BB Tamil 9: ``வன்மம் வீழ்த்தப்பட்டது" - பார்வதியைக் கலாய்த்த கமருதீன்; ஆத்திரத்த...
மும்பை: பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது நடந்த கொடூரம்; பாதசாரிகள் மீது மோதி 4 பேர் பலி
மும்பையில் பி.இ.எஸ்.டி. (பெஸ்ட்) நிர்வாகம் மின் விநியோகம் மற்றும் பயணிகள் பஸ் போக்குவரத்தை இயக்கி வருகிறது. நேற்று இரவு 10.05 மணியளவில் பெஸ்ட் பஸ் ஒன்று பயணிகள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
606 வழித்தட எண் கொண்ட அந்த ஏ.சி. பஸ் நேற்று இரவு பாண்டூப் ரயில் நிலையத்தில் யூ-டர்ன் எடுப்பதற்காகப் பின்னோக்கி வந்தது. அப்படிப் பின்னோக்கிச் சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள், பயணிகளை இடித்துத் தள்ளியது.
இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர். விபத்து குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்த 14 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தவிர பஸ் இடித்துத் தள்ளியதில் 4 பாதசாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ்சை ஓட்டிய டிரைவர் சந்தோஷ் சாவந்த் ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டு இருந்தார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மது அருந்தி இருந்தாரா என்பது குறித்து அவருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதோடு சரியான முறையில் பயிற்சி எடுத்துக்கொண்டாரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக பெஸ்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்களில் மூன்று பேர் பெண்கள் ஆவர். அதில் மான்சி என்பவர் சயான் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வருகிறார்.
மற்றொருவரான பிரனிதா (31) நடிகை ஆவார். அவருடன் 9 வயது மகள் இருந்தார். அந்தப் பெண்ணும் விபத்தில் காயம் அடைந்துள்ளார்.
இது குறித்து மான்சியின் கணவர் கூறுகையில், ''தினமும் ரயிலில் இருந்து இறங்கி ரயில் நிலையத்திற்கு வெளியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் பிடித்து வீட்டிற்கு வருவது வழக்கம்'' என்று தெரிவித்தார்.
சம்பவம் மனித தவறால் நடந்ததா அல்லது தொழில்நுட்ப பிரச்னையால் நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே போன்று குர்லா ரயில் நிலையத்திற்கு வெளியில் பெஸ்ட் பஸ் பயணிகள் மீது மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இறந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணையில் பஸ்ஸை டிரைவர் பின்னோக்கி எடுத்தபோது நடத்துநர் பகவான் பஸ்ஸுக்குள் இருந்தது தெரிய வந்துள்ளது.




















