தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி ...
பணிந்த அரசு; தூய்மைப் பணியாளர்களை சந்திக்கும் அமைச்சர் சேகர் பாபு - வெற்றியை நோக்கி போராட்டம்?
தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இன்றோடு நிறைவடையும் நிலையை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு இன்று தூய்மைப் பணியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேசவிருக்கிறார்.

சென்னையில் மாநகராட்சி சார்பில் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை பேணும் பணிகளை தனியாருக்கு கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 1900 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
ரிப்பன் பில்டிங் முன்பாக தொடங்கி அவர்களின் போரட்டம் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தது. மெரினா கடல், கலைஞர் சமாதி, உழைப்பாளர் சிலை, ஆட்சியர் அலுவலகம், அண்ணா அறிவாலயம், கூவம் நதி என பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி கைதாகினர். இன்னொரு பக்கம் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை அம்பத்தூரில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தையும் முன்னெடுத்தனர். தொடர்ந்து போராடியும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்களோ அதிகாரிகளோ அழைத்து பேசாமல் இருந்ததால், போராட்டம் தீவிரமடைந்து கொண்டே சென்றது.

இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர் பாபு தரப்பினர் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை தொடர்புகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்துதான் இன்று அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்தை அமைச்சர் சேகர் பாபு முடித்து வைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 150 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் பலனாக கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் தூய்மைப் பணியாளர்கள் அம்பத்தூரில் கூட தொடங்கியிருக்கின்றனர்.















