. செய்கிற வேலைக்கு முறையான சம்பளமும், பணி நிரந்தரமும் மட்டுமே கேட்டனர். அதுவும் அரசுக்கு தெரியாததெல்லாம் அல்ல. வாக்குறுதி 356 இல் அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஒப்பந்த மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் எனக் கூறியிருந்தது திமுக. அதை முன்வைத்துதான் கடந்த வாரத்தில் சிவானந்தம் சாலையில் செவிலியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து பேருந்தில் வைத்து பல மணி நேரங்கள் சுற்றி கிளாம்பாக்கத்தில் அம்போவென இறக்கிவிட்டனர்.

அவர்கள் அங்கிருந்தே அடுத்தக்கட்ட போராட்டத்தை தொடங்கினர். 'யாருடைய தூண்டுதலின் பேரிலோ தேர்தல் நேரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தேவையின்றி போராடிக் கொண்டிருக்கின்றனர். காலிப்பணியிடங்கள் இருப்பதாக அவர்களே கற்பனை செய்துகொள்கின்றனர். ஒரு வேலைக்கு 20 ஆட்கள் அளவுக்கதிகமாகத்தான் இருக்கிறார்கள்' என செவிலியர்கள் போராடிய நம்முடைய விகடனுக்கே விளக்கம் கொடுத்திருந்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம். அதே மா.சு தான் நான்கே நாட்களில் அந்தர் பல்டி அடுத்து போராட்டத்துக்கு பணிந்து உடனடியாக 1000 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும். எனில், காலிப்பணியிடங்களே இல்லை என அத்தனை சவடாலாக வாய் விட்டது ஏன் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். இன்னும் கிட்டத்தட்ட 7000 செவிலியர்கள் பணி நிரந்தரம் வேண்டி காத்திருக்கிறார்கள் என்பது அமைச்சரின் தகவலுக்காக.
நேற்று சென்னையில் இன்னொரு வகை செவிலியர்களும் போராட்டம் நடத்தியிருந்தனர். சுகாதார கட்டமைப்பை இன்னும் வலுப்படுத்தும் விதமாக கடந்த 2021இல் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த வகையில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 4000 பேர் பணியாற்றி வருகின்றனர். மற்ற மாநிலங்களில் இதே வகையினருக்கு குறைந்தபட்ச சம்பளம் 40000 ரூபாய். ஆனால், தமிழகத்தில் இவர்களுக்கு வழங்கப்படுவதோ 18900 ரூபாய் மட்டுமே. கடுமையான வேலைப்பளு இருக்கும் நிலையில் முறையான ஊதியம் கிடைக்காததால் நேற்று அண்ணாநகரிலுள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தை 1000 க்கும் மேற்பட்ட செவிலிர்கள் முற்றுகையிட்டு அமர்ந்துவிட்டனர்.

'கையை நீட்டி பேசாதீங்க, ப்ளாக்மெயில் பண்றீங்களா. உடனே கலைஞ்சு போயிடுங்க' என மிரட்டும் தொனியில் போராட்டக்குழுவின் பிரதிநிதிகளிடம் எகிறியிருக்கிறார் அண்ணாநகர் DC உதயகுமார். 'மற்ற துறைகளுக்கு மத்திய அரசு நிதி முறையா கொடுக்கலன்னு தமிழக அரசு புகார் சொல்றாங்க. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்தாங்களா இல்லையாங்றதுயும் அரசு தரப்புல யாரும் சொல்றது இல்லை.

ஒருவேளை மத்திய அரசு நிதி கொடுக்கலன்னாலும் அதை போராடி வாங்க வேண்டியது திட்டத்தை நடைமுறைப்படுத்துற மாநில அரசோட கடமை. ஆனா, இவங்க நாங்க தொண்ட தண்ணி வத்த கத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. 'நலன் காக்கும் ஸ்டாலின்' மாதிரியான திட்டங்களையெல்லாம் களத்துல எங்களை வச்சுதான் செய்றாங்க. ஆனா, எங்களுக்கு ஒரு யூனிபார்ம் கூட கிடையாது' என வேதனைப்படுகின்றனர் செவிலியர்களின் பிரதிநிதிகள்.
போராடுகிறவர்களை காவல்துறையினர் நடத்தும் விதமும் பிரச்னைக்குரியதாக இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்கள் அரசு ஊழியர்கள் என பார்க்காமல் கண்ணியக்குறைவான அணுகுமுறையோடே கைது நடவடிக்கைகளை செய்கின்றனர். கைது செய்துவிட்டு அருகிலிருக்கும் மண்டபங்களில் அடைக்காமல், போராட்டக்காரர்களின் மன உறுதியை குலைக்கும் விதத்தில் காவல்துறை செயல்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். கைது செய்பவர்களை பல மணி நேரம் பேருந்துகளில் அடைத்து உணவு, தண்ணீர் கொடுக்காமல் நகரெங்கும் சுற்றி மயக்கமடையும் நிலையில்தான் ஊருக்கு வெளியே எங்காவது இறக்கிவிடுகிறார்கள்.

கைது செய்யப்பட்ட பெண் தூய்மைப் பணியாளர்களை நடு இரவில் நடுத்தெருவில் இறக்கிவிட்ட சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. 'போராடுவது மக்களின் அடிப்படை உரிமை எனக்கூறி மக்களோடு நின்று போராடிய ஒரு கட்சி, இன்று ஆட்சிக்கு வந்தவுடன் போராடும் மக்களின் மன உறுதியை குலைத்து அடுத்த போராட்டத்துக்கு வரவிடாமல் செய்ய நினைப்பது அத்தனை வேதனையாக இருக்கிறது' என புலம்புகின்றனர் பல்வேறு சங்கத்தினர்.
சாதியவாதிகளின் வாக்குகளுக்காக உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகிறார் பாதிக்கப்பட்ட கௌசல்யா. மேலும், ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் இயற்றாமல் ஒரு கமிஷனை அமைத்து அந்த கமிஷனும் மெத்தனமாக செயல்படுவதாகவும் நொந்துக்கொள்கிறார். ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதியெல்லாம் அல்ல. ஸ்டாலின் ஓபன் மைக்கில் ஸ்டேட்மெண்டே கொடுத்தார். அதே ஸ்டாலின் தான் முதல்வரானவுடன் ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் தேவை இல்லை என சட்டமன்றத்திலும் பேசினார். இப்போது அவர்தான் ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்றுவதை பற்றி ஆராய ஒரு குழுவும் அமைத்திருக்கிறார். எதற்கெடுத்தாலும் ஒரு குழு சமாளிப்பு வேலைகளில் இறங்குவது தனி ஸ்டைல். ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் வேண்டி சௌல்யா உட்பட சமூக நீதி மேல் நம்பிக்கையிருக்கும் அமைப்புகள் இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் வேலையில் இருக்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் இந்த கோரிக்கையும் அரசுக்கு தலைவலியை கொடுக்கும்.

கணவனை இழந்து போராட்டக் களத்துக்கு வந்திருக்கும் ராகிணி பெண் இல்லையா? ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா பெண் இல்லையா? சேலைகள் உருவப்பட்டு குண்டுக்கட்டாக கைது செய்யப்படும் தூய்மைப் பணியாளர்கள் பெண்கள் இல்லையா? நியாயமான கோரிக்கைகளை எழுப்பும் செவிலியர்கள் பெண்கள் இல்லையா? இவர்களெல்லாம் வீதியில் நிற்க எப்படி 'வெல்லும் பெண்கள்' என விழா நடத்த மனம் வருகிறது முதல்வரே?
இதெல்லாம் கடந்த சில வாரங்களில் பார்த்த போராட்டங்கள். இவையில்லாமல் எப்போதும் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள் என ஒரு பட்டியலே இருக்கிறது. வாக்குறுதி எண் 309 இல் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்படும் என திமுக கூறியிருந்தது. அந்த வாக்குறுதியைத்தான் கைவிட்டார்களே தவிர புதிய ஓய்வூதியத் திட்டத்தை இன்னும் கைவிடவில்லை. அரசுப்பணியிடங்களில் 3.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறினர். ஜனவரி 6 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ, அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் இறங்குகின்றனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதுதான்.

'லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை இன்னும் நிரப்பாம இருக்காங்க. அதனால இப்ப பணியில இருக்குறவங்க மேல ஏகப்பட்ட பிரஷர். யாருக்குமே 8 மணி நேர வேலை உறுதிப்படுத்தப்படல. கூடுதலா பல மணி நேரம் வேலை செஞ்சிட்டு இருக்கோம்' என புலம்புகின்றனர் அரசு ஊழியர்கள் சங்கத்தினர். வாக்குறுதி எண் 313 இல் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிப்பது மற்றும் காலமுறை ஊதியம் வழங்குவது குறித்து உறுதி அளித்திருக்கின்றனர். அதையும் இன்று வரை செய்யவில்லை. அவர்களும் 6 ஆம் தேதி போராட்டத்துக்கு வருகின்றனர்.
போக்குவரத்துத்துறை, மின்வாரியம் போன்றவற்றை சீரமைத்து நஷ்டத்திலிருந்து மீட்போம் எனக் கூறியிருந்தனர். அதற்கும் வழியே தெரியவில்லை. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை இன்னமும் இருக்கிறது. 'கிட்டத்தட்ட 50000 காலிப்பணியிடங்களை நிரப்பாமல் ஏற்கனவே பணியில் இருக்கும் தொழிலாளர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்றியிருக்கின்றனர். அவுட் சோர்சிங் முறையில் எந்த வரைமுறையும் இல்லாமல் தகுதியற்ற நபர்களை பணிக்கு எடுக்கிறார்கள். 1000 பேருந்துகளுக்கு 800 பராமரிப்பாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், இங்கே கிட்டத்தட்ட 250 பராமரிப்பாளர்கள்தான் இருக்கிறார்கள். விபத்துகள் அதிகம் நடக்க இதுவும் ஒரு முக்கிய காரணம். வாக்குறுதி எண் 152 இல் போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவோம் என்றனர். அதை மறந்தேவிட்டனர். தொழிலாளர்களின் நலனில் அக்கறையே இல்லாமல், அவர்களிடமிருந்து பிடிக்கும் பணத்தை கூட வேறு காரியங்களுக்கு செலவிடுகிறது அரசு' என போக்குவரத்து ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மின்வாரியத்தில் 91% உதவியாளர்கள் பணியும் 65% வயர்மேன்கள் பணியும் காலியாக இருப்பதாக கூறுகின்றனர் மின்வாரிய ஊழியர்கள் சங்கத்தினர். நுகர்வோர் எதாவது பிரச்னை என அழைத்தால் கம்பத்தில் ஏறி சரி செய்து கொடுக்க வேண்டிய வேலை இவர்களுடையது. அந்த காலிப்பணியிடங்களை நிரப்பாமல் ஆப் லைனில் பணிபுரிய வேண்டிய ஹேங்மேன்களை வயரிங் வேலை செய்ய விடுகிறார்கள். இதனால் விபத்துகள் அதிகமாகிறது. ஏகப்பட்ட துணை மின் நிலையங்களை திறக்கிறார்கள். எதற்கும் புதிய பணியாளர்களை நியமிப்பதில்லை. இருக்கிற ஊழியர்களின் தலையிலேயே கூடுதல் பாரத்தை ஏற்றுகிறார்கள். கோடை காலங்களில் தனியார் சந்தையில் வேண்டுமென்றே அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குகிறார்கள். மின் தளவாடங்கள், உபகரணங்கள் வாங்குவதில் அவ்வளவு குளறுபடிகள், அவ்வளவு ஊழல்கள். மத்திய அரசு மின்வாரியங்களை தனியாருக்கு கொடுக்கும் மனநிலையில் இருக்கிறது. அதற்கும் இவர்கள் உறுதியான எதிர்ப்பை பதிவு செய்வார்களா என தெரியவில்லை' என குற்றச்சாட்டுகளை லிஸ்ட் போடுகின்றனர் மின்வாரிய ஊழியர்கள். இவர்களும் ஜனவரியில் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
டாஸ்மாக் வசூல் சாதனை படைத்தாலும் டாஸ்மாக் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு என பல கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஆனால், அமைச்சர் முத்துசாமி அதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை எனக் கூறும் டாஸ்மாக் ஊழியர்கள் விரைவிலேயே கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவிருக்கின்றனர்.

சென்னைக்குள் திடீர் திடீரென மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமிப்புகள் என அரசு இடித்துத் தள்ளுகிறது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சில வாரங்களுக்கு முன்பாக பெரிய போராட்டத்தை நடத்தியிருந்தது. பாதிக்கப்படும் மக்களுக்கு முறையாக பட்டா வழங்கி அவர்களுக்கு அவர்கள் இப்போது இருக்கும் இருப்பிடத்தையே உறுதி செய்ய வேண்டுமென முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார் பெ.சண்முகம். வழக்கம்போல பட்டா வழங்க பரிசீலிக்க ஒரு குழு அமைக்கிறேன் எனக்கூறி அனுப்பி வைத்திருக்கிறார் முதல்வர்.

'அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக தமிழகம் துவண்டு கிடந்தது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் துள்ளிக் குதித்து எழுந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது' என கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசியிருந்தார். துள்ளிக்குதித்து எழும் திராவிட மாடல் தமிழ்நாட்டில் எதற்காக இத்தனை திரளான மக்கள் தெருவில் இறங்கி போராடும் நிலை இருக்கிறது என்பதை முதல்வர் சிந்திக்க வேண்டும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி, உங்களுக்கு வாக்களித்த மக்கள்தான் இப்போது வீதியில் இறங்கியிருக்கின்றனர். 'நம்ப வைத்து கழுத்தறுப்பது'தான் திராவிட மாடலா என மக்கள் குமுறுகின்றனர். நான்கரை ஆண்டுகள் ஓடிவிட்டது. படோபடமான பளிச் பளிச் விளம்பரங்கள் நிறைந்த சுய பாராட்டுப் பத்திர வாசிப்பு நிகழ்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், வேதனையில் நொந்து நிற்கும் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கும் கொஞ்சம் செவி கொடுங்கள்.
மேலும், மக்கள் சார்பில் இன்னொரு கோரிக்கை. 'சொன்னதை செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம்' அதுதான் எங்களின் தாரக மந்திரம். திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ என வெற்று வசனங்களையும் தயவுகூர்ந்து தவிர்க்கப் பாருங்கள்.















