``நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்'' - குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த வ...
``நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்'' - குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள்
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றபோது, விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும்.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், "நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுகிறது, கொள்முதல் நிலைய ஊழியர்கள் சில முகவர்களோடு சேர்ந்துகொண்டு ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் லஞ்சம் பெறுகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே 40-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்த நுகர்வோர் வாணிபக்கழக மண்டல மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முறையாக மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் உரிய நேரத்தில் திறக்கவில்லை" என்று குற்றம்சாட்டி வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் சங்க மாநிலத் தலைவர் பார்த்தசாரதி,
"விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை கூறிய தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மதுரை மண்டல மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து முறைகேடு நடைபெறுகிறது. ஒவ்வொரு நெல் மூட்டைகளுக்கும் லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். அவர்களைக் கண்டிக்கிறோம்" என்றார்.





















